மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன்.
“பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா ?”.
“ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”.
“ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…”
விசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு போன் பண்ணுடா. ஆமான்..நீ ஜோடி no. 1 பாக்கலியா. நல்ல கட்டம் இப்போ”. பதில் எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.
ஜோடி no. 1ஆ ? என்று கொஞ்சம் தலை சொறிந்தேன். அடுத்த நாள் சியாட்டலில் அடித்த புயலில், நகரமே இருட்டில் மூழ்க, ஜோடி no. 1 மறந்து போனது. சாப்பிட சாதமும், குளிக்க வெந்நீரும் இல்லாமல், அந்த கடுங் குளிரில் மூன்று வேளையும் ஹோல் வீட் பிரட்டும், க்ரேப் ஜெல்லியும் மட்டுமே மிஞ்சியது. பக்கத்து நகரத்தில் கரண்ட் இருந்த நண்பர் ஒருவர் போன் செய்து வீட்டுக்கழைக்க, அவர் போனை கீழே வைக்கும் முன்பு, குடும்பத்துடன் ஆஜரானேன்.
The Devil Wears Prada, செம கடியாக இருந்ததால் நண்பர் டீவியை திருப்ப விஜயில் ஜோடி no. 1 என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஸ்ரீதரின் பாட்டி சொன்ன “…நல்ல கட்டம் இப்போ”, ஞாபகம் வந்தது.
ஜோடி no. 1ல் சின்னத்திரை மெகா சீரியல் நடிகமணிகள், நடனமணிகளாகி குத்தாட்டம் போடுகிறார்கள். தமிழ் நாடு குலுங்குகிறது. அழுமூஞ்சி மனைவிகளாகவும், மாற்றான் மனை நோக்கும் கணவன்களாகவும், கோபத் தம்பிகளாகவும், கோள் சொல்லும் அத்தைகளாகவும் சின்ன திரையை ஆக்கிரமித்தவர்கள், வடுமாங்கா ஊருதுங்கோ என்றாட கூட்டம் ஆலாய் பறக்கிறது. அதை தவிர, போட்டியில் பங்கேற்பவர்களின் பேட்டியும், behind the sceneசும் ஒரு தனி ஏபிசோடாகிறது. இந்த behind the scenes ஏபிசோடில் சின்னத்திரை பிரபலங்கள் மச்சான் மச்சான் என்று கிண்டலடித்துக் கொள்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் போல மிமிக்ரி செய்து வயிறு வலிக்க சிரிக்கிறார்கள். போட்டியை விடவும் அதை தாண்டிய இந்த மாதிரி விஷயங்களில் தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.
விஜய் டீவி இது போல competition ஷோக்களை ஹிட்டாக்குவதில் பேர் போனவர்கள். ஸ்டார் டீவி உபயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தரம் உயருகிறது. ஒரு போட்டியையும் ஆங்காங்கே கொஞ்சம் reality டீவி கான்செப்டையும் ஊருகாயாய் சேர்த்தால், ஒரு ஹிட் போட்டி ரெடி. ரியாலிட்டி டீவி கான்செப்ட் எல்லா நாடுகளிலும் மிக மிக பிரபலம். அமெரிக்கன் அய்டலும், இண்டியன் அய்டலும், விஜய் சூப்பர் சிங்கரும், ஜோடி no. 1ம் இந்த மாதிரி ஒரு அரைகுறை ரியாலிட்டி டீவி தான். கூர்ந்து கவனித்தால் மேலும் புரியும்.
ரியாலிட்டி டீவியின் வெற்றிக்கு காரணம் மக்களின் ஒருவித வாயரிசம் தான். அந்த பிரபலங்கள் தங்களுடைய தின வாழ்கையில் எப்படி நடக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று அறியும் ஆர்வம். எல்லோர்க்குள்ளும் ஒரு பீப்பிங் டாம் ஒளிந்திருப்பதால் தான், எத்திராஜில் படிக்கும் ரம்யாவிலிருந்து, முண்டகன்னி அம்மன் கோயில் தெரு் எச்சுமி பாட்டி வரை, ஜோடி போட்டி கட்டிப்போடு்கிறது. இந்த பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் வாயரிச சந்தோஷம், மனிதனின் ஆதார குணங்களில் ஓன்று. லஞ்சம் போல. எந்த இந்திய தாத்தா வந்தாலும் அழிக்க முடியாது. வாயரிச கணங்களை குறைக்கலாம். அழிப்பதரிது.
ஏக ஹிட்டானதால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அடுத்து எந்த சூப்பர் ஷோ பண்ணலாம் என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் டீ டைமிலும், கறிகாய் மார்கெட்டிலும், ஆதிராஜ்-ரக்ஷனாவா / ராகவ்-ப்ரித்தாவா என்று அலசுகிறார்கள். நாட்கள் கழிகின்றன.