இன்ன பிற – இயந்திரம் இகழ்

ஏகப்பட்ட விமர்சனங்களும் குடலாபரேஷன்களும் பண்ணப்பட் எந்திர இசையை கேட்க முடிந்தது. புதிய மனிதனை பூமிக்கு கொண்டு வரும் பாடலில் ஆரம்பித்து இயந்திரப் புகழ் கொஞ்சநஞ்சமில்லை. காதல் அணுக்களில் ரஹ்மான் தெரிகிறார், விஜய் பிரகாஷ் மின்னுகிறார். செந்தேனில் ஒஸ்ஸாபியை பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டதனால் மன்னித்து விடலாம். மற்றபடி காலமாற்றத்தில் மறக்கப்படும் பாடல்கள். ஆடியோகிராபர் ஹெச். ஸ்ரீதரின் மறைவிற்குப் பின் ரஹ்மான் பாடல்களின் மிக்ஸிங் குளறுபடிகள் தெரிகின்றன. அல்லது எனக்கு வயதாகி விட்டது. ஏசிடிசி, மெட்டாலிகா இரைச்சல் இசையை விழந்து விழுந்து கேட்டவனக்கு இந்த திஸ் திங் தட் திங், திஸ் திங் தட் திங்(சேர்த்துச் சொல்லிப் பழகலாம்) ஓசைகள் பிடிக்காமல் போன காரணம் என்னவோ?

ஆக எந்திரன் டிக்கெட் வாங்க பர்ஸ் பணத்தை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய குடிமகனுக்கு வாழ்த்துக்கள். உலகத்திலேயே சியாட்டலில் தான் முதல் ஷோ வருகிறது என்கிற சிவாஜி உடான்ஸை மீண்டும் விட்டுக் கொண்டிருக்கிறார் எதோ ஒரு மகானுபாவர். லைன் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் சந்தடி எல்லாம் அடங்கியவுடன் எதிர்பார்ப்பில்லாமல் போய் பார்த்துவிட்டு எழுதுகிறேன். சுஜாதாவின் கடைசிப் படம் விஞ்ஞானக் கதையாய் இருந்து விட்டதில் ஏதோ செய்தி இருக்கிறது.

வருங்காலத்தில் எல்லோரும் பதினைந்து நிமிடத்திற்கு பிரபலமாய் இருப்பார்கள் என்று சொன்ன வரைகலைஞர் அண்டி வார்ஹோலின் வாய்க்கு சர்க்கரை போடலாம். அல்லது புண்ணாக்கு. மீடியாவில் அதுவும் இந்திய மீடியாவில் எல்லோரும் பதினைந்து நிமிடங்கள் பிரபலமாகிறார்கள். ப.நி.பிரபலங்கள் 15 நிமிடங்களோடு விட்டால் பரவாயில்லை. ஒவ்வொரு சானலிலும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆவாது. பாகிஸ்தான்ல வெள்ளம் பற்றி ஹெட்(வெட்)லைன் தெரியுமா என்று கேட்டால், ”சாயங்காலம் ரிசப்ஷனுக்கு ரஜினி வீட்டில அக்காரவுடைசல் போட்டாங்களாம்” என்று சொல்லுகிறது தமிழ் ஜனம்.

ஜெயமோகனின் டார்த்தீனியம் குறுநாவல் படித்து முடித்தேன். ரொம்பவே கருப்பாய் இருக்கும் இந்த மேஜிகல் ரியலிச கதையை கதை தெரியாமல் படித்தால் ரசிக்கலாம். தெரிந்துவிட்டிருந்தபடியால் இயல்பான அதன் முதல் பகுதியை ரசிக்கமுடியவில்லை. மேஜிகல் ரியலிச கதைகளில் எழுத்தாளர் சொல்கிற புருடாக்களை நம்புவது முக்கியம். இந்தக் கதையில் டார்த்தீனியத்தின் அபார வளர்ச்சியை நம்பினால் மட்டும் அடுத்த பக்கத்தை திருப்பவும். அவரின் அடுத்த புத்தகமான அசோகவனம் தலையனை சைஸில் கூடிய விரைவில் வரலாம் என்றும் கேள்விப்பட்டேன். உங்கள் காப்பிக்கு முந்துங்கள்.

இந்த வார கவிதை சிச்சுவேஷன்(இ.வா.கி.ச) –

நேற்றிரவு 1:27க்கு நண்பரை அனுப்பிவிட்டு கதவை மூடும் போது தான் அதை பார்த்தேன். மழை பெய்து கொண்டிருக்கும் நள்ளிரவில் பளிர் மஞ்சள் நிறத்தில் வானத்தை பார்த்தபடி திறந்திருந்தது என் வீட்டின் முதல் பூ. இந்தச் சிச்சுவேஷனுக்கு அரிமா அரிமா டைப் அல்லாமல் தளை தட்டாத வெண்பா, வெண்பாம், லிமரிக் அல்லது ஹைக்கூ எழுதி கவிஞர்கள் அனுப்பினால் இங்கே போடுகிறேன்.

அதைவிடுத்து நான் எழுதிய வரி வார்த்தைகளை அப்படியே
ஒன்றன்
பின்
ஒன்றாக
கீழே
எழுதி
அனுப்புவதாய்
இருப்பதற்கு பதிலாக ஆத்மநாம் சொன்னது போல,”எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்”.