விமர்சனம் – கடிதம்

டியர் சுப்புடு,

உங்களின் யாவரும் நலம் விமர்சனம் படித்தேன். படித்தேன் என்பதை விட அதை மிகவும் ரசித்தேன், மதித்தேன். பத்து வருடங்களாக என் மனதின் இருந்த பல சந்தேகங்களும் விடை தந்தது அந்த விமர்சனம். சமீபமாக தமிழில் வந்த மிக முக்கியமான விமர்சனம் இதுதான். இதை கண்டிப்பாக உலகத்தின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். ஜாதி மதம் கடந்த ஒரு சிறந்த பார்வை அது.

கடந்த முப்பது வருடங்களாக தமிழ் நாவல் உலகின் மிக முக்கியமான வாசகரான உங்களை ருஷ்யாவின் விமர்சன எழுத்தாளர் டுபாக்ஸி கேனைகனக்கோவ்வுடன் ஓப்பிட்டு நானும் எனது நண்பர்களும் அடிக்கடி பேசிக்கொள்வோம். என் நண்பன் ஜிக்கி உங்களை நியுசிலாந்தின் ஆத்தி லாக்கர் உடன் இணைத்து பேசப் போக எனக்கு கோபம் வந்து, கையில் இருந்த பீர் பாட்டிலால் அவனது மண்டையை உடைத்து விட்டேன். நான் மதிக்கும் சுப்புடுவின் விமர்சனத்துக்கு அருகில் ஆத்தி எழுதிய ஸ்டார் ட்ரக் விமர்சனம் எல்லாம் தூசு. இப்படி செய்ததற்காக கோபப்படாதீர்கள். என்னுடய பல பெண் நண்பர்கள் சதா சர்வ காலமும் உங்களை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படிப்பது உங்கள் எழுத்துக்களை மட்டும் தான். நிஷிதா உங்கள் புகைப்படத்தை தான் மொபைலின் பேக்கரவுண்டாக வைத்து கொண்டிருக்கிறாள்.

உலகில் இருக்கும் பலவிதமான விஷயங்களை பற்றியும் உங்களின் கருத்துக்களை அறிய முற்படும் பல கோடிப் பேர்களில் நானும் ஒருவன். காலை எழுந்தவுடன் பல் தேய்பதற்கு முன் படிப்பது உங்கள் வலைதளத்தை தான். ஒருநாள் நீங்கள் எழுதாவிட்டால் எனக்கு தூக்கம் வருவதில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் முன்பு எழுதியதையே படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை உங்களில் ஆறுபத்தி எட்டு பத்திகளை பல்லாயிரக்கணக்கான முறை படித்து விட்டேன். என் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் உங்களின் புனைகதையை படித்துக் காட்ட சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த கடிதத்தை நீங்கள் வலைதளத்தில் பதிப்பிக்க மாட்டீர்கள். இதைப் போல உங்களுக்கு ஏராளமான கடிதங்கள் குவியலாம். இதை உங்கள் வலைதளத்தில் ஏற்றினால், எனக்கு ஜென்ம சாபல்யம். நிஷிதா உங்களுக்கு ஒரு பெரிய ‘ஹாய்’ சொன்னாள்.

ஜூன் 5, 2009
சிவராமன்
குடவாசல்.

சிவராம்,

முதலில் குடவாசலில் இருக்கும் அந்த ஜம்பு கோலி சோடா கடை இன்னும் இருக்கிறதா. சிறுவயதில் எனக்கு என் தந்தை அங்கு கோலி சோடா வாங்கித் தந்தார். பின்பு பல முறை பார்க் ஷெராடனில் தீர்த்தசவாரி செய்யும் போதெல்லாம், அந்த கோலி சோடா தான் ஞாபகம் வரும்.

நீங்கள் எழுதியதெல்லாம் எனக்கு பழகி போய் விட்டது. தசாவதாரத்தின் பாடலை பற்றி நான் எழுதிய அந்த நுண்ணிய விளக்கத்தை படித்து கமல் போன் செய்து பாராட்டினார். டுவிட்டரை பற்றி நான் எழுதிய பத்தியை ஆப்ரிக்காவின் பீலாயுவில் சர்சையை உருவாக்கியிருக்கிறது. விக்கிபிடியாவில் என்னையும் இரானின் பாரூட் டுமாரருக்கையும் இணைத்து கொண்டாடுகிறார்கள். எதிர் வீட்டில் சந்தியா பூனையை பார்க்கும் பொழுது என் கர்வம் உடைகிறது.

எண்பதுகளில் என்னுடைய எட்டாவது வயதிலேயே என்னை பெண்கள் சுற்றி வர ஆரம்பித்தார்கள். இன்று வரை என் மெயில் பாக்ஸை திறந்தாலே, இங்கே வரியா, போன் பண்ணுவாயா என்று ஏகப்பட்ட மெயில்கள்.

போன வாரம் ஜகன் பரமேஷ்வர் என்பவர் டுவிட்டரில் எனக்கு கானா பாடத் தெரியாது என்று எழுதியிருந்தார். அவருக்கு பதிலை இன்று முதல் ஆயிரத்தெட்டு டுவீட்டுகளாக எழுத உள்ளேன். பிக்கடோர் நிறுவனம் அந்த பதில்களை இணைத்து சுப்புடுவும் ஜிகினா கானாக்களும் என்று புத்தகம் போட ரெடியா உள்ளார்கள். இதற்கு அட்வான்ஸாக 10,000 ருபாய் செக் கொடுத்தார்கள். இன்று ஞாயிறாக உள்ளதால் அதை என்காஷ்(என் காசு) செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது சிங்கிள் டீக்கு மூன்று மணிக்குள் கைக்காசு கொடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கு பிறகு நான் பெங்களூருக்கு ப்ளைட்டில் சென்று இரவு ஷெராட்டனில் தங்கப் போகிறேன்.

1:16:15 pm.


One response to “விமர்சனம் – கடிதம்”