போன வாரம் நெட்ஃபிளிக்ஸில் இரண்டு திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று White Tiger, மற்றொன்று Sir. இரண்டு திரைப்படங்களின் கதைகளிலும் நாயகர்கள் இந்தியாவில் எங்கும் பார்க்ககூடிய சாராசரியான வேலைக்காரர்கள்.
அரவிந்த் அடிகா எழுதி 2008ல் புக்கர் பரிசு பெற்ற வொயிட் டைகர் நாவலை பத்தாண்டுகள் கழித்து சாவகாசமாக படமாக்கி இருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த போது இருந்த அந்த வெடவெடப்பு இல்லாமல் இம்மாதிரி கதைகளை திரையில் பலமுறை ஏற்கனவே பார்த்திருப்பதால் கொஞ்சம் கொட்டாவி தான். நவ இந்தியாவில் சாதி மற்றும் அடிமைத்தனத்தால் உருவாக்கப்பட்ட கூண்டிலிருந்து வெளியேறும் ஏழை இளைஞன் பால்ராமின் கதை. சலுகை பெற்றவர்களை அவர்களின் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கவும், ஏழைகளை தெருக்களில் வைத்திருக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மோசமான அமைப்பின் மீதான முழு இரத்தக்களரி தாக்குதல். பால்ராம் சொல்வது போல் ஏழை வேலைக்கார்கள் கூட்டிலடைக்கப்பட்ட கோழிகள். அவனும் மற்றக் கூட்டிலடைப்பட்ட ஏழைகளும் ஒன்றுகூடி, கூச்சலிட்டு, திணறுகிறார்கள், அடுத்து யார் படுகொலை செய்யப்படுவார்கள் என்று காத்திருக்கிறார்கள். அடிகாவின் கதையின் மையத்தில் ஒரு இருள் இருந்தது, ராமின் பஹ்ரானியின் திரை வடிவத்தில் அது கொஞ்சம் காணாமல் போய்விட்டது.

2018 பம்பாய் சென்ற போது என்னை ஏற்றிச் சென்ற கருப்பு மஞ்சள் ஆட்டோகாரருக்கு நான் சரியாக ஹிந்தியில் சொல்லாததால் உள்ளூர் விமான நிலையத்துக்கு பதிலாக சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். விஷயம் புரிந்து அடுத்தொரு ஆட்டோ பிடித்து உள்ளூர் விமான நிலையத்துக்கு போகும் வழியில் எராளமான குறுகலான சந்துக்கள். அதில் குண்டும் குழியுமாக நீர் நிரம்பிய ரோடின் ஓரமாக ப்ளாட்பாரத்தில் தூங்கும் ஜனங்கள். அங்கிருந்து ஒரே ஒரு தெரு தள்ளி மேல்நாட்டு சாயல் கொண்ட ஹோட்டல்கள், கார்கள், சல்யூட் அடிக்கும் வாட்ச்மேன்கள். பம்பாய் மும்பாயாக மாறினாலும் நகரங்களுக்கே உண்டான அதன் அசுரகுணம் மாறுவதாயில்லை.
அந்த சலசலப்பான பெருநகரத்தில் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் வரும் ஒரு படிக்காத கிராமப் பெண் ரத்னாவின் பார்வையில் எடுக்கப்பட்ட படம், சார். ரத்னாவின் கனவுகள் பெரியவை, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் சமூக மற்றும் பொருளாதார தடைகளை எதிர்கொள்கிறாள். இதில் தன் எஜமானின் மேல் கொஞ்சம் காதல். பரஸ்பர மரியாதையில் ஆரம்பிக்கும் அவர்களின் உறவு, நட்பாகி இறுதியில் அன்பாகும் கதை.
ரத்னாவாக நடித்திருந்த திலோத்தமா ஷோம் ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு. பெரும்பாலும் உரையாடல் இல்லாமலேயே செல்லும் இப்படம் இந்திய சினிமாவின் வெற்றி என்று தயக்கமாய் சொல்லலாம்.
ஆனால் இவ்விரண்டு படங்களும் வேலைக்காரர்களைப் பற்றி இருந்தாலும் அது இந்தியாவையும் அதில் ஊறிப்போன முதலாளித்துவத்தையும் பற்றிய விமர்சனமாக எனக்குப் பட்டது.
ஒரு படத்தில் ஒரு முஸ்லிம் வேலைக்காரன் இந்துவாக நடிக்கிறான். விடிகாலையில் ரம்ஜான் நோன்புக்கு சமைக்கும் போது மற்றொரு வேலைக்காரன் பார்த்து விட, வேலையை விட்டு தன் ஊரைப் பார்க்க போய்விடுகிறான். மற்றொன்றில் சைவ வேலைக்காரி வேறு வழியில்லாமல் அதை மறைத்து எஜமானனுக்கு அசைவம் சமைத்து தருகிறாள்.
இரண்டிலும் உயர்குடி இளம் பெண்கள் கெட்ட வார்த்தை பேசினாலும் திறந்த மனதுடன் வேலையாட்களை நடத்துகிறார்கள். இரண்டிலும் நடுவில் பேசியதற்காக வேலைக்காரர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இரண்டிலும் எஜமானர்கள் வெளிநாட்டு ரிட்டன்கள். வேலைக்காரர்கள் தன் இடத்திலிருந்து வெளியேறி முன்னேற துடிக்கிறார்கள், புதிய விஷயங்களை அறிய முற்படுகிறார்கள். தோற்கிறார்கள்.
முக்கியமாக இரண்டிலும் எஜமானர்களுக்கு தத்தம் வேலைக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை, அறிந்து கொள்ளவும் முயல்வதுமில்லை. இதில் நம் எல்லோருக்கும் ஒரு செய்தி இருக்கிறது.
One response to “இரண்டு வேலைக்காரர்கள்”
எதார்த்த படமாக இருக்கும் போல இருக்கிறது. நானும் பார்க்கிறேன். நாங்கள் நேற்று சுடானி ஃப்ரம் நைஜீரியா என்ற மலையாளப்படம் பார்த்தோம். உணர்வு பூர்வமாண படம், அந்த தாயின் நடிப்பிற்ககாகவே அந்த படத்தை பார்க்கலாம்.
LikeLike