
2021 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் ஓப்பன் ஏ.ஐ. என்ற வலைதளத்தில் GPT 3.0 என்று ஒன்றைப் பற்றி படித்தபோது, கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது; இது தான் வருங்காலம். அப்போதைக்கு அந்த வலைதளத்தில், குட்டியாக ஒரு டப்பாவில் “ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் சென்னை வெப்பத்தைப் பற்றி எழுதவும்” என்றால், மடமடவென்று எதையோ கிறுக்கித் தள்ளிவிடும் அளவுக்குத்தான் இருந்தது ஜெனரேடிவ் ஏ.ஐ. அப்போதே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு நவம்பர் 2022ல் GPT 3.5 வெளியாகி, ஊரே களேபரமாகி, ஷேக்ஸ்பியர் வெட்கப்படும் அளவுக்கு எல்லோரும் ஆங்கிலத்தில் புலவர்களாகி, ஜனத்துக்கெல்லாம் வேலை காலியாகிவிடும் என்று பயந்து, என்விடியாவின் பங்குகள் எல்லாம் பறந்து, உலகத்தின் மிக முக்கியமான நிறுவனம் என்றாகியும், இன்னமும் பாதி பேர் “ஜெனரேடிவ் ஏ.ஐ.ன்னது ஜஸ்ட் புருடா” என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டரை வருடங்களாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இதில் வேலை செய்பவன் என்கிற முறையில், ஏதாவது ஜல்லி அடிக்கலாம் என்று தோன்றியதால், ஒவ்வொரு வாரமும் இந்த ஏ.ஐ.யைப் பற்றி கொஞ்சம் எளிமையாக எழுதுகிறேன். ஜல்லி என்று சொன்ன பின், இது சரி, இது தப்பு என்றெல்லாம் சண்டைக்கு வராதீர்கள். இந்த வாரம், ஜெனரேடிவ் ஏ.ஐ. தோன்றிய கணம் – ஆராய்ச்சியாளர்கள் கணினிக்கு உலகத்தைப் பற்றி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். “இதோ பார், இந்தப் படத்தில் இருப்பது நாய்க்குட்டி, இதோ இதுவும் ஒரு நாய்க்குட்டி, இதுவும் கூட.” இப்படியே பல லட்ச நாய்க்குட்டிப் படங்களைப் பார்த்துப் புரிந்து கொண்ட பின்னர், அந்த கணினியிடம், “இத்தனை நாய்க்குட்டிகளைப் பார்த்தாய் அல்லவா, எங்கே நீயே ஒரு நாய்க்குட்டியை வரைந்து காட்டு பார்க்கலாம்.” அப்போது அந்தக் கணினி மனிதர்களைப் போலவே தட்டுத் தடுமாறி ஒரு நாய்க்குட்டியை வரைந்தது. அடுத்தது பூனைக் குட்டி, பிறகு மனிதர்கள், பிறகு மனிதர்கள் எழுதிய புத்தகங்கள் என்று, படிப்படியாக உலகத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தது.
இப்படி ஒன்றைப் படித்தோ பார்த்தோ, கணினியின் அறிவு வளர ஆரம்பிக்க, அதை செயற்கை நுண்ணறிவு அல்லது A.I. என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எப்போது தனக்கு புரிந்த விஷயங்களை வைத்துக் கொண்டு இல்லாத ஒன்றைப் புதிதாக படைக்க ஆரம்பித்ததோ, அதை GenAI அல்லது generative AI என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகில் ஒன்றிரண்டு போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கோ எதற்காகவோ ராணுவங்கள் மோதிக் கொண்டிருக்கின்றன. யாரோ யாரையோ துப்பாக்கியாலோ பீரங்கியாலோ சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் நாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், மற்ற எல்லோரும் காரிலும் விமானத்திலும் பயணித்துக் கொண்டும், ஸொமேட்டோவில் பிரியாணி ஆர்டர் செய்து கொண்டும், வருடத்திற்கு ஒரு நாள் veterans day என்ற ஒரு நாளில் ஒரு அரை நிமிட உச்சு கொட்டலுக்குப் பின் மறந்து போய்விடுகிறோம்.
என்னதான் ராணுவ வீரர்களை நாம் மறந்தாலும், அவர்களின் ராணுவ சொற்றொடர்கள் நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. யோசித்துப் பார்த்தால் ஒரு பத்து இருபது வார்த்தைகளாவது உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது.
Mission, Backup, Deploy, Boots on the ground, Take point, Fallback, On the radar, AWOL (Absent Without Leave), Target, Call the shots, Blow up, In the trenches, Strike, Recon, Chain of command, Ghosting, Red flag, Keep tabs on, Scope out, Intel, Under the radar, Signal, Triggered, Track record, Decoding என்று பலப்பல.
இவை ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது வாழ்விற்கும் சாவிற்கும் இருக்கிற தத்தளிக்கிற ஷணநேரத்தில். நாம் சாஃப்ட்வேர் ரிலீஸுக்கும், ஆபிஸ் குமாஸ்தா வேலைக்கும், சோஷியல் மீடியாவிலும் இவ்வார்த்தைகளின் அவசரம் புரியாமல் பயன்படுத்துகிறோம். அதற்கு ஹாலிவுட்டும் ஒரு காரணம். போரை உண்மையாய் காண்பிக்கிறேன் என்ற பேர்வழியில் அவைகளை கவர்ச்சிப் பிரச்சாரமாக்கியவர்களும் அவர்கள்தான்.
ஆனால் சமீபத்தில் வெளியான Warfare ஒரு போர்ப்படம் அல்ல. ஒரு போரின் ஒரு மணி நேரத்தை அப்படியே ரியல்-டைமில் படம்பிடித்து, வழக்கமான ஹாலிவுட் கவர்ச்சியில்லாமல், மூச்சைப் பிடித்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் Alex Garland. கடந்த வருடம் Civil War என்ற dystopian கற்பனைப் படத்தால் நம்மை அதிரவைத்த இயக்குநரிடமிருந்து, இம்முறை ஒரு நிஜ வாழ்விலிருந்து எடுக்கப்பட்ட கதை.
இராக்கின் ரமாதி நகரத்தில், 2006ல் நடந்த உண்மைச் சம்பவம். அமெரிக்க கடற்படையின் ஒரு பிளாட்டூன், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஒரு வீட்டை ஆக்கிரமிக்கின்றனர். அங்கிருந்து துப்பாக்கிகளின் மூலம் குறி பார்த்துக் கொண்டிருக்கும்போது, உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் சுற்றி வளைக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து நடப்பது தொடக்கமும் முடிவும் கொண்ட கதை அல்ல, மாறாக குழப்பம், பயம் கலந்த ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம். அந்த வீடு நவீன போரின் ஒரு சிறு உலகமாக மாறுகிறது. புண்பட்ட வீரர்கள், பயந்து போன பொதுமக்கள், சிதைந்த நம்பிக்கைகள், துண்டு துண்டாக உருவாகும் சகோதரத்துவம். சிலிர்ப்பான உடனடித்தன்மையுடன் படமாக்கப்பட்ட இந்தப் படம், முன்னோக்கியோ பின்னோக்கியோ செல்லாமல், வெறுமனே வாழ்கிறது. பின்னணி இசையில்லாமல் இந்த களேபரத்தில் நம்மை மூழ்கவைக்கிறது. இந்த மூழ்குதலின் மூலம், நாம் வன்முறையை மறந்து உணர்ச்சியற்றவர்களாக மாறிவிட்டோம் என்று புரியவைக்கிறது. இரத்தத்திலும் இராணுவ ஒழுக்கத்திலும் பிறந்த வார்த்தைகளை எவ்வளவு இலகுவாகப் பயன்படுத்துகிறோம் என்பதை நினைவூட்டுகிறது. Warfare போரை வெறுமனே சித்தரிக்கவில்லை, அதை உணரவும், கேள்வி கேட்கவும், இறுதியாக அதை மறக்க கற்றுக்கொள்ளவும் நம்மை அழைக்கிறது.
கிட்டத்தட்ட 4 வருடங்களுக்குப் பின் மீண்டும் இன்ன பிற தொடர்கிறது. வாரம் வாரம் எழுதலாம் என்ற எண்ணம். வாத்தியாரின் பிறந்தநாளில் ஆரம்பித்ததால் நடக்கும் என்று நம்புவோம்.
Leave a comment