
ஆறுமாதங்களுக்கு முன் ஆன்லைனில் காலச்சுவடு புத்தகங்கள் சிலவற்றை வாங்கியிருந்தேன். சிறப்பாக அட்டை பேப்பர் கட்டி சென்னைக்கு அனுப்பியிருந்தார்கள். அம்மா அவற்றை மர பீரோவில் பூட்டி வைத்திருந்தாள்.

சென்னைக்கு வந்த மறுநாள் காலையில் காபி குடித்தபடி தினத்தந்தியில் போதைப்பவுடர் பறிமுதல், குஷ்புவின் ஆஸ்பத்திரி அனுமதி, பெங்களூரு ரேஸ் டிப்ஸ், போலி நோட்டுகள் பரபரப்பு என்ற பல முக்கிய செய்திகளை தொடர்ந்து, கன்னித்தீவு 22431ம் (60 ஆண்டுகளாக) பகுதியை படித்தவுடன் வரி விளம்பரங்களை துழாவினால் சில முத்துக்கள் அகப்பட்டன – அருள்வாக்குகளுக்கு அணுகவும் போன்ற வரி விளம்பரங்கள் தமிழ்நாட்டு சுவாரசியங்களில் ஒன்று.
8th, 10th, +2, B.Com, B.E, படித்த அழகான வசதியான பெண்களுக்கு வரன் தேவை. ஜாதி தடையில்லை.
தினத்தந்தி
இந்த விளம்பரத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா, ஏன் ஒரே விளம்பரம் என்ற கேள்வி தோன்றியது, பதில் சொல்ல ஆளில்லை. விட்டுவிட்டேன். ஜாதி மதம் தடையில்லை என்ற தொடர் கிட்டத்தட்ட எல்லா மணமகள்/மணமகன் தேவை விளம்பரங்களில் வருவது தமிழ்நாட்டில் சென்ற இருபது வருடங்களில் நடந்த மாற்றம். நமக்கு நாமே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் ரஷ்ய இலக்கியங்களை தமிழில் படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால், இம்முறை வாங்கிய புத்தகங்களில் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் தான் அதிகம். இன்னமும் தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் கிடைக்கவில்லை. என்னுடைய சு.ராமசாமியின் ஜே ஜே: சில குறிப்புகள் பிரதி தொலைந்து போனது அபாக்கியமே, இம்முறை மீண்டும் ஒரு பிரதி வாங்கியாகிவிட்டது.
சன் குடும்ப விருதுகள் டீவியில் நடைபெறும் இந்த ஞாயிறு காலையில் முதலில் படிக்க வேண்டும் என நினைப்பது ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கின் இதிகாசம். தமிழ் மொழிபெயர்ப்பு – யூமா வாசுகி. படித்துமுடித்தவுடன் சொல்கிறேன்.
Leave a comment