எம்பாட்டு ஜிம்பாட்டு !!

ஜிம், எக்ஸர்சைஸ் எல்லாம் வீணர்கள் செயல் என்று நினைத்த காலமெல்லாம் போய், நாளொரு டிரட்மில்லும் பொழுதொரு ஸ்டிரச்சுமாகி விட்டது. முதன்முதலில் டிரட்மில் செய்ய ஆரம்பித்த போது, ஒன்றும் புரியாத பால காண்டத்தில், டீல் காத்தாடி பிடிக்க தப தப என்று தலைதெறிக்க வெள்ளாளத் தெருவில் ஓடியது போல, டிரட்மில்லில் ஏறிய நொடியில் இருந்து ஓட ஆரம்பித்தேன். இரண்டு நிமிடத்தில் ஆக்ஸிஜன் போதாமல் மூச்சடைக்க, கால் அகட்டி நின்றுவிட்டேன். இப்படியாக பத்து நிமிடத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போய், அதைவிடுத்து சைக்ளிங் செய்து கொண்டே எவ்ரிபடி லவ்ஸ் ரேமண்ட் பார்ப்பது வழக்கமாகி விட்டது. இது நடந்தது போன வருட ஆரம்பத்தில்.

சில மாதங்களுக்கு பின் ஜிம்மே கசக்க ஆரம்பித்து, வீட்டிலேயே ரேமண்ட் பார்க்க ஆரம்பித்தேன். ஆறு மாதத்திற்கு முன்பு சினிமா பைத்தியம் முற்றி போய் ஆயிரம் பொன் கொடுத்து வாங்கின ஹெச்.டி.டி.வி புரஜெக்டர் வேறு ஜிம் போக விடாமல் முடக்கி போட்டது. இப்போதெல்லாம் லாஸ்டும், டெஸ்பரேட் ஹவுஸ்வொய்வ்ஸும் கூட புரஜெக்டர் பெரிய ஸ்கிரினீல் தான்.

இரண்டொரு மாதத்திற்கு முன் பிலுபிலு என்று மனைவி பிடித்துக் கொண்டதால், ஜிம் வாசம் அதிகரித்தது. அதுவரை ஓடிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த St.Angerம், மெமரி ரிமைன்ஸும் போர் அடிக்க கொஞ்சமாய் தமிழ் ரீமிக்ஸ் பக்கம் தாவினேன். அதற்கு பின் எடுத்த ஓட்டம் இன்னும் நின்றபாடில்லை. சினிமா பாட்டு சாராயம் போல என்று பாலகுமாரன் எழுதியது நினைவுக்கு வருகிறது. அனாயசமாக ரீமிக்ஸுகிறார்கள். லூஸுப் பெண்ணையும் ரியல் ஸ்லிம் ஷேடியையும், இஞ்சி இடுப்பழகாவையும் நெல்லி புர்டாடோவையும் கிரியேட்டிவாக கலக்குகிறார்கள்.

டிரட்மில்லில் போரடிக்காமல் ஓட வைக்கும் பாட்டுக்களுக்கு சில விதிமுறைகள் –

கண்டிப்பாக அவை 120 BPM[beats/min] இருக்கவேண்டியது அவசியம். வெறும் instrumentalஆக இல்லாமல் பாடல்களாக, அதுவும் தங்கள் தாய்மொழியிலிருந்தால் சுபம். இருவிழி உனது இமைகளும் உனது போன்ற சோக ரொமாண்டிக் பாடல்கள் கேட்டால், டிரட்மில் தானாக நின்று விடும்.

தத்துவ மற்றும் ஹீரோயிச பாடல்கள் தான் ஓட வைக்கும் நிஜ ஹீரோ. அதற்காக சத்தியமே லட்சியமா கொள்ளடா செல்லடா பாடல்கள் வீட்டோடு நிறுத்துவது நல்லது. ரஜினி/விஜய் படங்களில் இருக்கும் அத்தனை introduction பாட்டுக்களும் கட்டாயம். கமலில் 80களின் டிஸ்கோ பாடல்களில் சில கலக்கல்.

அட!! அச்சமில்லை அச்சமில்லை சொன்ன பாரதி தில்…தில் தில் போன்ற வரிகளில் சற்றே புல்லரித்தாலும் நிற்காமல் ஓடுவது அவசியம். யாரோட உயர்வையும் யாராலையும்… விஷ்க் விஷ்க் விஷ்க் விஷ்க்… தடுக்க முடியாதுடா !! போன்ற விணாப் போன தத்துவ வரிகளின் போது அந்த படத்தில் சுறுசுறுப்பாய் நடனமாடும் விஜயையும், அவரை விட நன்றாக ஆடும் அந்த இடது பக்க குருப் டான்ஸரையும் நினைத்துக் கொண்டே ஓடினால், தத்துவ ஓவர்டோஸிலிருந்து தப்பலாம்.

ஷங்கர் படம் போல சில பாடல்களுக்கு சீஸனாலிடி உண்டு. இரண்டு வாரங்களுக்கு முன் நன்றாயிருந்த பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவாவையும், ஆள்தோட்ட பூபதியையும், இப்போது கேட்டால் போரடிக்கிறது. அதனால் ஒரு 30-40 பாடல்கள், mp3 பிளேயரில் ஸ்டோர் செய்வது உடல் நலத்திற்கு நல்லது.

அவ்வப்போது டிரட்மில்லில் அடிக்கடி ஓடும் பாட்டுக்களை இந்த எம்பாட்டில் போடுகிறேன். இப்போதைக்கு பதிற்றுப் பத்து –

1) நீ முத்தம் ஒன்று கொடுத்தால்[ரேடியோ ரீமிக்ஸ்] – போக்கிரி
2) மேகம் கொட்டட்டும்[ரீமிக்ஸ்] – எனக்குள் ஒருவன்
3) வாடா வாடா தோழா – சிவகாசி
4) உயிரின் உயிரே – காக்க காக்க
5) ஒரு நாளில் வாழ்க்கை[ரீமிக்ஸ்] – புதுப்பேட்டை
6) வெற்றிப் படி கட்டு – படையப்பா
7) மின்சாரம் என் மீது – ரன்
8) கொடுவா மீசை அறுவா பார்வை – தூள்
9) அர்சுனரு வில்லு – கில்லி
10) காதல் வளர்த்தேன்(காட்டுத்தனமான ஒரு DJ edit) – மன்மதன்

Create a website or blog at WordPress.com