இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவின் மேல் உள்ள நம்பிக்கைகள் மேலும் குறைந்தன. இத்தனைக்கும் பார்த்தது இரண்டே தீபாவளி ரிலீஸ்கள் தான். வரலாறு – வல்லவன். தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பத்து பார்முலாக்கலில், இவை இரண்டும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும். காதலுக்காக வேஷம் போடும் காதலனும், பிறந்ததும் தன்னை பிரிந்த தந்தையை தேடிச் செல்லும் ஒரு பிள்ளையும் தமிழ் சினிமாவின் ஆதி காலத்து வரவுகள்.
வல்லவன் பார்த்துவிட்டு திரும்பும்போது பிடித்த தலைவலி விட ரெண்டு நாளாகியது. கதையல்ல நிஜம். சிம்பு தெனாவட்டாக பேசினாலும், விஷயம் இருக்கும் என்று நம்பினால், ஏமாற்றுகிறார். இப்போது ரஜினியை விட விஜய்யை க்லோசாக காப்பியடிக்கிறார். தனுஷை பார்த்து punch dialogueல் புகை விடுகிறார். நயன்தாரவை தாறுமாறாக கட்டி பிடித்து கடித்து கதை ஓட்டப்படுகிறது. சிம்புவின் பிடியிலிருந்து, படம் தோற்றவுடன் நயன்தாரா எஸ்கேப்.
கல்யாணராமன் பல் வைத்ததால் தன் நண்பர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கதை எழுதும் இந்த காலேஜ் மாணவனின் படம் பார்க்க செல்லும் மற்ற காலேஜ் மாணவர்களை கடத்துதல் நலம். சந்தானம் அவ்வப்போது லொல்லு சபா ஞாபகத்தில் சிம்புவை செமயாய் கலாய்க்கிறார். ரீமா சென், ஒரு வாரம் தொடர்ந்து படையப்பாவை பார்த்தது அவர் கண்ணில் வீக்கமும் நீலாம்பரியுமாய் தெரிகிறது. யுவன் ஓ, ஆண்டனி ஓஹோ, சிம்பு ம்ஹும்.
நந்தனம் YMCAவிலும், சென்னை / கோவை இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் சினிமா ஷுட்டிங் எடுப்பதை தவிர்க உடனடி சட்டம் வேண்டும். எந்த சினிமா போனாலும், சியாட்டலில் கூட, மச்சான் இது என் காலேஜ் என்று கத்துகிறார்கள்.
வரலாறான காட்பாதருக்கு ஏகப்பட்ட வரலாறு. இந்த படம் சம்பந்தப்பட்ட யாரோ இது நாயகனுடன் வந்திருக்க வேண்டிய படம் என்று சொன்னதாக ஒரு ‘டாக்’ வேறு. பார்த்தால் தான் தெரிகிறது, இது எழுபது எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய படமென்று. அங்காங்கே AVM தெரிகிறது. ஒரு பெரிய பங்களாவில் யுனிப்பார்ம் போட்ட வேலைகாரர்கள், எப்போதும் எதையாவது துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமோஷனல் ஸீக்வன்ஸில், முதலாளிக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று தெரியாமல் ஒன்றாய் சேர்ந்து கிசுகிசுக்கிறார்கள். எனக்கு தெரிந்து கடைசியாய் இப்படி வந்த படம், பேர் சொல்லும் பிள்ளை. பணக்கார அஜித், காலை எழுந்து பல் தேய்த்து குளித்து, டைனிங் டேபிளில் இருக்கும் சூடான இட்லி சாப்பிட மறுத்து, மாடிப்படி இறங்கும் போது, வேலைக்காரர்களுக்கு குட் மார்னிங் சொல்லிக் கொண்டே, பெண்கள் கல்லூரிக்கு பாட்டுப்பாட நண்பர்களுடன் ஏசி காரில் செல்கிறார். இதற்கு மேல் கதையில் சற்றே பைத்தியமான ஒரு அன்புள்ள அம்மா வேறு. தமிழ் சினிமாவின் வரலாறு சொல்லும் வரலாற்று படமிது.
அஜித்திற்கு இன்னும் டையலாக் டெலிவரி வர நாளாகும் போலிருக்கிறது. படத்தின் மூன்றில் மூன்று பாதியிலும் மூன்று வேடங்களில் ஆக்கிரமிக்கும் அஜித், மூன்றிலும் கோட்டைவிட்டது அவரின் காரியருக்கு அசம்பாவிதமே. காண்டாக்ட் லென்ஸ் வைத்துத் தான் இரட்டை வேட அஜித்தில் எந்த அஜித் யார் என்று அடையாளம் தெரிகிறது. ரஹ்மான் சில படங்களை நண்பர்களுக்காக செய்கிறேன் என்று ஒரு முறை சொன்னது இந்த படத்தில் புரிகிறது. நண்பர் யார் என்று தான் தெரியவில்லை.
கல்யாணத்துக்கு வந்த கூட்டம், கிளைமாக்ஸ் சண்டையை பார்க்க வரிசையாய் ரவுண்டு கட்டி நிற்கிறார்கள். யூ டூ ரவிகுமார் ?