ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் நிறைய எழுத வேண்டும் என்பது போல் இந்த முறை நினைக்கவில்லை. அதைவிட அதிகமாக. நாள்தோறும் ஐந்து நிமிடத்திற்கு எதாவது தவறாமல் எழுதுவது என்று சென்னையில் இருந்து திரும்பும் போது நினைத்துக் கொண்டேன். சியாட்டல் வந்தவுடன் வழக்கம் போல் வேலை வீடு சினிமா புத்தகம் என்று நேரம் ஓடிவிட அவ்வப்போது கிறுக்கிய சில சிறுசிறு கதைகளைத் தவிர வேறொன்றையும் கிழித்துவிடவில்லை.
மார்கழிச் சென்னை சுகமாயிருந்தது. நண்பர்கள், குடும்பம், கொஞ்சம் கச்சேரி இசை, நிறைய புத்தகங்கள், பலப்பல புது அனுபவங்கள் என்று நாற்பது நாட்கள் ஓடிவிட்டன. கேரளாவில் ஆளப்புழா கோட்டயம் என கொஞ்சம் சுற்றினேன். கோவையை எட்டிப் பார்த்தேன். வாழ்வின் ஒரு மிக முக்கியமான அனுபவம் கிடைத்தது. தி.நகரை காலால் சுற்றி வந்தேன். சென்னை ரொம்பவே மாறியிருந்தது என்று க்ளீஷேவாக ஆரம்பித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
உங்களைப் பற்றி வெளியே சொல்ல கொஞ்சம் தயங்கும் மூன்று விஷயங்கள் நினைத்துக் கொள்ளவும் என்று எழுதியபடி யாரோ ஒரு பிரகஸ்பதி எழுதிய ஸ்பாம் மெயில் கிடைத்தது. ரொம்ப நாள் காணாமல் போய் திரும்பி எழுத வரும் போது, இம்மாதிரியான் ஐஸ் ப்ரேக்கர்கள் உதவலாம். ஆகவே, ஒன்று – காலையில் என்னதான் நேரம் இல்லாமல் இருந்தாலும் ஷவரில் நுழைந்து விட்டால் நேரம் பற்றிய ப்ரக்ஞை போய் விடுகிறது. பாத்ரூமில் கொட்டும் தண்ணீரை யோசிக்க ஆரம்பித்து எதாவது ப்ரைம் நம்பர் கணக்கிலோ புதுமைப்பித்தன் கதை முடிவிலோ போய் நிற்கிறது. இங்கே எழுதப்பட்ட கதை கூட அங்கே தான் தோன்றியது. இரண்டு – ஹாலிவுட்டில் ஹாலிடே படங்கள் என்று ஒரு ஜானர் உண்டு. அதாவது கிறிஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் குடும்ப, ரொமாண்டிக் அல்லது காமெடிக் கதைகள். மற்ற சுமார்ப் படங்களை தாங்க முடியாத எனக்கு இப்படங்கள் பிடிக்கின்றன. இன்று கூட ’இட்ஸ் ஆல் அபவுட் ஹாலிடேஸ்’ என்ற ரொம்பவே போர் படத்தையும் பார்த்து முடித்துவிட்டேன். ஒரே பண்டிகையை வைத்து இத்தனை கதைகளா? மூன்று – சட்டென ஏதும் தோன்றாததால்…பின்னர்.