சுஜாதாவை எடுத்துக் கொள்வோம். தமிழகமே கொண்டாடிய – ஆனால் இலக்கியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட – எழுத்தாளர். அவர் தன்னைப் பற்றிய ஒரு விபரத்தைக் கூட எழுதியதில்லை. சுயசரிதைத் தன்மையான எதையுமே அவருடைய எழுத்தில் பார்க்க முடியாது. ஆறே மாதங்களாக நான் வளர்த்து வரும் பப்பு, ஸோரோ பற்றி இதுவரை எத்தனையோ பக்கங்கள் எழுதிவிட்டேன். விவேக் கூட பேச்சை ஆரம்பித்த போது “பப்புவும் ஸோரோவும் எப்படி இருக்காங்க?”: என்று கேட்டு, தன் தந்தை வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி எவ்வளவோ சொன்னார். அவருடைய அப்பாவும் என்னை மாதிரியே, அவருடைய நாயை நாய் என்று விவேக் எகுறிப்பிட்டால் “நீதான்டா நாய்; இவனை ஏன்டா நாய் என்று சொல்லுகிறாய்?” என்பாராம்.
இதேபோல் அவர் தனது சொந்தப் பிரச்சினைகளையும் எழுதியதே இல்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய ஜீவனோபாயத்துக்காக வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து வந்தார். கடைசிக் கட்டத்தில் ஒரு அலுவலகம். ஒரு சிறிய அறை. சுஜாதாவோ ஆறு அடிக்கு மேல் உயரம். ஆறேகால் கூட இருக்கலாம். காலை நீட்டினால் எதிர் சுவர் இடிக்கும். எழுந்து நின்றால் மேலே தலை இடிக்கும். யாராவது விசிட்டர் வந்தால் சுஜாதா அவரை வெளியே வந்துதான் சந்திக்க வேண்டும். உள்ளே அவர் அறையில் இடம் இருக்காது. இப்படி ஒரு கல்லறை மாதிரியான ஒரு அறையில் தனது கடைசி காலத்தில் அவர் ஏன் வேலை செய்ய வேண்டும்? வேலை செய்யாவிட்டால் அவருடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாகி இருக்கும். எழுத்தின் மூலம் வரும் பணம் அவருக்கு ஒருநாளைக்குக் காணும். மீதி 29 நாட்களுக்கு எங்கே போவார்? இதைப் பற்றியெல்லாம் அவர் எங்கேயாவது எழுதியிருக்கிறாரா? எழுத மாட்டார்.
இந்த இரு பாராக்களை எழுதியவர் ஒரு ‘fantasy writer’. எந்த ஒரு எழுத்தாளைனையும் படிக்காமல், சூழ்நிலைக்கேற்ப தான் எழுதியதையே மாற்றி மாற்றி எழுதும் கலகக்கார so-called-எழுத்தாளர்கள் இருக்கும் வரை மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கேனக்கிறுக்கர்கள் தான்.
மேலே உள்ள இரண்டு பாராக்களை பிரித்து மேய்ந்து எழுத முடியும். எழுதினால் எனக்கும் இதை எழுதியவருக்கும் வித்தியாசம் இருக்காது. முக்கியமான விஷயங்கள் – சுஜாதா தன்னுடைய கடைசி பத்து வருடங்களாக எழுதியவை சுயசரிதை தன்மையுடைய கட்டுரைகளே. அவரே கற்றதும் பெற்றதுமில், விகடன் பாலசுப்பிரமணியன் சுயசரிதை எழுத சொன்னதாகவும். சுயசரிதை எழுதினால் வம்பு வரும் என்பதால், கற்றதும் பெற்றதும் போல எல்லாம் கலந்த பத்தி எழுதலாம் என தீர்மானித்தார் என்கிறார். கற்றதும் பெற்றதுமின் முதல் வருடத்தில் அவர் எழுதிய சுயசரிதை சம்பவங்கள் பல. இதையெல்லாம் தவிர தன் அப்பா மறைந்தவுடன் எழுதிய அப்பா அன்புள்ள அப்பா முதல் முதல் ப்ளைட் ஓட்டிய அனுபவம், வீடு மாறிய அனுபவம், பெண் பார்த்த அனுபவம், குடும்பத்துடன் எல்டிசியில் தமிழ்நாடு டூர் போன அனுபவம் என அவர் தன்னுடைய சுயசரிதையை பிரித்து பிரித்து பல இடங்களில் எழுதியிருக்கிறார்.
இந்த பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஜீவனோபாயத்துக்காக என்கிற வார்த்தையை கவனிக்கவும். இந்தப் பாரா முழுவதும் பொய் என சுஜாதாவே எழுதியதை வைத்தே சொல்ல முடியும். பணத்தை பற்றி தனது கவலைகள் பல ஆண்டுகளுக்கு முன்னே போய்விட்டதாகவும், தான் தற்போது எழுதுவது எல்லாம் ஒரு ஆர்வத்தினால் மட்டுமே என்று பலப்பல முறை கூறியிருக்கிறார். கடைசி வரை பணத்துக்காக அன்றி நண்பர்களுக்காக மட்டும் சினிமா வசனம் எழுதியவரை பற்றி அவரது இறப்புக்கு பிறகு திரித்து எழுதுவது இங்கே மட்டுமே சாத்தியம்.
ஒரு அரை மணி நேரம் வேஸ்ட் செய்து இவரின் வலைதளத்தை மேய்ந்ததால் கிடைத்த பிற விடயங்கள், இந்த எழுத்தாளருக்கு சமீபத்தில் வாசகர் வட்டம் அதிகரித்து இருக்கிறதாம். அமெரிக்க பல்கலைகழகத்தில் படிக்கிறார்களாம். சினிமா விமர்சனம் என்னும் பேரில் கதாகாலட்சேபம். ஹிட் ரேட் கூடியிருக்கிறதாம். கமல் படிக்கிறாராம். கொண்டாடுகிறார்களாம். கொஞ்சம் காமெடி டைம் நிறைய Hallucination.