குறுங்கதை

மல்லி

“மல்லி, ஹவ் ஆர் யூ?”

“ குட் சார், நீங்க”

“ஆல் குட். பட் வொய் நாட் க்ரேட்”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. அக்ட்சுவலி ஐஎம் டூயிங் க்ரேட்”

“உங்க க்ரேட்டை இன்னமும் க்ரேட் ஆக்க போறோம். யூ ஆர் ப்ரோமோடட் அஸ் தி வொய்ஸ் ப்ரசிடன்ட் ஆப் மெஷின்லேர்னிங் ஆர்க். இந்த ஏரியால நம்ம கம்பெனிக்கு பெரிய ஹோப்ஸ் இருக்கு. மொத்தம் ஆறாயிரம் அனலிஸ்டுகள், பெரிய டீம். நீங்க தான் அதுக்கு தகுதியானவங்க. மத்தது பத்தி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம், இப்ப போய் வீட்டோட செலப்ரேட் பண்ணுங்க” என்றார் நாராயணன், அவள் நிறுவனத்தின் பிரசிடென்ட்.

“ரொம்ப…. தாங்ஸ் அ லாட் சார். என்மேல வைச்ச உங்க நம்பிக்கைக்கு”

சிரித்துக் கொண்டே தலைக்கு மேல் கையை உயர்த்தி சத்தமில்லாமல் கைத்தட்டும் பாவனை செய்தார்.

அந்த வீடியோ கால் துண்டிக்கப்பட்டவுடன் கணினியை மூடி விளக்கை அணைத்து விட்டு, லிப்டில் கீழிறங்கும் போது மாலை ஆறேமுக்கால் எனக் காட்டியது அவளது கைப்பேசி. கட்டிடத்தின் லாபியில் அங்குமிங்குமாக மென்பொருளாளர்கள் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கார் கேரேஜுக்குப் போய் காரில் ஏறி உட்கார்ந்தவுடன், உற்சாகத்துடன் ஷேகருக்கு குறுஞ்செய்தி அனுப்ப போனவளுக்கு, இன்ஸ்டாகிராமிலிருந்து வந்த notification கண்ணில் பட்டது. அவள் சினேகிதி இந்திரா சிங்கப்பூருக்கு போயிருக்கிறாள். அவள் போட்டிருந்த இன்ஸ்டா ஸ்டோரி அது. ’யாரப் பார்த்து மொற்சிகின’ என்ற பாட்டுக்கு இந்திராவும் அவளுடைய மூன்று வயது பெண்ணும் காற்றில் பானை பிடிக்கிற மாதிரி கைகளை ஆட்டி ஆட்டி நடித்துக் கொண்டிருந்தார்கள்.

க்யூட் குட்டி!!! என்று கமெண்ட் போட்டுவிடும் போது தான் பார்த்தாள். அவளுக்கு முந்தைய கமெண்ட் போட்டிருந்தவரின் பெயர் ஆனந்த் ஸ்ரீதர். அந்த S. ஆனந்தாக இருக்குமோ என்று தோன்றியது. முதுகுத்தண்டின் அடியில் சில்லென்று ஆகியது. சட்டெனத் தனது கமெண்டுக்கு பக்கத்திலிருந்த மூன்று புள்ளிகளை அழுத்தி, அந்த கமெண்டை அழித்தாள். ஆனந்தின் பெயரை அழுத்தி அவனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாள். அதே ஆனந்த் தான், கொஞ்சம் ஒள்ளியாய், மீசை வளர்த்து, கையில் ஒரு குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டபடி. அவன் தோள்பட்டையில் முகம் வைத்தவாறு சேலை கட்டிய பெண். மனைவியாய் இருக்கலாம், அழகாய்த் தான் இருக்கிறாள் என்று தோன்றியது.

ஆனந்த் ஆறாம் க்ளாஸில் St.John’s இருந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்து இவளுடைய வகுப்பில் சேர்ந்தவன். பணக்கார பையன் ஆதலால் வந்த இரண்டாம் வாரத்திலிருந்து வகுப்பில் ஏகப்பட்ட நண்பர்களைச் சேர்த்துக் கொண்டான். ஒரு நாள், இவளைப் பார்த்தவுடன் ஏனோ எகத்தாளமாய், “சித்திர குள்ளி மல்லி” என்றான். மல்லி தனது ஒத்த வயது பெண்களை விட உயரம் குள்ளமாய் தான் இருப்பாள். ஆனால் அன்று தான் அது அவளுக்கு உரைத்தது. அன்றைக்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் தன்னை விட குள்ளமா உயரமா என்று ஒரு முறை மனதால் அளக்க ஆரம்பித்தாள். ஆசிரியர் இல்லாத நேரத்தில், “சித்திர குள்ளி யாரு… நம்ம மல்லி” என்று சத்தமாய் வகுப்புக்கே கேட்கிற மாதிரி ஆனந்த் கத்துவான். ஒரு மாதத்தில் அது பக்கத்து வகுப்புகளுக்கு, ஸ்கூல் பஸ் எனப் பரவி வீட்டின் அருகில் இருக்கும் பையன்கள் வரை பரவிவிட்டது. கூடலூரு குண்டு மல்லி பாடலை கூடலூரு குள்ள மல்லி என்று மாற்றிப் பாடினார்கள். ட்யூஷன் சென்டரில் யாரோ அவளை அப்படிக் கூப்பிட்டார்கள். பங்குனி உத்திரத்தின் போது கோவிலில் அவள் பெயரைக் கத்தினார்கள். நூலகத்தில், பூங்காக்களில், பீச்சில், சினிமாக்களின் இடைவேளையில் என்று கல்லூரி வரை அந்தப் பெயர் நிலைத்துப் போனது.

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய், இன்ஸ்டாகிராமை விட்டு வெளியே வந்தாள். ”சித்திர குள்ளி மல்லி” என்று இன்ஸ்டாகிராமிலிருந்து ஆனந்தின் குரல் கேட்டது. நிற்காமல் அழுகை வந்தது.