ட்ருமேன் கப்போட்டி

capote_film.jpg

1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து ஜெயிலில் அடைக்கிறது. அடுத்த நாள், நியுயார்க் டைம்ஸில் இந்த செய்தியை படித்த ட்ருமேன் கப்போட்டி என்ற பிரபல எழுத்தாளர், இதை பற்றி எழுத கான்ஸாஸ் செல்கிறார். இரண்டு குற்றவாளிகளில் ஒருவனிடம் நட்பாகி, அவன் மனதை புரிந்து கொண்டு எழுத நினைக்கிறார், தன் வாழ்க்கை முற்றிலுமாய் மாறப்போவதை அறியாமல்.

இது கதையல்ல நிஜம். 50களில் வாழ்ந்த, Breakfast at Tiffany’s என்ற பிரபல நாவல் எழுதிய, தான் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தன் நாவல் மூலமாக உணர்ந்த ஒரு பிரபல நாவலாசிரியர் ட்ருமேன் கப்போட்டியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இப்படம்.

கப்போட்டி ஒரு விளம்பர பிரியர். பார்ட்டியில் தண்ணி போடும் போது மற்ற எழுத்தாளர்களை கலாய்க்கிறார். தன்னைப் பற்றி தானே உயர்வாக பேசுகிறார், கோர்ட்டு வாசலில் ஆனா நிக்கோல் ஸ்மித் போல சிவப்புக் கம்பள போஸ் கொடுக்கிறார். மொத்தமாக ஐம்பதுகளின் ஒரு ஸ்காட் பிட்ஸ்கிரால்டு பர்சனாலிடி.

அந்த நள்ளிரவு கொலையை பற்றி படித்தவுடன் கான்ஸாஸ் நகரில் இறங்கி, போலீசிலிருந்து கைதி வரை தன்னுடைய பிரபல்யத்தை வைத்தே அரசு இயந்திரத்தை உடைத்து, செய்தி சேர்க்கிறார். அந்த கொலைகாரனை தன் நண்பனாக்கி, அந்த கொலை பற்றிய விஷயமறிகிறார். தன் இளமை பருவத்தை போலவே, அவனுடையதும் பழுதடைந்து இருப்பதால், ஒரு தருணத்தில் அவனை நேசிக்கவும் ஆரம்பிக்கிறார். இடையில் தன்னுடைய எழுத்தாள காதலனோடு ஸ்பெயின் சென்று கடலை பார்த்துக் கொண்டு குடைக்கு அடியில் பழரசம் குடிக்கிறார்.

ஸ்பெயினிலும் பின் அமெரிக்காவிலும் அடுத்த ஒரு வருடத்தில் அந்த புத்தகத்தை எழுதுகிறார். அப்போது தான் தனக்கு தூக்கு வந்திருப்பதாகவும் அது நிறைவேற்றப்படும் போது கூட இருக்குமாறு அந்த கைதி தபால் அனுப்புகிறான். கான்ஸாஸ் சென்று, ஒரு மாதிரி நெளிந்து கொண்டே தூக்கை சாட்சியாக பார்க்கும் கப்போட்டியை அந்த சம்பவம் உலுக்குகிறது. நம்மையும் தான். ஒருவனை தூக்கிலிடும் அந்த நொடியில் அந்த சமூகமே தூக்கில் தொங்குவதாக சொல்கிறார்கள். அதை உணர முடிகிறது.

அப்புத்தகம் In Cold Blood என்ற பெயரில் தொடராக 1965ல் வெளிவந்து சக்கை போடு போட்டது. ராண்டம் ஹவுஸ் 1966ல் அதை நாவலாக வெளியிட்டது. அ-புனைவு நாவல்(non-fiction novel) என்னும் புத்தக வகையில் வெளிவந்த முதல் புத்தகம் அது. அதற்கு முன் non-fiction novel என்றே ஒன்று கிடையாது. இந்நாவலில் ஒரு தேர்ந்த கதாசிரியரின் நுணுக்கமான விஷயங்களை சொல்லும் பாணியையும், புனைவுகளில் கிடைக்கக்கூடிய கதை சொல்லும் உத்தியையும் சேர்ந்து பயன் படுத்தியது தான் கப்போட்டியின் வெற்றியே.

இந்த படத்தில் கப்போட்டியின் நண்பியான ஹார்பர் லீயும் கூடவே வருகிறார். To Kill a Mocking Bird என்னும் ஓரே புத்தகத்தின் மூலமாக உலக புகழடைந்த எழுத்தாளர் அவர். அந்த புத்தகத்தையே கப்போட்டி தான் எழுதினார் என்றும் ரூமருகிறார்கள்.

பிலிப் சீமோர் ஹாப்மேன்(Philip Seymour Hoffman) என்னும் நடிகர் தான் கப்போட்டியாக நடித்தவர். மிஷன் இம்பாஸிபிள் 3யின் வில்லன். கப்போட்டியாக நடித்ததற்காக ஆஸ்கார் விருது பெற்றார். உங்களுக்கு இந்த படம் பிடித்தால் அதற்கு காரணம் பிலிப். தனது மிகவும் subtle ஆக்டிங்கினால் கலங்க அடிக்கிறார். கப்போட்டி போலவே மெல்லிய பெண் குரலில் பேசுகிறார். சமிபத்தில் பார்த்த படங்களில் மிக சிறந்த ஆக்டிங் இவருடையது தான்.

In Cold Blood புத்தகம் கப்போட்டியின் வாழ்கையை மாற்றியது. புகழ் வந்தது. ஆனால் கைதிகளுடன் கழித்த அந்த ஒரு வருடம் அவரை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பின் அவர் எந்த நாவலையும் எழுதவேயில்லை. பதினான்கு வருடங்கள் கழித்து, 80களில் Music for Chameleons என்று ஒரு கதை கட்டுரைப் புத்தகம் மட்டும் வெளிவந்தது. எழுதுவதில் நாட்டம் குறைந்தது கப்போட்டியின் விதியே. கப்போட்டியை கேட்டுப் பாருங்கள், “All literature is gossip” என்பார்.

Create a website or blog at WordPress.com