முப்பது மெட்ராஸ் நாட்கள்

இரண்டு வருடங்களுக்குப் பின் கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை.

மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம் கட்டுகிறார்கள். ஆங்காங்கே தகரம் பெயர்ந்து ரோட்டில் நீட்டிக் கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் ஆட்டோ-ப்ரேக்குகலோடு ட்ராலி அழகாக அடுக்கி இருக்கின்றன. எக்கச்சக்கமாக பார்கிங் சார்ஜ் போடுகிறார்கள். சென்னையில் ட்ராபிக் அதிகமாகிவிட்டது. எல்லோரும் வண்டியை ‘வள்ச்சி ஓட்டிகினே’ போய்கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் பல ஆயிரம் கார்கள் வானத்தில் இருந்து கொட்டிய மாதிரி இருக்கிறது. கிண்டியில் நேரு, ரவுண்டானாவை இழந்து புறா பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். லாரிகள் இடிக்காமல் இருந்தால் சரி. ராட்சத வினைய்ல் போர்டுகளில் சிவாஜி ரஜினி ஜீன்ஸில் நடக்கிறார். சிரிக்கிறார். குறுந்தாடி வைத்து ஷ்ரேயாவை வளைக்கிறார், க்கிறார், கிறார், றார்.

சென்னை 28ன் இருபத்தி ஐந்து நாள் வெற்றியில் வெங்கட்டும் கிரிக்கெட் டீமும் எல்லா டிவியிலும் பேசுகிறார்கள். செல்விகளும் தேவயானிகளும் இன்னும் மூக்கு சிந்துகிறார்கள். ஓப்பன் செட்டிங்கில் அதிர்ஷடக்கல் மோதிரத்திற்கு, டிவியில் அரை மணி நேரம் அட்வர்டைசிங் செய்கிறார்கள். சன் டீவியின் டட்டட் டடடைங் டைட்டில் மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழ் மாலை என்று இன்னமும் போடுகிறார்கள். அப்படியென்றால் என்ன என்று யாரும் கேட்பதில்லை. எல்லா சேனலும் எதாவது போட்டி வைத்து கொண்டு, தங்கமும் டைமண்டும் வழங்கும் சொர்க்க பூமியாயிருக்கிறது. மெட்ரோ ப்ரியா சாயலில் இன்னும் பலர் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து டீவி ஸ்கிரீனை குத்திக் குத்தி பேசுகிறார்கள்.

மக்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் பணமிருக்கிறது. முக்கியமாய் செல்போன் இருக்கிறது. ஐந்தில் இருவருக்கு இரண்டு போன் இருக்கிறது. எஸ்.டி.டி போன் பூத் பெண்ணிலிருந்து, காந்தி மண்டபத்தில் ஹெல்மட் விற்பவர் வரை எல்லோரும் யாரிடமோ எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோவிலிலும் தியேட்டரிலும் மால்களிலும் பல ரிங்டோன்களில் மொபைல்போன் அடித்துக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் கம்பெனிகாரர்கள் சிரித்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு நாளில் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கொள்கிறார்கள். மறுநாள் கழட்டி வைத்துப் போகிறார்கள். ராமாவரத்தில் க்ரவுண்டு 80 லட்சம் போகிறது. யாரோ வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படி என்று தான் புரியவில்லை. ரியல் எஸ்டேட் விலையை வைத்து எல்லோரும் பேப்பர் பணக்காரர்களாகி விட்டார்கள்.

ஹிந்து படிக்கும் மாமாக்கள், இப்போது டெக்கான் ஹிரால்டை சிலாகிக்கிறார்கள். குங்குமம் இன்னமும் சூப்பர்ர்ர்மா. ஸ்பென்ஸரின் அத்தனை phaseகளும் முழி பிதுங்குகின்றன. பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் தாண்டி லாண்ட்மார்க்கில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது. பா.விஜய் ஏராளமாய் கவிதை புத்தகம் போடுகிறார். பாலிடிக்ஸில் யாரோ யாரிடமோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விஜயகாந்துக்கு கூட்டம் வருவதாக தந்தி பேப்பர் சொல்கிறது. எல்லா ஸ்கூல் பசங்களும் பத்மா சேஷத்திரியில் படிக்கிறார்கள். அல்லது படிக்க நினைக்கிறார்கள்.

டீனேஜர்கள் ஆர்குட்டில் புழங்குகிறார்கள். அல்லது மால்களில் பிகர் வெட்டுகிறார்கள். Chevy கார்களில் வந்து ஜெர்க் விடுகிறார்கள். புகை பிடிக்கிறார்கள். டேட் செய்கிறார்கள். BPOவில் ராத்திரியெல்லாம் போனில் அமெரிக்கர்களுடன் பேசுகிறார்கள். ஐடி கம்பெனிக்கள் பஸ்விட்டு ஊருக்கு வெளியே வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்கிறது. NH 45யில் நேர்த்தியாக தார் ரோட் போட்டிருக்கிறது அரசாங்கம். ஆங்காங்கே கப்பம் கேட்கிறார்கள். சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு காரில் செல்ல 45 ரூபாய் டோல் கட்டவேண்டியதாய் இருக்கிறது.

சரவணபவனில் அதே கொஞ்சூண்டு காப்பிக்கு பத்து ருபாய் முழுசாய் வாங்குகிறார்கள். சாம்பார் இன்னமும் அதே டேஸ்டில் இருக்கிறது. தேசிகன் பிரஞ்சு தாடியில் ஊர் சுற்றுகிறார். பைக்கில் கற்பகாம்பாள் மெஸ்ஸிற்கும், அல்லயன்ஸிற்கும் கூட்டிச் சென்றார். தோசையும், சோவின் அதிர்ஷடம் தந்த அனுபவங்களும் வாங்கித் தந்தார். சீக்கிரம் நல்ல சேதி சொல்வார் என நம்பலாம். மயிலாப்பூரில் தினமும் அறுபத்தி மூவர் ஊர்சவ கூட்டம் போல் முண்டியடிக்கிறது. தி.நகரில் தெருவடைச்சானாக புது சரவணா ஸ்டோர்ஸ் வந்திருக்கிறது. எந்த ப்ளோரிலும் fire exitஐ காணோம். எல்லா பொருட்களும் உள்ளே ஒரு பத்து ரூபாய் கம்மியாய் கிடைக்கிறது. தி.நகருக்கு தனியாக ஒரு பார்கிங் strategy வேண்டும். ட்ராபிக் போலிஸ்காரர்கள் இன்னமும் அதிகமாக புகையை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு பதிப்பகத்தில் ஜரூராக வேலை நடக்கிறது. வாசலில் Sky is our limit, We are currently on second floor என்று போர்டு போட்டிருக்கிறார்கள். ரிசப்ஷனில் உட்கார வைத்து, இண்டர்காம் போட்டு, உள்ளே அனுப்பப்படுகிறேன். ஐடி கம்பெனி போல் தோன்றுகிறது. பா.ரா இரண்டு மணி நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தார். சுட சுட பிரிண்டாகி வந்த கம்ப்யூட்டர்ஜீயை பிரித்துப் பார்த்து, கூகிள் டாக்கில் சொக்கனிடம், பர்ஸ்ட் காப்பி வந்தாகிவிட்டது என்று சேதி சொல்கிறார்.

கே.கே நகரில் Beer Garden ஒன்று இருக்கிறது. மற்ற இடங்களில் டாஸ்மாக்கும், பிளாஸ்டிக் கப்புகளும் இருக்கின்றன. ஐஐடியிலேயே மரங்களை வெட்டுகிறார்கள். மற்ற இடங்களில் மரமே இல்லை. சென்னை சிட்டி சென்டரின்(CCC) KFCல் ஏகபோகமாக வியாபாரம். CCC அவ்வளவு பெரியதாக இல்லை. இருந்தும் உள்ளே இருந்த கல்லூரிக் கூட்டம் ஏதோ சேனலுக்காக காமிரா பார்த்து – It’s a cool place to hang-out என்று ஒரே தொனியில் கத்துகிறார்கள்.

முப்பது நாட்களுக்கு பிறகு இரவில் அமெரிக்கா திரும்பும் போது வானத்திலிருந்து பார்த்தால், சென்னையின் ட்யூப்லைட் வெளிச்சங்கள் அழகழகாய் மின்னுகின்றன.

Create a website or blog at WordPress.com