வீடு

”திஸ் இஸ் ஆஸ்சம்”.

“தாங்ஸ் பிரவீன்”

“ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல”

” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி நினைக்கறதில்ல” என்று காப்பியை உறிந்து கொண்டே சொன்ன கணேஷை வியந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

“ வெரி ட்ரூ. ஆனா பார்த்திபன் கனவுல ஸ்ரீகாந்த் சொல்லுவான், வீடு என்ன மியூசியமா? எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைச்ச மாதிரி இருக்க. இவர் அதை புடிச்சுண்டுட்டார். அண்ட்ராயர் முதக்கொண்டு ஹால்ல தான் அலக்கழியும்.”

”அரூ..இட்ஸ் ஓக்கே…” என்றவனை திரும்பி ஒரு முறைப்பு விட்டு மீண்டும் ஆரம்பித்தாள், “உக்காந்த இடத்தில காப்பி வரணும். குடிச்சிட்டு எங்கயாவது ஹீட்டர் கீழ வெச்சுட்டுப் போய்டுவார். கேர்லெஸ் நம்பர் ஒன். எத்தனை சட்டை வச்சிருக்கார்னு கேளுங்க, தெரியாது. மை டாட் வுட் கில் மி இஃப் ஐ வாஸ் லைக் திஸ். இவரோட ஆபீஸ் தான் இவரோட முத வைஃப். நானும் பசங்களும் இவரோட ஹாபி” என்று கண்ணை சுழற்றியபடி பேசிக் கொண்டே போனாள் எனதருமை அருணா.

அந்த இடத்தை விட்டு மெல்லமாய் நகர்ந்தேன். இந்த சனிக்கிழமை மாலை எனக்கு சரியில்லை போலும்.

அந்த வீடு பளிச்சென்று இருந்தது. வேக்யூம் செய்யப்பட்ட கார்பெட்டுகள், துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிகள். எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருந்தது. நடராஜர் சிலை துடைக்கப்பட்டு வருபவர்களை வரவேற்கிற மாதிரி வைக்கப்பட்டிருந்தது. போஸ் ஸ்பீக்கரில் மாலி குழலூத, ஒருவித ஆஃப்டோன் கலர் சுவரில் கோலாஜாக பேமிலி போட்டோஸ். டிபிகல் சஃப்யர்பன் ஹவுஸ். பாஸ்டனில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஆஷ்லாண்டில், 3000 சதுர அடியில் கட்டப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வீடு. ஐநூறாயிரம் என்று சொன்னதாய் ஞாபகம். வீட்டு வாசலில் தி ராஜாரமன்ஸ் என்று போர்டு சொல்லிற்று.

“இதல்லாமே எப்பவுமே இப்படித் தான் இருக்குமா” என்று அருணா கணேஷின் மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அர்விந்தும் சமிக்‌ஷாவும் அவர்களின் குழந்தைகளுடன் மாடிக்கு சென்றுவிட, அந்த நடராஜர் சிலையை ரசித்தபடி நின்றிருந்தேன்.

“பசங்க சாப்டுட்டாங்க. கமான் லெட்ஸ் ஹாவ் டின்னர்”, கணேஷின் மனைவி செல்வி.

டேபிளில் பரிமாறப்பட்ட டின்னர். எங்களுடைய வீட்டில் எப்பவுமே செல்ஃவ் சர்வ் தான். இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது. விருந்தினர் வந்தாலும் கூட டைனிங்கில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, அவரவர் எடுத்துக் கொள்ளும் ப்ஃபே சிஸ்டம் தான்.

“எப்பவுமே இரண்டு செட் கட்லெரி இருக்கும். ஒண்ணு டிஷ்வாஷர்ல இருந்துச்சுன்னா, அடுத்த செட். அதனால வீ கேன் டேக் விசிட்டர்ஸ் எனி டைம். சுத்தமா வெந்நீர்ல க்ளீன் பண்ணி உள்ள வெச்சுருவோம்” என்றெல்லாம் செல்வி சொல்லிக் கொண்டே போக, அரு என்னை கொஞ்சம் பாவமாய் பார்த்தாள். கணேஷ் பெருமிதத்தில் இன்னும் ரெண்டு கரண்டி உருளைக்கிழங்கை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“சூப்பர் சமையல். ரொம்ப தாங்ஸ். இதோ கை அலம்பிட்டு வந்து மேல பேசரேன்” என்று சொல்லிக் கொண்டே கெஸ்ட் பாத்ரூமை தேடிக் கொண்டே போனேன்.

“டாடி!” என்று சமிக்‌ஷா கத்துவது மாடியிலிருந்து கேட்டது.

“ஒண்ணும் இருக்காது. அவளுக்கு எப்பப் பாத்தாலும் ஒரே அடம்” என்று சொன்ன அருணாவுக்கு காது கொடுக்காமல், அப்படியே மேலே ஓடினேன்.

எதிர்ப்பட்ட ரூமில் லைட் போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த போது, சமிக்‌ஷா ஸ்பான்ஜ் பாப் பொம்மைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். ”ப்ளீஸ் டோண்ட் ஃபைட் வித் ஹிம்” என்றேன். “சரி டாடி!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சண்டையிட ஆரம்பித்தாள்.

அந்த குழந்தைகள் ரூம் கூட சுத்தமாய் இருந்தது. எல்லா பொம்மைகளையும், ஒரு ஹாமக்கில் கட்டி தொங்க விட்டிருந்தார்கள். தரை சுத்தமாக இருந்தது. இரண்டு குழந்தைகள் அந்த ரூமில் வசிப்பதற்கான அறிகுறி கூட இல்லாமல். வீட்டின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. அதைவிட வீட்டுக்கு போனவுடன் அருணாவிடமிருந்து விழம் டோஸ் பற்றி கவலை அதிகரித்தது.

ரூமை விட்டு வெளியே வந்தேன். இதைத் தவிர இரண்டு பெட்ரூம்கள் இருப்பதாக பட்டது. லைட் போடாததால் சரியாக தெரியவில்லை. கை அலம்பாதது ஞாபகம் வந்தது. எதிரில் பாத்ரூம் தெரிய, உள்ளே சென்று லைட் போட்டேன்.

கையலம்பி விட்டு, பக்கத்தில் தொங்கும் டவலில் கை துடக்கும் போது கண்ணாடியை பார்த்து, ”நீயும் இருக்கியே வீட்ட பத்திக் கூட அக்கறையில்லாம” என்று ரொம்பவும் மனதுக்குள் பேசினேன். டீஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டேன். அப்போது தான் அங்கே பரவியிருந்த அமைதி உரைத்தது. எதிரில் பாத் டப்பை மூடியிருந்த கர்ட்டன் அழகாயிருந்தது. துணியா ப்ளாஸ்டிக்கா என்று தொட்டுப் பார்க்க நினைத்தேன். ப்ளாஸ்டிக்.

அப்போது என்னவோ தோன்ற, அந்த திரைச்சீலையை சற்று தள்ளி டப்பினுள் எட்டிப் பார்த்தேன். பயந்து போய் கையை பின்னுக்கு இழுத்தேன்.

மூன்று…மூன்று பேர், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சீலையை திறந்த என்னை சற்றே பதட்டத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. குள்ளமாய், க்ரே கலரில், ரொம்பவே அழுக்காய். தலையில் இரண்டு சிறிய வெள்ளைக் கொம்புகள் தெரிந்தன. நகங்கள் விரல் நீளத்துக்கு வளர்ந்திருந்தன. சீராய் ஆனால் வெளியே தெரிகிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டு, என்னை ரொம்பவே பயத்துடன் பார்த்துக் கொண்டு.

எதாவது பேச வேண்டுமா என்று கூட தெரியாமல், திரைச் சீலையை மூடி விட்டு, லைட்டை அணைத்து வெளியே வந்தேன். குழந்தைகளை முதலில் கிழே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பாத்ரூமிற்கு எதிரில் இருந்த அலமாரிகளின் கதவை திறக்க ஏன் தோன்றியது என்று புரியவில்லை. மெதுவாய் சத்தமிடாமல் திறந்தேன்.

டிஷ்யூ பேப்பர், க்ளீனெக்ஸ், காரெல், ப்ளாஸ்டிக் பேக் இத்தியாதி இத்தியாதி எல்லாம் இருந்தன. தலை சற்று மேலே உயர்த்தி மேல் அலமாரியில் பார்த்த போது, இரண்டு பேர், அதே மாதிரி, அரண்டு போய், தன் சிறிய கால்களை கைகளால் கட்டிக் கொண்டு, என்னை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களை சற்று உற்று நோக்கினேன். ஐந்து விநாடிகளுக்கு.

கதவை மூடிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து கீழே இறங்கினேன்.

”அரூ…ஆபிஸ்லேர்ந்து போன். ஐ ஹாவ் டு கோ சூன். கம் லெட்ஸ் ஸ்டார்ட்…”

,