மவுண்ட் ரோடில் ரோபாட்டுகள்

transformers movie

இந்த சம்மர் ரிலீஸிலேயே Transformers தான் ரொம்ப சத்தமான படம், ரொம்பவும் இழுவை, அதீதமான க்ராபிக்ஸ், வயிற்றை குமட்டுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இதனால் எதிர்பார்ப்பில்லாமல் பெரிய ஸ்கிரீனில் பார்த்ததால், ரொம்பவும் பிடித்திருக்கிறது. பிரமாதமான படம்.

டைரக்டர் மைக்கேல் பே(Michael Bay) ஒரு டைம்பாஸ் பரமாத்மா. பியர்ல் ஹார்பர், ஆர்மகெடான் என்று பாப்புலர் சினிமா எடுப்பவர். நல்ல சினிமா எடுப்பவர்கள், இவரின் டைம்பாஸ் படங்கள் ஹிட்டாவதை பார்த்து, Killing Michael Bay என்றெல்லாம் குறும்படம் எடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு வெறுப்பை சம்பாதித்திருக்கும் ஒரு ஹாலிவுட் ஷங்கர்.

இண்டிபெண்டன்ஸ் டே போல கதை, காதில் நிறைய பூ. அதனால் லாஜிக் கேள்வி கேட்காமல் க்ரேஸி மோகன் படம் போல பார்ப்பது அவசியம். உலகில் உள்ள இயந்திரங்களை கட்டுக்குள் வரவழைத்து, மனிதர்களை அழிக்க ஒரு செட் ரோபோட்டுகள் வந்திறங்குகின்றன. மனிதர்களை காக்க ஒரு அரை டஜன் நல்ல ரோபாட்டுகள் மற்றொரு பக்கம் வர, மிச்ச படம் ஒரு 20-20 மாட்ச்சின் சுவாரசியம்.

Bumble Bee என்னும் நல்ல ரோபோ, ஒரு யுவனின் காராக உருமாறி அவனைக் கொண்டு க்ளைமாக்ஸ் காட்சியை முடிக்கிறது. எல்லா ராட்சத சைஸ் நல்ல ரோபோக்களும், அந்த யுவனின் வீட்டிற்கு வெளியே ஒளிந்து கொள்ளும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்கள். Infact கலக்கி எடுத்திருக்கிறார்கள்.

கடைசி 25 நிமிடங்களில், நகரத்தின் நடுவே ரோபோக்களுக்குள் நடக்கும் சண்டை காட்சியில் க்ராபிக்ஸ் தெரியவில்லை. முதல் காட்சியிலிருக்கும் வேகம் இறுதி வரை வருவது ஸ்க்ரிப்ட்டின் தெளிவு.

கோலிவுட்டிலும் மவுண்ட் ரோடில் ரோபோ சண்டை படமெடுக்கலாம். இந்த க்ராபிக்ஸ் நம்மூர் விலைக்கு கட்டுபடியாக ஐந்து வருடமாகலாம். குண்டடிக்காமல் தனுஷ் காத்திருந்தால், மாரேஜ் செட்டிலாகாமல் அசின் இருந்தால், ஹாலிவுட்டில் புழங்காமல் ரஹ்மானிருந்தால், ஹிந்திக்கு போகாமல் ஷங்கரிருந்தால், கண்டிப்பாய் செய்யலாம்.