ரமண சரிதம்

ramana saritham mathurabharathy kizhakku

சுந்தரம் என்னும் நண்பன், “என்னடா எப்ப பார்த்த்தாலும் சி, சி++ன்னு ஜல்லி அடிக்கற, வாழ்கைல நீ பாக்க வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு ராசா. வா போலாம்” என்று அழைத்துப் போனது தான் திருவண்ணாமலை. இது நடந்தது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. அதற்கு பிறகு அவனுடனும், அவனில்லாமல் தனியாகவும், வேறு சில நண்பர்களுடனும் பல முறை சென்று வந்தாலும், அங்கிருக்கும் அந்த ஈர்ப்பு சக்தி எதனால் என்பது பிடிபடவில்லை. கடவுளா, அந்த மலையா, பிரம்மாண்டமான கோயிலா, அமைதியான ரமனாஷ்ரமமா அல்லது இவை எல்லாம் கலந்த காரணங்களா என்று புரியவில்லை. ரமணரின் ‘நானார் ?’ புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் மீண்டும் மீண்டும் படித்து புரிந்தாய் நினைத்தாலும், புரியவில்லை. படித்து புரியக்கூடிய விஷயமல்ல என்பது மட்டும் புரிந்ததால் அதை படிப்பதை விட்டாகிவிட்டது.

சென்ற மாதம் சென்னையிலிருந்து வந்த புத்தகங்களில், மதுரபாரதி எழுதிய ரமணசரிதமும் ஓன்று. கிழக்கு பதிப்பகம் 2005ல் வெளியிட்ட புத்தகம் இது. இதன் ஆசிரியர் மதுரபாரதி, முன்னுரையில் அவர் நாத்திகனாய் இருந்து, பால் பிரண்டனின் A Search in Secret India படித்த பின் கண்டுகொண்ட ரமண மகரிஷி பற்றி கூறுகிறார்.

திருச்சுழியில் ஒரு ஆருத்ரா தரிசனத்தன்று பிறந்த ரமணரின் வாழ்க்கையை, வார்த்தை விளையாட்டால் மிகைப்படுத்தாமல் எழுதப்பட்ட இப்புத்தகம், ரமணரின் ‘நான்’ அழிந்த ஒரு 1896 வருட தினத்தில், சற்று எட்ட நின்று பார்க்கிறது. பிறகு ஓட்டமும் நடையுமாய், வெங்கடரமணன் என்னும் அந்த பதினேழு வயது இளைஞனை பின் தொடர்ந்து திருவண்ணாமலை செல்கிறது. அன்று முதல் ரமணரின் வாழ்க்கையில் ஓவ்வொரு முக்கிய சம்பவத்தையும் விடாமல் குறிப்பெடுக்கிறது.

பாதாள லிங்கத்தின் அருகில் உட்கார்ந்திருந்த ரமணருக்கு பாலூட்டியவர் முதல் விருபாக்ஷ குகையில் இருந்த போது சமைத்துப் போட்ட எச்சம்மா பாட்டி, “இந்த மனுஷன் என்ன நினைக்கிறான், ஒண்ணும் புரியலியே” என்று முணுமுணுத்த ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், பசு லட்சுமி, இவன்தாண்டா ஞானி என்று மனம் மாறிய பால் பிரண்டன் வரை எல்லாமும் இருக்கிறது. நண்பர்கள் வாயிலாக கேட்ட சில சின்ன சின்ன anecdotes கூட எழுதப்பட்டிருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

ரமணர் மதங்களுக்கு அப்பார்ப்பட்டவர். அவர் சொல்லிய விஷயும் எல்லா மனித மனங்களும் செய்யக்கூடியது தான். இதுதான். நான் யார் ? நானென்பது இவ்வுடலா ? இந்த உடலா என்று இப்போது நினைக்கிற ஆன்மாவா ? விடை கண்டுபிடித்தால் நீங்கள் competition postcardல் எழுதி போட மாட்டீர்கள். உண்மை புரிந்து ரமணரை போல் புன்னகைப்பீர்கள் என்கிறார்கள்.

ஒரு தீவிர ஆராய்ச்சி இல்லாமல் கண்டிப்பாய் எழுத முடியாது. அதுவும் இருநூறு பக்கங்களுக்குள் இவை அனைத்தையும் அடைப்பது கூட சாதனை தான். ஆங்காங்கே கதையை நிறுத்தி, கொஞ்சம் விளக்கமளித்து சீரிய தமிழில் எழுதியிருப்பது, மதுரபாரதியின் தேர்ச்சி தான்.

தமிழ் படிக்க தெரிந்து, ‘நான் யார்’ன்னு கேட்கிறாரே முதலில் இவர் யார் என்று நினப்பவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டிய ஒரே புத்தகம்.

மேலும் பார்க்க – The Eternal Light, Archive Films and Reweaving Shiva’s Robes.

Create a website or blog at WordPress.com