
இந்த வருடத்தில் நடக்கப்போகும் ஒரே ஒரு முக்கிய செய்தியை இவ்வருடத்தின் தலைப்புச் செய்தி என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கத் தேவையேயில்லை. அது போன வருடத்தின் தலைப்புச் செய்தியாகத் தான் இருக்கப் போகிறது. போன வருடத்தின் தலைப்புச் செய்தி தான் என்ன?
2023ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மனித வரலாற்றில் மிகவும் உஷ்ணமான ஆண்டு. (படிக்க)
“The extraordinary global November temperatures, including two days warmer than 2ºC above preindustrial, mean that 2023 is the warmest year in recorded history.”
– EU Coppernicus Team
அதெப்படி உலக உஷ்ணத்தைச் சரியாகக் கணக்குச் செய்கிறார்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை. கள்ளக்குறிச்சியிலும், மஞ்சக்குடியிலும், சுடானிலும், அர்ஜென்டினாவில் வைக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான தெர்மாமீட்டர்களும், பூ மலரும் அட்டவணைகளும், விலங்குகளின் இனப்பெருக்க பருவங்களும், ice-cores எனப்படும் பனிக்கட்டி ஆய்வுகளும் பொய் சொல்வதில்லை.
இந்த 2024 போன வருடத்தையும் பின் தள்ளக்கூடும் என்று நம்புகிறார்கள். பருவநிலை மாற்றம் பற்றி அறியாமல், “ப்ரோ, அயலான்ல அந்த ஏலியன் என்னமா தமிழ் பேசுது…” என்று சோ.மீயில் (அதாவது சோஷியல் மீடியாவில்) நியுஸ் வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கான ஒரு குட்டி பின்னோட்டம். புகைபிடித்தல் உடம்புக்குத் தீங்கானது போன்ற மறுக்க முடியாத climate change உண்மைகள் என்னென்ன?
- பூமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வெப்பநிலை சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது சூரியனின் தவறு மட்டுமல்ல – கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அழைக்கப்படாத விருந்தாளிகள் போல வெப்பத்தைப் பிடித்து வைத்திருக்கின்றன.
- துருவ பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருக்கின்றன. இது கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 8 அங்குலம் உயர வழிவகுத்தது. கடற்கரைகள் எதிர்பாராத அளவுக்கு நிலத்தை ஆக்கிரமிக்க, பனிதுருவ கரடிகள் ரியல் நமது எஸ்டேட் பட்டியல்களைப் எட்டிப்பார்க்கின்றன.
- வானிலையின் மனநிலை மாற்றங்கள் தீவிரமடைந்துள்ளன, சூறாவளி வேகமாகச் சுழல்கிறது, மழை ஒரேயடியாகக் கொட்டித் தீர்க்கின்றது, உஷ்ண அலைகள் பல வாரங்கள் நீடிக்கின்றன.
- கார்பன் டை ஆக்சைடு அளவுகள் குறைந்தபட்சம் 800,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிகமாக உள்ளது, தற்போது ஒரு மில்லியனுக்கு 410 பாகங்களுக்கு மேல் உள்ளது. இது வளிமண்டலத்தில் ஒரு கிரீன்ஹவுஸ் வாயுக்களின் பார்ட்டி போலத் தோன்றலாம், எல்லா விஷவாயுக்களும் அழைப்பு உண்டு.
- பத்து லட்சத்திற்கும் அதிகமான மிருக இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. காடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்க , பல விலங்குகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து, பருவநிலை மாற்றத்தை விஞ்ச தங்கள் போஸ்டல் பின்கோடுகளை மாற்றி நகரத்தில் தஞ்சம் புக ஆரம்பித்திருக்கின்றன.
நமக்குள் இருக்கும் ஆதிகால குகை மனிதனும் வருங்கால குழந்தைகளும் ஒரே நேரத்தில் நம்மை நோக்கிக் காறித் துப்பும் அளவிற்கு உலகை இப்படி தீப்பிழம்பாக மாற்றிய நமக்கு ஷொட்டுக்கள் பல. Well done!
Leave a comment