பார்வை 360 – சுஜாதா

குமுதத்தில் இந்த வாரம் முதல் சுஜாதா எழுதும் ஒரு 360 டிகிரி தொடர். ஆரம்பதிலேயே தனது புத்தகங்களிலிருந்து தமிழ் சினிமாவாக மாறியவற்றை கலாய்கிறார்.

1965 என்று ஞாபகம். ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற கதை வெளிவந்தபோது, வாசகர்களிடமிருந்து அதைப் பாராட்டி நிறையக் கடிதங்கள் வந்தன. ஆசிரியர் எஸ்.ஏ.பி. அதற்கான செக் அனுப்பும் அச்சிட்ட படிவத்தின் ஓரத்தில் ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று பொடிப்பொடியாக ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அந்தச் சிறு குறிப்பே எனக்கு உற்சாகமளிக்கப் போதுமானதாக இருந்தது. விளைவு சுஜாதா.

அன்று எஸ்.ஏ.பி. அந்தக் குறிப்பை அனுப்பியிராவிட்டால், இன்று இந்தக் கட்டுரைவரை வந்திருக்கமாட்டேன்.

சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம்.

Create a website or blog at WordPress.com