போன பத்தியை புனைவு என்று வகைப்படுத்தியிருந்ததை பார்க்காமல், நிஜமாவா? என்று புருவம் உயர்த்தியபடியே ஈமெயில் எழுதிய இரண்டு அன்பர்களுக்கும் இல்லை என்று பதில் போட நாளாகிப் போனது. யாரந்த எழுத்தாளர் என்று சிலரும் கேட்டிருந்தனர். நானும் அந்த ஈமெயில்களை இங்கே போட்டு பதில் எழுதினால் வித்தியாசமற்று போய்விடும் என்று…
தமிழில் சிறுகதையும் தொடர்கதையும் நாவலும் கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட இந்த நாளிலும் இந்த கப்சா வலைப்பதிவுகளை விழுந்தடித்து படிக்கும் தமிழர்களை சொல்ல வேண்டும். அப்படியே மிச்சிகனில் இருந்தும் டல்லாஸில் இருந்தும் பொழுது போகாமல் தமிழ் எழுத்தாளர்களை உசுப்பேத்தும் கம்ப்யூட்டர் ஆசாமிகளை பிடித்து, கடைசியாய் கடைசிப் பக்கம் வரை படித்த நாவல் என்னவோ என்று கேட்டால்,”ம்ம்ம்ம்….அதான் சார் வந்தியத்தேவன்….வந்து…பொன்னியின் செல்வன்” என்று சொல்லி விட்டு, “நீங்கள் குடித்த க்ளாசில் காப்பி குடிக்கிறேன் ஐயா” என்று அடுத்த மெயில் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
————-
சிறுகதைகளும் தொடர்களும் இல்லாத வாரந்திரிகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை. 20 வயது இளைஞ/ஞிகள் படிக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எங்கே எழுதப்படுகின்றன. தேடிப் பார்த்தாலும் அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்த பார்க்கும் நேர்த்தியான சிறுகதைகளை பார்க்க முடியவில்லை. அவர்களை மயக்கி தமிழில் படிக்க வைக்க சுஜாதா மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அவர்களை சிறுகதைகளை படிக்க வைக்க நம்மாட்கள் முற்படுவதில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துப் பார்த்து பயப்பட தேவையில்லை. தற்போதைய இளைஞர்களே படிக்காத பட்சத்தில் அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்பதெல்லாம் கப்சா.
இவர்களுக்கு எல்லாம் குமுதத்திலோ விகடனிலோ எழுதினால் படிக்க தோன்றுவதில்லை. ஃபேஸ்புக்கில் எழுதப்படும் முதல் தமிழ்ச் சிறுகதை பிரபலமாவது சர்வ நிச்சயம். படிக்கக் கூடிய சைஸில்(அதாவது ஐம்பது வரிகளுக்கு மிகாமல்), முடிக்கக் கூடிய வேகத்தில் எழுதினால் கண்டிப்பாய் படிப்பார்கள்.
எழுத்தாளர் பாராவின் கல்கி தொடர்கதையை முழுவதும் படித்தீர்களா ? நினைத்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. படியுங்கள். இந்த டுவிட்டர்வேக உலகத்தில், தமிழ்த் தொடர்கதைகளை படிக்கும் பொறுமை இருந்தால் நீங்கள கொடுத்து வைத்தவர்கள்.
————-
பசங்க என்ற படத்தை பற்றி கேள்விப்பட்டு பார்த்தால் அதீதமான கற்பனைக் காட்சிகள், அதிகப் பிரசங்கித்தனமான குழந்தைகள், கோடம்பாக்க சிச்சுவேஷங்கள், இடைச்சொருகலாக காதல். தமிழில் சிறுவருக்கான நல்லதொரு படத்துக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியது தான்.