ரிசஷனும் சில கிறிஸ்துமஸ் தினங்களும்

nut cracker public art seattle

வால் ஸ்ட்ரீட் இரண்டாய் பிரிந்து குழம்பிப் போய் கிடக்கிறது. இரண்டு பக்கங்களிலும் எகானமிஸ்டுகள் நின்று கொண்டு, ரிசஷன் வருகிறது-இல்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தையின் உள்ளே, வருகிறது என்ற குரல் கேட்டவுடன், எல்லா பங்களும் ஒரு பத்து பர்செண்ட் இறங்குகின்றன. இல்லை என்றவுடன் ஒரு ஐந்து பர்செண்ட் ஏறுகின்றன. இதே விளையாட்டு கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வருதா, இல்லையா விளையாட்டை முடிவு செய்வது, அமெரிக்க பொதுஜனம் தான். இந்த பொதுஜன செலவழிப்பு தான் அமெரிக்காவின் 70% GDPக்கு காரணம். அதனால் தான் அமெரிக்கா ஒரு மார்க்கெட்டிங் தேசம் ( அதைப்பற்றி மற்றொரு முறை எழுத எண்ணம்). மிஸ்டர் பொதுஜனமோ இவர்களின் சண்டையை பற்றி கவலைப்படாமல், மால்களில் கிறிஸ்துமஸுக்கு துணி எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி செய்யப் போய், கன்ஸூமர் செலவழிப்பது உயர்ந்திருக்கிறது(மாஸ்டர் கார்ட் இல்லை என்கிறது), ஆகியதால், ரிசஷன் எல்லாம் சுத்த அம்பக் என்கிறார்கள் ஒரு சாரர். மற்றவர்களோ, வீட்டு கடனின் சதவிகிதத்தை குறைத்ததால், இப்படி செலவழிப்பு அதிகமாகிறது. இது கடைசியாக் இன்ஃப்லேஷனில் போய் முடியப் போகிறது என்கிறார்கள்.

சிலருக்கு வேலை போயிருப்பது என்னவோ நிஜம் தான். ஆனாலும் இன்னமும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மக்கள் இன்னமும் ஸ்டார்பக்ஸின் காப்பிக் க்யூவில் நிற்கிறார்க்ள. வில் ஸ்மித்தும், சிப்மங்குகளும் போன வாரம் பாக்ஸ் ஆபிஸின் மூலம் ஹாலிவுட்டை தூக்கி நிறுத்தினார்கள்.

2008ன் முதல்பாதிக்குள் ரிசஷன் வருமா இல்லை எல்லாம் ஷேமமாக இருக்குமா என்று தெரிந்து விடும். ரிசஷன் வியாபார சுழற்சியின் ஒரு அங்கம் தான். எல்லா கம்பெனிகளும் தலா பத்து சதவிகத ஆட்களை வேலையை விட்டு எடுப்பது தான் ஆரம்பம். பிறகு ஐடி பட்ஜெட்டுகள் கட் செய்யப்படும். திடீரென்று “அமெரிக்கால என்ன இருக்கு, நம்மூர்ல இருக்கிற சொகம் இருக்கே” என்று பர்முடா ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு டாலஸிலிருந்து உங்கள் ஒன்னு விட்ட சித்தப்பா பையன் திரும்பி வந்தால், நம்பாதீர்கள். இதைப் போல 2000ல் நடந்திருக்கிறது. மீண்டும் நடந்தால் ரிசஷன் என்று அர்த்தம். ஆனால் இந்த முறை சென்ற முறை மாதிரி அவ்வளவு அதிகமாய் இராது. கட்டுப்படுத்தி விடுவார்கள்.

இந்த கலேபாரம் அத்தனையும், அமெரிக்காவின் முக்கிய மாதமான டிசம்பரில் தான். கிறிஸ்துமஸ்/புது வருட பிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஊரே தயாராகிக் கொண்டிருக்கிறது. சியாட்டலில் கேட்கவே வேண்டாம், ரோட்டோரமாய் குளிர் காலத்துக்கு தன் இலையெல்லாம் பறிகொடுத்திருக்கும் மரங்களுக்கு சீரியல் லைட் போட்டிருக்கிறார்கள். சியாட்டலின் பப்ளிக் ஆர்ட் ரொம்பவும் பிரமாதம். ஆங்காங்கே விதவிதமான நட்கிராக்கர் (nut cracker) பொம்மைகள், தி நகர் கடைகள் போல அம்மும் மக்கள் கூட்டம், புதுத் துணியை கையில் பிடிக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போகும் அவரேஜ் அமெரிக்க குடும்பம், 5th அவென்யூ தியேட்டரில் வந்திருக்கும் ஆண்ட் ரியு லாயட் வெப்பரின் புதிய ஓப்பரா ஷோ, ஸ்டார்பக்ஸில் கிடைக்கும் gingerbread latte, சாண்டா க்ளாஸுடன் படம் பிடிக்க மால்களில் நிற்கும் குழந்தைகள் கூட்டம், கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்கள் என்று ஊரே அளவிடமுடியா சந்தோஷத்தில் இருக்கிறது. வானம் மூடிக் கொண்டு, பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் சற்றே இருட்டிக் கொண்டு, அவ்வப்போது பெய்யும் சில் சில் மழை, ஊரை ரொம்பவும் ரொமாண்டிக்காக ஆக்கிக் கொண்டிருக்கிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ் !!