பின் கதைச் சுருக்கம்

தீவிரவாதம், முதலாளித்துவம், எல்லை, யுத்தம் என்றெல்லாம் பரபரப்பு கட்டுரைத் தொடர் எழுதும் பா. ராகவனின், எழுத்தாளர்கள் பற்றிய ஒரு அமைதிப் புத்தகம், பின் கதைச் சுருக்கம். கல்கியில் தொடராய் வந்து வரவேற்பு பெற்றதாக பின் கதைச் சுருக்கத்தின் முன்னுரை கூறுகிறது.

17 நாவலாசிரியர்கள். 17 நாவல்கள். ஒரு இணைக்கும் பாலம். அனுபவங்கள். இதிலுள்ள 17 நாவலாசிரியர்களையும் அவர்களின் ஒரு நாவல் பற்றிய சிறு குறிப்பும், அந்த நாவலுக்கு பின்னுள்ள சில ஆழ்ந்த அனுபவங்களுமே இதன் களம். இதிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் ஒரு பர்சனல் பையஸுடன் தேர்ந்தேடுத்ததாக எழுதுகிறார் பா ரா.

தனது சொந்த நாவலான, அலை உறங்கும் கடல், எழுதுவதற்கு உதவிய ராமேஸ்வர அனுபவங்களில் இருந்து ஆரம்பிக்கும் முதல் கட்டுரையும், பா ராவும் அவர் நண்பன் வெங்கடேஷும் ஒரு வாரம் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கன்யாகுமரியில் ஒரு ideal placeல் நாவல் எழுத சென்ற கட்டுரையும் மிகப் பிடித்தமானவை. எழுதறதுனா இன்னா சார் ? என்று கேட்பவர்கள் இந்த கட்டுரைகளிலிருந்து ஆரம்பிக்கலாம்.

அசோகமித்திரனின் ஒற்றன் நான் மிக விரும்பி படித்த புத்தகம். அதை அலசி ஆராய்ந்த பத்தியை படித்தால், ராகவனுக்கு அந்த புத்தகம் ஏன் பிடித்தது என்று புரியும். ஜீன்ஸ் போட்ட அகத்தியர் என்று நாகூர் ரூமியை குறிப்பிடும் அத்தியாயத்தில் ரூமியின் குட்டியாப்பா நாவலுக்கான பிண்ணனியை சுவையாக விளக்குகிறார்.

கொஞ்சமாய் மனங்கனக்க வைத்த அத்தியாயம் கேரள பஷிரை பற்றியது. தனது தியாக காதல்/காதலியை பற்றி எழுதிய சில டயரிக் குறிப்புகளிருந்து உருவான அனுராகத்தின் தினங்கள் நாவலின் பின்ணணி கதை. பஷிர் ஒரு sheer genius.

இவை தவிர, இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் எழுத வைத்த போலாந்து நாட்கள், கார்சியா மார்ககுவஸ் 100 years of solitude எழுத ஆரம்பித்த அந்த டிரைவிங் நொடி, மாலனை ஜனகணமண எழுத உந்திய ஒரு டைனிங் டேபிள் குடும்ப சண்டை, டால்ஸ்டாயின் resurrection நாவலின் அச்சுக் குழப்பம், சல்மான் ருஷ்டிக்கும் மிட்நைட்ஸ் சில்ட்ரன் நாவலின் சலிம் சின்னாய்க்கும் உண்டான தொடர்பு, ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் இலக்கிய வட்ட சர்ச்சை என்று சுவாரசியமான தேர்தெடுப்புகளின் இணைப்பு.

கிழக்கு பதிப்பகத்தின் மிக சுமாரான மேல் அட்டை போடப்பட்ட புத்தகமும் இதுதான். எதோ விண்டோஸ் ஸ்கிரின்சேவர் போல ஒரு டிஸைன், பின் அட்டையில் படிக்க முடியாத சிறிய எழுத்தில், பாரா கையால் எழுதிய முன்னுரை. அடுத்த பதிப்பில் புத்தகத்தை ரீடிஸைன் செய்யலாம்.

படித்து முடித்தவுடன், நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்ற இந்த புத்தகத்தின் tag-line புரிகிறது. மிகத் தெளிவாக.