
மாலினியின் குடும்பம் ரொம்பப் பெரியது. அவளுடைய அப்பா அவர் வீட்டில் கடைசிக் குழந்தை. அவருக்கு முன்னால் 6 அத்தை மற்றும் பெரியப்பாக்கள். அம்மாவின் வீட்டின் வழியாக 18 கஸின்கள். இந்த கூட்டத்தை விட பெரியது என்றால் அது அவளுடைய நண்பர்கள் தான். 4 நகரங்களில் 6 பள்ளிக்கூடங்களிலும் 2 பெரிய கல்லூரிகளிலும் படித்திருந்தாள். சரியான வாயாடி. அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.
மாலினி திருமணமாகி கணவனுடன் பெர்லினில் இருக்கும் பெரிய ஜெர்மன் வங்கியில் வேலை செய்யப் போனாள். வேலை போக மிச்ச நேரத்தைக் கணவனுடனும் whatsappபிலும் கழித்தாள். தினமும் ஸ்டேட்டஸ் போட்டாள், மறக்காமல் பிறந்தநாள் மணநாள் வாழ்த்து அனுப்பினாள், எல்லோரின் மெசேஜுக்கும் 👏🏽👍🏽👌🏽போட்டாள். எல்லோரும் அவளுக்கு பிறந்தநாள், மணநாள் மெசேஜ் அனுப்பினார்கள், 😍🎉😂 என்றும் எமொஜியிட்டார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் குளிர் ஜுரம் வந்தது. ஸ்டேட்டஸில் போட்டாள். 17 மெசேஜ்கள் 27 😭🥹😞 எமோஜிகளும் வந்தன. அவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் காரில் ஏறப்போனவள் தடுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டபோது, 8 மெசேஜ்கள் , 16 👩🏽🦽👩🏽🦯🤞🏽😘 எமோஜிகள். போன வருடம் கணவனுக்கு திடீரென்று டயபடீஸ் என்று ஸ்டேட்டஸ் போட்டாள், 6 மெசேஜ்கள், 8 டயபடீஸ் ஃபார்வர்டு மெசேஜ்கள் மற்றும் 20 😞🫶🏽 எமோஜிகள். போன மாதம், கணவன் நெஞ்சு வலியில் மறித்துப் போக, 60 RIPகள் மற்றும் 36 😭🫂 எமோஜிகள்.
இன்று மாலினியின் பிறந்தநாள். 260 க்ரூப் மெசேஜ்கள், 25 🎉💃🏽🥳எமோஜிகள். அவளுடைய எல்லா உறவினர்களும், நண்பர்களும் whatsappல் இருக்கிறார்கள்.
Leave a comment