சமீபத்தில் படித்த கட்டுரைகளில் இரண்டு பிடித்தன.
ஒன்று.
ரோபாடிக்ஸ் பற்றி சயண்டிபிக் அமெரிக்கனில், பில் கேட்ஸ் எழுதிய, A Robot in Every Home. இருக்கிற எல்லா டெக்னாலஜியும் ரொம்ப முன்னேற்றி ஓசைப்படாமல் ரோபாடிக்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறார்கள் மைக்ரோசாப்ட்காரர்கள். கேட்ஸின் இந்த கட்டுரை, ரோபாடிக்ஸ் பற்றி சாமனியனுக்கு ஒரு curtain raiser.
கேட்ஸ் சொல்ல வருகிற விஷயம் சுவாரசியமானது தான். இதுதான். தற்போது உலகில் உள்ள அனைத்து ரோபோ தயாரிப்பாளர்களும், அவர்களுக்கு தேவையான மென்பொருளை அமைத்துக் கொள்கிறார்கள். இன்றுல்லபடி ஒரு இரண்டடி ரோபோ மூன்று இஞ்ச் கையசைக்க, சியிலோ, சி++யிலோ, மெஷின் லாங்வேஜிலோ லைப்ரரி பங்ஷன்களை எழுதி, டாட்டா பைபை சொல்லித் தருகிறார்கள். ஒரு ஜப்பான் கம்பெனி தயாரிக்கும் ரோபோ மென்பொருள் மற்றோர் கம்பெனியால் ரோபோவில் உபயோகிக்க inter-operableஆக இல்லை. இதனால், ஆளாளுக்கு தனி மென்பொருள் தயாரிக்க, ஒவ்வோர் ரோபோவும் மற்றோர் ரோபோவிலிருந்து ஏராளமாய் வேறுபடுகின்றன.
மைக்ரோசாப்ட், இந்த சைன்ஸ் பிக்க்ஷன் ரோபோ உலகில் ஏராளமாய் பணங்கொட்டி, Microsoft Robotics Studio மென்பொருளை எழுதியிருக்கிறார்கள். இப்போதைக்கு இது ஒரு இலவச சேவை தான். ஆனால் மைக்ரோசாப்டின் ஆர்வத்தை பார்த்தால், இன்னும் 5-6 ஆண்டுகளில், இந்த மார்க்கெட் பன்மடங்கு வளரலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த அறிமுகம், ரோபாடிக்ஸ் மார்க்கெட்டின் Tipping Point ஆகக்கூடும். அப்போது கேட்ஸின் இந்த கட்டுரை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.
அடுத்த பத்து வருடங்களில் உங்களுக்கு அமிர்தாஞ்சன் தேய்த்து விடவோ, பொன்னியின் செல்வன் படித்து நடித்துக் காட்டவோ, வேளாவேலைக்கு இன்சுலின் ஊசி போடவோ, கூட உட்கார்ந்து கண் கசக்கி ‘செல்வி’ பார்க்கவோ, ஒரு அசமஞ்ச ரோபோ வீட்டோடு வரக்கூடும். அதற்கு முன் ஷங்கரும் சுஜாதாவும், கமலை வைத்து ‘ரோபோ’ எடுப்பது நலம்.
இரண்டு.
இதிலும் கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார். பீட்டர் சிங்கரின், What Should a Billionaire Give – and What Should You?, என்னும் நியுயார்க் டைம்ஸ் கட்டுரை, சற்றே நீளமாயிருந்தாலும், சிந்திக்க தூண்டுகிறது. கிறித்துமஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த இக்கட்டுரையில், வாழ்வின் விலை பற்றி ஆரம்பித்தாலும், அதை தாண்டி நமது நம்பிக்கைகளை அசைத்து பார்க்க முயற்சி செய்கிறார், பீட்டர் சிங்கர் என்னும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.
அமெரிக்காவின் நான்கு பெரிய கொடை கர்ணன்களாகிய ஆண்ட்ரியு கார்னகி, ஜெ டி ராக்ப்பி்ல்லர், பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியவர்களில் கார்னகி தவிர மற்ற மூவர் நாத்திகர்கள். இவர்களை கொடுக்க வைத்தது, வளர்ப்பு முறையா ? நம்பிக்கைகளா ? தன்னை இறந்த பின்னும், இவ்வுலகம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்று கோவில்கள் கட்டும் பேரரசர்கள் போன்ற எண்ணமா ? உலகை மாற்றும் முயற்சியா ? அல்லது வெறும் egoவா ?. எது ?