எம்.எஸ் – வாழ்வே சங்கீதம்

எம் எஸ்

ஆனந்த விகடனில் மார்கழி சீசன் எழுதும் வீயெஸ்வியை பற்றியும் அவரின் இசை புலமையை பற்றியும், அவரின் சுவாரசியமான கட்டுரைகளை படித்தவர்களுக்கு தெரியும். எம்.எஸ்சை பற்றிய தமிழ் புத்தகம், அதுவும் வீயெஸ்வி எழுதியது என்றவுடன் படிக்கத் தோன்றியது.

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்கிற குஞ்சம்மா என்கிற எம்.எஸ்சின் இசை/இல்லற வாழ்வை பற்றிய ஒரு எளிய அறிமுகம் தான், கிழக்கு பதிப்பகத்தின் எம்.எஸ் – வாழ்வே சங்கீதம். எம்.எஸ் போன்ற ஒரு இசை அரசியின் வாழ்வை 141 பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியாது என்று நன்கு அறிந்து தான், அவர் வாழ்வின் மிக முக்கிய சம்பவங்களை இந்நூல் பட்டியலிடுகிறது.

எம்.எஸ் ஒரு child prodigyயாக அறியப்பட்டதிலிருந்து துவங்கி ‘ஹரி தும் ஹரோ’ பாடலை காந்தி நேயர் விருப்பமாய் கேட்டது, தன் பட்டமான Nightingale of Indiaவை சரோஜினி நாயுடு எம்.எஸ்சுக்கு கொடுத்தது, மீரா திரைப்படத்தை First Day First Show பார்க்க மனைவி எட்வினாவுடன் லார்ட் மவுண்ட் பாட்டன் வந்தது, ‘நான் இப்போ வீணை கத்துக்கிட்டேன். அடுத்த தடவை மெட்ராஸ் வரும் போது உங்க வீட்டுக்கு வந்து உங்களுக்கு எந்தரோ மகானுபாவுலு வாசித்து காட்ட ஆசை’ என்று அப்துல் கலாம் சொன்னது, ஜோதிகாவின் ஆர்.எம்.கே.வி புடவை போல ‘எம்.எஸ் புளு’ புடவை பிரபலமாகியது என்று ஏகப்பட்ட ‘அட’ சொல்ல வைக்கும் நிகழ்ச்சிகள்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக எம்.எஸ் வாங்கிய விருதுகள், தன் இசை வாழ்வின் நடுவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் கல்கி கார்டன்ஸ் பங்களாவை விற்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு சிறு வாடகை வீட்டுக்கு ஜாகை போக வேண்டிய கட்டாயம் என்று ஒரு roller coaster வாழ்கையின் sneak peak தான் இந்த புத்தகம். புத்தகத்தை சுவாரசியமாக்க ஆங்காங்கே சற்று அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டதோ என்று நினைக்க வைத்தாலும், எம்.எஸ்சை பற்றி அதிகம் தெரியாமல் அதை சொல்ல முடியாதென்பதும் உண்மை. பின்னிணைப்பாக, இந்த புத்தகம் எழுத உதவிய நூல்களை பட்டியலிட்டிருப்பதற்கு வீயெஸ்வி மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி.

எம்.எஸ்சும் இசையும் ஒன்று தான் என்றாலும் தன் இசை மூலம் இதுவரை அவர் தர்மமாக வழங்கியது மூன்று கோடி என்று படித்தால் அசராமல் போவீர்களா ? அறுபது ரூபாயும், மூன்று மணி நேரமும் இருந்தால் கபி அல்வித நா கேஹனா பார்ப்பதை விடுத்து தமிழன் படிக்க வேண்டிய கட்டாய புத்தகம்.

Create a website or blog at WordPress.com