சிறிசு = பெரிசு

seth godin small is the new big

சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய Small Is The New Big. பார்த்த Namesakeஇன் தொல்லை தாங்கவில்லை.

சேத்தின் வலைப்பதிவை படித்துக் கொண்டு வருபவர்களுக்கு இந்த் புத்தகம் புதிதல்ல. அவரின் வலைப்பதிவில் இருந்தும், அவரின் சில பல பேச்சுக்களிலிருந்தும் எடுத்து தொடுக்கப்பட்ட விஷயங்கள் தான் இந்த புத்தகம். எட்டு வருடங்களாக குருவி சேர்த்த எழுத்துகளாததால், ஹாரி பாட்டர் போல ஒரேடியாக உட்கார்ந்து படித்தால், மவனே சத்தியமாக தலை வலிக்கும் என்று முன்னுரையில் சொன்னாலும், கொரியாவிலிருந்து சீயாட்டல் வருவதற்கு முன்பு படித்துக் கிழித்தாயிற்று. வழக்கம் போல ப்ளைட் சாப்பாடு சாப்பிட பிடிக்காமலும், சேத்தின் எச்சரிக்கையும் சேர்ந்து செம தலைவலி.

சேத் ஒரு மார்க்கெட்டர். அதை தவிர அவருக்கு பல வேலைகள் உண்டு. ஆனால் மார்க்கெட்டிங்கில் புலி. இந்த புத்தகத்தில் மார்க்கெட்டிங் மாயாஜாலம் தவிர பல விடயங்களை பற்றி உரத்த சிந்தனை செய்கிறார். உதாரணத்திற்கு, 94’ல் தான் ஒரு இணையதளத்தை உருவாக்க நினைத்ததை பற்றி சொல்லும் போது, தான் நினைத்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவும், யாஹூ நிறுவனர்கள் அதை செய்து வெற்றியும் பெற்றார்கள் என்கிறார். இதற்கு அவர் விவரிக்கும் காரணங்கள், யாஹூ நிறுவனர்கள் இளங்கன்றுகள், பயம் அறியாமல் அவர்கள் ஆரம்பித்த இணையதளம் இணைய உலகத்தை மாற்றிற்று. தன் பல வருட அனுபவத்தினால் அந்த செயலில் உள்ள அபயாம் அறிந்து, அந்த எண்ணத்தை விடுத்து, இன்னும் புத்தகம் எழுதி சொல்பமாய் சம்பாதிக்கிறார்.

இணைய உலகத்தை பற்றியும், எப்படி ப்ளாக்குகள் பல கம்பெனிகளை, அதன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கின்றன என்பது பற்றியும் ஏராளமான கட்டுரைகள். இணையத்தில் புதிய சேவையையோ, புதிய மாறுதலையோ கொண்டு வரத் தேவையான அளவுக்கு புதிய ஐடியாக்கள் வேண்டுமாயின் பாத்ரூமில் வைத்து படிக்கலாம். அங்கு தான் பல பெரிய சிந்தனைகள் தோன்றுகின்றன. ஆனால் சேத் சொல்வது போல ஒரே சிட்டிங்கில் முடித்தால், தலை வலிக்கும்.

சேத் காடினின் இந்த வீடீயோவை பார்த்தால், தலை வலித்தாலும் அவரை படிப்பீர்கள் – Sliced bread and other marketing delights. ரிமார்கபிள்.

இப்பொழுதே படி !!

Harry Potter 7

கடைசி புத்தகம் வந்தாகிவிட்டது. இத்துடன் ஹாரி பாட்டர் ரசிகர்கள், என்னைப் போல் ஹாரி பாட்டர் படிக்காதவர்களை muggles, என்றழைக்க முடியாது. நாமும் குரு சிஷ்யன் ரஜினி/ பிரபு போல, “இப்போ என்ன செய்வீங்க” என்று அவர்களை இடுக்கலாம்.

நேற்றிரவு பார்னஸ் அண்டு நோபிளில், ஹாரி பாட்டர் பார்ட்டியை வேடிக்கை பார்க்க போயிருந்தேன்[படங்கள்]. ஜே கே ரவுளிங், தமிழ் நாட்டில் பிறந்திருக்கலாம் என்று எண்ணும்படி, காட்டுக் கூட்டம். யூடியூப்பில் இருக்கிறது, ஜே கேவின் பயோகிராபி. புத்தகம் படிக்காவிட்டாலும், கட்டாயம் பார்க்க வேண்டியவை.

தளபதி

thalapathi

நானும் மணிகண்டனும், BSA SLRல் டபுல்ஸ் அடித்துக் கொண்டு போய், எக்மோர் அல்ஸா மாலில் உள்ள ஹாட் பிரட்ஸில், டிக்கெட் வாங்கினோம். கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு, தீபாவளிக்கு ஒரு வாரமே இருக்கும் ஒரு திருநாளில். தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் ரஜினி படத்திற்கான ப்ரீமியர் ஷோ டிக்கெட். அப்போதிருந்த விலையில், அந்த இரு பத்தாங்க்ளாஸ் மாணவர்களுக்கு, அந்த ஐம்பது ருபாய் டிக்கெட் ரொம்பவும் காஸ்ட்லி. மணிரத்னத்துடன் படம் பார்க்க கொடுத்த விலை. இயக்குனர் மணி ரத்னம். இசை இளையராஜா. படம் தளபதி(1991).

கமலை வைத்து நாயகன்(1987) எடுத்திருந்த நேரத்தில், மணி ரத்னம் பிரபலமாயிருந்தாலும், அவ்வளவு எதிர்பார்ப்பில்லை. ஆனால் நாயகன் இந்திய சினிமாவை புரட்டி போட்டதால் மணி ரத்னத்தின் மேல் பல பார்வைகள் ஆர்வமாய் பதிந்திருந்தன.

மணிரத்னம், நாயகனுக்கு பிறகு அடுத்த இரண்டு வருடங்களில், இரண்டு ஹிட்டுகள் கொடுத்திருந்தார். 88ல் வந்த அக்னி நட்சத்திரமும், 89ல் வந்து தமிழ்/தெலுங்கில் கல்லூரி மாணவர்களை கலக்கி எடுத்த இதயத்தை திருடாதேவும், மணி ரத்னத்தை உயரங்களுக்கு அழைத்துச் சென்றன. 90ல் வந்த அஞ்சலி வெற்றி பெறவில்லை என்றாலும், மணி ரத்தினத்திற்கு சறுக்கலில்லை.

மணியின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க போகிறார் என்ற செய்தியே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மணி ரத்னத்தின் பிற படங்கள் போல் படம் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, தளபதி என்ற பெயரை தவிர யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. எந்த மாதிரி படம் என்றும் யாராலும் யூகிக்க முடியவில்லை. அமிதாபச்சன் நடிக்கிறார், அனில் கப்பூர் நடிக்கிறார் என்ற ஏகப்பட்ட யூகங்கள் வேறு ரஜினி ரசிகர்களை துரத்திக் கொண்டிருந்தன.

thalapathi

செப்டம்பர் இறுதியில் பாடல் கேசட் வெளியீடு என்ற விளம்பரம் வெளியானது. லஹரி என்ற நிறுவனம் ஆறு விதமான பாடல் கேசட் அட்டைகளில் இசை வெளியிட்டது. ராக்கம்மா கைய தட்டு பாடலும், காட்டுக் குயிலு பாடலும் ஏகமான ஹிட். அதற்கு பிறகு நவம்பர் மாத ரஜினி ரசிகன் இதழில் , சாமுராய் ஸ்டையிலில் கத்தியுடன் ரஜினி நிற்கும் ஒரு மெகா சைஸ் ப்ளோ-அப்பும், தளபதி ஹைப்பை ஹைய்யில் வைத்திருந்தன.

முதலில், ரஜினி மாதிரி ஒரு அய்கானிக் இமெஜை, மணி ரத்னம் போன்று நகரத்திற்காக படமெடுக்கும் ஒரு பிரபல டைரக்டர் எப்படி கையாளப்போகிறார் என்ற கவலை ஒரு பக்கமிருந்தது. மணி ரத்னம் கையில் ரஜினியா, ரஜினி கையில் மணி ரத்னமா என்ற கேள்விக்கு விடை வந்தபாடில்லை.ஆனாலும், மணி ரத்னம் படங்களை ரசித்திருந்த தமிழ் நாடு, ரஜினியோடு இணைந்திருக்கும் தளபதியை பார்க்க சுவாரசியமாய் இருந்தார்கள்.

thalapathi

படம் வெளியானது. பழைய கர்ண கதை தான் என்றாலும், யாரும் காண்பிக்காத ஒரு எளிய ரஜினியை மணி ரத்னம் அறிமுகப்படுத்தினார். தனது சூப்பர் ஸ்டார் இமெஜை தக்க வைத்துக் கொண்டும், அதே சமயம் கதைக்கு ஏற்றபடி, மடித்து விடப்பட்ட முழுக் கைச்சட்டையும் ஒரு காட்டன் பேண்டும் அணிந்திருந்தார் ரஜினி. கிட்டத்தட்ட மணி ரத்னத்தின் படத்தில் ரஜினி என்ற நிலை. ரொம்பவும் ஏகபோகமாய் செலவழிக்காமல், டெக்னிகலாக மிக கச்சிதமாக எடுக்கப்பட்ட படம்.

Picture Postcards என்னும் வகையில், ரஜினியை மிக அழகான ஆங்கிள்களில், இளமையாய் காட்டிய படம். படம் ஏக ஹிட். சுந்தரி பாடலில், ஒரு ராஜா காலத்துக் குட்டி காதல் கதையை சொல்லியிருந்தார் மணி. சாமுராயாய் ரஜினியை பார்த்த ரசிகர்களுக்கு ஏக உற்சாகம். ரஜினி, மணி ரத்னம், இளையராஜா, மம்முட்டி என்று சேர்ந்தடித்ததில், 175 நாள் ஓடியது படம்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் ஈகா தியேட்டர் ரொம்பவும் பெரியது. தீபாவளிக்கு முந்தைய நாள், காலையிலிருத்தே குதித்துக் கொண்டிருந்தோம். அன்று இரவு, படம் முடியும் வரை மணிரத்னத்தை நாங்கள் பார்க்கவில்லை. பார்க்கவும் முயற்சிக்கவில்லை. எங்கள் பக்கத்தில் இருந்த அந்த வயதானவரையே இடைவேளையில் தான் அடையாளம் கண்டு கொண்டோம். மெளன ராகத்தில் வரும் மிஸ்டர் சந்திரமெளலி.

thalapathi

அடுத்த நாள், தீபாவளி அன்று உதயம் தியேட்டரில் ரஜினி ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் ஏக சண்டை. தளபதி வெளியான அன்று தான், கமலின் குணாவும் வெளியானது. இந்த பக்கம், தளபதி கட்-அவுட் பற்றிக் கொண்டு எரிய, அந்தப் பக்கம், குணா கமல் கட்-அவுட்டில் எரிந்து கொண்டிருந்தார். அன்றுதான் ரஜினி/கமல் ரசிகர்களின் சண்டையின் உச்சக்கட்டம். அதற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்தே, இருவரின் படங்களும் ஒரே நாள் வெளியாயின.

சக்தி அபிராமியில் தளபதி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. நானும், மணிகண்டனும் கிட்டத்தட்ட பதினான்கு முறை தளபதி பார்ததுவிட்டிருந்தோம். கடைசி முறை, படத்தில் இருக்கும் அத்தனையும் அத்துப்படியானதால், இடைவேளையில் வெளியே வந்து, குப்பை பொறுக்கும் இரு சிறுவர்களுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து விட்டோம்.

பின்குறிப்பு – போன மாதம் சென்னை சென்றிருந்த போது ரஜினியின் சிவாஜி படம் பார்த்தேன். ஷங்கர் டைரக்ட் செய்திருந்தார்.

%d bloggers like this: