ஊசி

ஹப்பா….செம ஜம்ப். என்ன ஒரு நாற்பதடி இருக்குமா? குதிக்கும் போது வலி தெரியாது, அதைப் பற்றி எனக்கும் கவலையில்லை. இந்த வலியை ஓடிக் கொண்டிருக்கும் அந்த ப்பாடுக்கு கொடுக்கப் போகிறேன்.

கால் தரையில் பட்டவுடன் ஓட்டமெடுத்தேன். ஒரு மணிக்கு ஐம்பது கி.மீ வேகம். நெஞ்சடித்துக் கொண்டிருந்தது. ரத்தத்தில் ஏற்றப்பட்டிருந்த ரசாயனம் கொடுத்த வேகம். ரசாயனத்தால் உடல்நலக் கவலையில்லை என்றார்கள் சக ஊசிக்காரர்கள். அவன் வேகமாய்த் தான் ஓடிக் கொண்டிருக்கிறான். தன்னைத் துரத்தும் போலிஸ்காரனை அறியாமல். காட்டுத்தனமாய் அவனை துரத்தியபடி நான். அவன் பிணமாகவாவது வேண்டும் என்று தானே சொன்னார்கள்.

இங்கிருந்து நகர்ந்தபடி இருக்க வேண்டும். இவனைப் போல மற்றவர்கள் இருக்கலாம். இங்கேயே இருந்தபடி மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ள நான் தயாரில்லை. படபடத்துக் கொண்டிருந்த நெஞ்சையும் உயிரையும் சற்றே கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்கு எதோ இருக்கிறது, நின்று விட்டால் திரும்பி வந்து அடித்துவிடும். ஓட வேண்டும்.

ஐ.டி கார்டில் ஸ்பெஷல் ஸ்பீட் க்ருப் என்று போடப்பட்டிருக்கிறது. என்னை இந்த ஊசிக்கார ஃபோர்சில் தேர்தெடுத்தார்கள் என்று தெரியும். ஏன் என்பதை பற்றி மயித்துக்கும் கவலையில்லை. என்னுடைய தற்போதைய கவலையெல்லாமே, தூரத்தில் கேட்கும் காலடிச் சத்தங்களும், பிய்ந்து போய் தொங்கும் என் முட்டுச் சதை எரியுமா என்பதைப் பற்றித் தான். மக்கள் என்னை மாதிரி ஓட முடியாது. மக்கள் என்று குறிப்பது கிரிமினல்களை. நரக வாசலுக்கு தங்களுடைய உறுப்புக்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகப் போகிறார்கள். ஆனால் அதற்கு முன் இந்த கம்னாட்டிகளை மவுண்ட் ரோடை நக்க வைக்கப் போகிறேன்.

காலடிகள் கேட்பது நின்றுவிட்டது. ஒளிந்து கொள்ள வேண்டுமா? இப்படியே உட்கார்ந்து கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு. கண்ணை மூடிக் கொண்டு. காத்திரு.

மூச்சு சீராகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எனக்கு துப்பாக்கிகளை கொடுப்பதில்லை. நான் கேள்விப்பட்ட வரை ஊசிக்காரர்களுக்கு துப்பாக்கியில்லை. ஊசிக்குப் பின் அவற்றை சரியாக உபயோகப்படுத்த முடியாது என்பதால். இந்த இரவை விடுவதாயில்லை. அவன் கையில் கிடைத்தால் மண்மூட்டையைப் போல அவன் முகத்தைப் பதம் பார்க்கப் போகிறேன். மூச்சு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்தது. ம்ம்…. இனிமேல் அனிதாவை பார்க்க முடியுமா என்று தோன்றியது. என்ன ஆயிற்று அவளுக்கு?

தூ….அந்த தேவடியாமகன் ராஜாவோடு சேர்ந்து என்னை ஏமாற்றியவள்.

சத்தியமாய் ராஜா மாதிரி கழிசடையாய் இருக்க என்னால் முடியது. ஹூம் ஹூம்.

பாக்கெட்டிலிருந்து எடுத்து இடது கையில் மற்றுமொரு ஊசி போட்டுக் கொண்டேன். அடுத்த நொடி மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். சே…என்னவோ நினைத்துக் கொண்டிருந்தேன். முதலில் நினைப்பதை நிறுத்து கமாண்டோ. வயதான பெண்மணியை கொன்று விட்டு தப்பி ஓடும் அந்த மாக்கானைக் கண்டுபிடித்து, நெஞ்சாங்கூட்டை பிய்த்துப் போடு. புத்திசாலித்தனமான எண்ணம். இன்னுமொரு மேம்பாலத்திலிருந்து இன்னுமொரு நீண்ட ஜம்ப். அதோ ஓடிக்கொண்டிருக்கிறான் ப்பாடு. எனக்கு எதன் மேலோ கோபம் வந்தது, கொஞ்ச நேரத்தில் அவனும் அதை தெரிந்து கொள்வான்.

Create a website or blog at WordPress.com