சுஜாதாவின் வீடு

sujatha's house

இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள்.

குமுதத்தில் ரஞ்சன் எழுதிய சுஜாதாவின் வீடு என்னும் கட்டுரைக்கு, வலைப்பதிவுகளில் எதிர்ப்பு என்று எதோ கிளம்பி இருப்பதை பார்த்து மெளனமாய் சிரிப்புத் தான் வருகிறது.

வலைப்பதிவுகளை பற்றி ஏளனமாய் குமுதம் எழுதிவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாம் இது. உண்ணாவிரதம் நடத்தாத குறை.

அவர் சொன்னதைப் போல இதற்காகவே காத்திருந்தது போலத் தான், எல்லாமே அவசர அவசரமாய் நடந்து விட்டன. உண்மையாகவே பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் எல்லோரும் சுஜாதாவின் மறைவிற்கு பின் அஞ்சலியை பதிவு செய்து விட்டார்கள்.

அவர் இருக்கும் வரையில், கண்டுகொள்ளாமல் இருந்த எழுத்தாளர்கள், உப-எழுத்தாளர்கள், சக-எழுத்தாளர்கள், டு-பி-எழுத்தாளர்கள் என எல்லோரும் அஞ்சலி செலுத்திய இடம் இணையம் தான். பல so-called எழுத்தாளர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு போகும் போது, புக்ஸ்டோரில் நிறுத்தி அவரின் இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கி கொண்டு , வீட்டிற்கு செல்வதற்குள் படித்து முடித்து எழுதிய அஞ்சலி போல, பல அஞ்சலி கட்டுரைகள் ஏகமாய் superfluous. சிலவற்றில் வாரிசு சண்டை தொனியும் தென்பட்டது.

சுஜாதாவைப் பற்றி அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர் ரஞ்சனின் குமுதத்தில் எழுதிய இந்த கட்டுரை, அவர் மறைவின் ஆற்றாமை தாங்காமல் வந்து விழுந்த, உண்மையான ஒரு வாசகனின்/நண்பனின் வரிகளாகவே எனக்கு தோன்றுகின்றன.

இதையெல்லாம் எதிர்த்து தர்ணா ஊர்வலம் கூட்டுபவர்களுக்கு, சுஜாதாவின் பதவிக்காக புத்தகத்தை பரிசளிக்கலாம். முன்னமே சொன்ன மாதிரி, சுஜாதாவின் வரிகளை மீண்டும் மீண்டும் நெட்ரூ பண்ணலாம். இந்தியாவில் அரசியல் கலக்காத விஷயங்கள் இல்லவே இல்லை, குழந்தையின் சிரிப்பைத் தவிர. எங்க…திருப்பி சொல்லுங்க பார்க்கலாம்…

பி.கு – இணையத்தில் எழுதுபவர்கள் மனநோயாளிகள் என்று அரசு பதில்களில் எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ? என்று அன்பர் ஒருவர் எழுதியிருந்தார். அரசு பதில்களை எல்லாம் ரொம்பவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு glorified கிசுகிசு பத்தி தான் அது.

குமுதத்திற்கு வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மறைவைப் பற்றி எழுதும் போது, இந்த சண்டையெல்லாம் இழுப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.மேலும் கர்சீப் போட்டு இடத்தைப் படித்த கமெண்ட் என்னவோ established எழுத்தாளர்களை நோக்கியே இருந்ததாகவும் தோன்றுகிறது.