
மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். எதோ புதுப் பட பாடலில் வரும் கீச் கீச் சத்தமாகத்தான் இருக்க வேண்டும். காரின் பின்பக்க ஸ்பீக்கரிலிருந்து வந்ததால் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். மழைத் தூறலாயிருந்தது. ஏற்கனவே ஹைவே இல்லாத வழியாக ஜீபிஎஸ்ஸில் தேர்ந்தெடுத்திருந்ததால், வீட்டிலிருந்து ட்யூவால் சென்று, நாவல்டி வழியாக கார்னேஷனை கடந்து ஸ்னோக்குவாமி நோக்கி பிரயாணம். கிட்டத்தட்ட சென்னையிலிருந்து திருப்பதி செல்ல கும்மிடிப்பூண்டி கடந்து, காலஹஸ்தி போய் திருப்பிக்கொண்டு திருப்பதி வருவது போலத்தான். வழியெல்லாம் பாசி படர்ந்த மரங்கள், வளைந்து செல்லும் உள்ளூர்த் தெருக்கள், பனி மறைத்துக் கொண்டிருக்கும் மலைகள். பாட்டை மாற்றி ராஜாவுக்கு கொண்டு வந்தேன் – “மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே, உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே…”
நண்பர் ஷங்கர் பிரதாப் (சமீபத்தில் முதல் கதை எழுதியிருக்கிறார், வாழ்த்துக்கள்!) இலக்கிய மதியமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அருகாமையில் இடம் கிடைக்காததால் ஸ்னோக்குவாமி நூலகத்தில் நடத்துவதாய் ஏற்பாடு.
இலக்கிய கூட்டமென்றாலே எனக்கு வயிறு இளகிக் கொள்ளும் என்பதால் அவைகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் ஷங்கருடன் பேசியபோது, “இலக்கிய கூட்டமென்றால் இறுக்கமாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை; ஆனாலும் கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மட்டும் போதும்” என்றதால், போகலாம் என்று நினைத்திருந்தேன்.
சென்னையில் இருந்த போது பல்வேறு இலக்கிய கூட்டங்களுக்கு சென்று நொந்து போயிருந்ததை சொன்னேன். “கொஞ்சம் மாறுதலாய் இருக்கும், வந்து பாருங்கள். இம்மாத தலைப்பு அசோகமித்திரன். அந்த தலைப்பில் ஏதாவது பேச முடியுமா?” என்றார்.
“அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன். இவர் செக்கந்தராபாத்தில் பிறந்தார். இவர் இதுவரை 9 நாவல்களும்…” இப்படி எல்லாம் “My name is Kaveri, like the river Kaveri…” போல கூட்டத்திற்கு வருகிறவர்களை எட்டாம் வகுப்பு மாணவர்கள் போல நடத்த எனக்கு இஷ்டமில்லை. முதலில் அசோகமித்திரன் எழுதிய ஒரே ஒரு வாக்கியத்தையோ ஒரு பத்தியையோ கொண்டு நிறுவ முடியுமா என்று நினைத்தேன். அவரெழுதிய கரைந்த நிழல்களையும், தண்ணீரையும் தேடிப்பார்த்தேன். சரியான பத்தி அமையாததினால், ஒரு கூட்டு வாசிப்பு போல செய்யலாம் என்று நினைத்திருந்தேன். அதற்காக தேர்ந்தெடுத்திருந்தது, அரை நூற்றாண்டுக்கு முன், 1969-ல் அசோகமித்திரன் எழுதியிருந்த சிறுகதை – பிரயாணம். இது அந்த வருடம் சுதேசமித்ரனின் தீபாவளி மலரில் இடம் பெற்றது. பிறகு, அவரது முதல் சிறுகதை தொகுப்பான “வாழ்விலே ஒரு முறை” (காலச்சுவடு) தொகுக்கப்பட்டது.
அசோகமித்திரன் எழுதிய அனைத்தையும் (கிட்டத்தட்ட) படித்திருந்தாலும், பிரயாணம் சிறுகதை தான் அவரின் உச்சம் என்பது என் தனி அபிப்பிராயம். இத்தகைய உச்சக் கதையிலும் கூட முதல் டிராஃப்ட் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தும் கூட அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் தான். அவர் எழுத்தின் பிரதான அம்சமே எளிமைதான். பிரயாணம் மேலளவில் மிக எளிமையாகத் தெரிந்தாலும், அதனுள் ஒளிந்திருக்கும் பல பரிமாணங்கள் எனக்கு இன்னமும் பிடிபடவில்லை. அதனால்தான், அக்கதையை எப்பொழுதுமே என்னால் விளக்க முடிந்ததில்லை.
ஒரு சீடன், உடம்புக்கு முடியாத ஒரு யோகி குரு, இமய மலைச்சாரல், விட்டால் கடித்து தின்றுவிடக்கூடிய ஓநாய்கள், கொஞ்சம் அமானுஷ்யம், கொஞ்சம் ஆக்ஷன், திடுக்கிடும் திருப்பம் – டிவிட்டர் வேகத்தில் சொல்லிவிடக்கூடிய கதையாயிருந்தாலும், அது தான் கதையா?
எடுத்துப் போயிருந்த ஐபேட்டிலிருந்து அக்கதையை முழுவதுமாக சத்தமாக படித்து முடிக்க அரைமணி நேரமானது. வந்திருந்த நால்வருமே இக்கதையை முன்னமே படித்திருந்தாலும், நான் படிக்க, ஃபோன் பார்க்காமல் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். படித்து முடித்தவுடன், “இதை நான் படிக்கும் போது சட்டென உங்களுக்குச் தோன்றிய எண்ணங்கள் என்ன?” என கேட்டேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பதிலளித்தார்கள்.
ஜெயமோகன், இரண்டொரு வருடங்களுக்கு முன்பு சியாட்டல் வந்த போது இதே பிரயாணம் கதையை அலசியதாக ஷங்கரும், மதனும், ஶ்ரீனியும் சொன்னார்கள். மதன் – ஜெயமோகன் சொன்ன மூன்று விதமான பார்வைகளை பற்றிச் சொன்னார்.

இக்கதையை பற்றி என் எண்ணங்கள் என்ன என்று சொல்வதற்கு பதிலாக, 2009-ல் அசோகமித்திரனை சந்தித்த போது, அவரிடமே இக்கதை பற்றியும் இன்று நாவலில் வந்த ஒரு பகுதியை பற்றியும் விவாதித்ததை சொன்னேன்.
“அந்தக் கதை எழுதி ஒரு பதினேழு பதினெட்டு வருஷங்களுக்கு பிறகு, ஏன் அந்தக் கதையை எழுதினேன்னு நானே ஒரு கட்டுரை எழுதிப் பார்த்தேன். அப்போ தான் எனக்கே கூட எதை நினைச்சு எழுதினேன்னு புரிஞ்சது. அதை படிச்சிருக்கியா பா?” என்றார்.
இல்லை என்று தலையாட்டினேன்.
“அந்த கதை எழுதின சூட்டோடு அதை மறந்தே போயிட்டேன். அப்பப்போ யாராவது சிலாகிச்சு சொல்லும் போது அதை திருப்பி படிக்கணும்னு தோணும். கொஞ்ச வருஷம் கழிச்சு அத படிச்சப்ப தான் எனக்கே இது நானா எழதினேன்னு தோணிச்சு” என்றார்.
அன்றே தேடிப்போய் அந்த கட்டுரை வெளியான என் பயணம் (நற்றிணை பதிப்பகம்) என்ற அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தேன். முக்கியமான பத்தி இது தான் –
இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிய கதையாக பிரயாணம் அமைந்தது. நான் திட்டமிட்டதின் பயனாக என்று கூற முடியாது. ஒரு பாத்திரம் – உறைபனி சூழந்த மலைகளில் தனியாக வாழும் ஒரு மனிதன் – இது தான் என் திட்டமும் துவக்கமும். பிற பின்னல்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் யாவும் கதையை எழுதும் போது மனம் எனும் புதை மணலில் இருந்து வெளிக்கிளம்பிக் கதையில் பொருத்திக் கொண்டவை.
இக்கதையை எழுதத் தூண்டியவை அன்று என் முன் என் கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தன. ஆனால் நான் தாகூர் அனுபவத்தைப் படித்ததன் காரணமாகத்தான் பிரயாணம் எழுதினேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று தெளிவாகத் தெரிகிறது, அது ஒன்று தான் காரணம் என்று சொல்வதற்கு இல்லையென்று.
– அசோகமித்திரன், என் பயணம், 1988.
இப்படிப் போகும் அந்தக் கட்டுரை ஒரு அரிதான meta commentary. எழுத்தாளன் தான் எழுதிய கதையை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து அதன் ரிஷிமூலம் நதிமூலத்தை தேடி தனக்குத் தெரிந்ததை தாண்டி இன்னொன்றை கண்டறியும் தருணம். உங்களுக்கு பிரயாணம் பிடித்த கதையாயிருந்தால், அந்தக் கட்டுரை கிடைக்குமானால், படித்துப் பாருங்கள்.
இந்த meta commentary கட்டுரையையும் அன்று முழுவதுமாக உரக்க வாசித்தேன். அன்று வந்தவர்களுக்கு, அசோகமித்திரன் மூலம் நான் முன்வைக்க நினைத்த கேள்வி இதுதான் – “ஒரு எழுத்தாளன் எழுத நினைத்த உட்பொருள் முக்கியமா, அல்லது அதை மற்றொரு நாள் வாசிக்கக்கூடிய வாசகனுக்கு தன் மனதில் புரிவது தான் அந்த படைப்பின் பயனா?”
வேறு மாதிரி சொல்வதானால் –
“The birth of the reader must be at the cost of the death of the author.”
இது ரொலான் பார்த் (Roland Barthes) என்ற இலக்கிய ஆய்வாளரின் கருத்து. எழுத்தாளரின் நோக்கம் இறுதி உண்மை அல்ல. வாசிப்பவரின் அனுபவமும் அதில் முக்கியமானது. எனவே, வாசிப்பவர் ‘பிறக்க’ வேண்டும் என்றால், எழுத்தாளரின் கருத்து மட்டும் முக்கியம் என்று நினைக்கும் மனநிலை ‘இறக்க’ வேண்டும். இது எழுத்தின் சுதந்திரத்தையும் வாசிப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் ஒரு எண்ணமே.
டீ, பிஸ்கெட், இலக்கிய கிசுகிசு என வழக்கமான இலக்கிய கூட்ட கடமைகளுக்குப் பின் கிளம்பினேன். கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் சௌகர்யங்களும், கிழக்கு திசையில் இருந்து புதுத்துணியும் லாட்டரி லாபமும் கிடைக்கட்டும்.
கார் ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் போது, பனி போர்த்திய மலைகளின் இடையே இருந்து சூரிய ஒளி கண்ணைக் கூசியது. அசோகமித்திரனை நினைத்துக் கொண்டேன்.
Leave a comment