புதுப்பேட்டை

pudupettai

போன வருடம் வந்த படங்களில், எந்த படம் சிறந்த படம் என்று ஏகத்துக்கு எழுதி குவித்து விட்டார்கள். டீவிடி அட்டைகளுக்கு கதை சுருக்கம் எழுதுபவர்கள் கூட விமர்சகர் போர்வையில் தமிழ் சினிமா விமர்சனம் எழுதும் இந்த கலேபர காலத்தில் உண்மையான சிறந்த படம், கவனிக்கப்படுவது கடினமே.

போன வருடத்தில் நிறைய தமிழ் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், பார்த்த பத்து பன்னிரண்டில் பிடித்தது இவ்விவை. புதுப்பேட்டை மற்றும் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. இவ்விரண்டும் எந்த லிஸ்டிலும் அதிகம் இடம் பெறாதது துரதிஷ்டவசமே.

புதுப்பேட்டை ஓடவில்லையென்று கோவித்துக் கொண்டு, கல்யாணம் முடிந்தவுடன் இந்திப் பக்கம் போய் விட்டார், இயக்குநர் செல்வராகவன். ஏ ஆர் ரகுமானுடன் சேர்ந்து Macbeth என்னும் இந்திப் படம் செய்வதாய் கேள்வி.

என்ன தான் மேற்கத்திய படங்களில் இருந்து ஓரிரண்டு சீன்களை சுட்டாலும், புதுப்பேட்டையில், உண்மையை கசக்க கசக்க சொல்லியிருக்கிறார். “இது உன் பிரச்சனை குமாரு. நீ மூர்த்தி தம்பிய போட்ட அவங்க உன்ன போடறதுக்கு அலயரானுங்க. இதுல நாங்க உள்ள பூந்தா கேங் வாராயிட்டும்” என்ற வசனங்கள் தமிழர்களுக்கு அலுத்து விட்டாலும், ஒரு தாதாவிற்குள்ளே இருக்கும் உண்மையான மரண பயத்தை காண்பித்த செல்வராகவன் இன்னும் இரண்டு ப்ளாப் கொடுத்தாலும் பரவாயில்லை.

க்ளாசுக்கு போகாமல் படிச்ச நாய்களை கிட்டே வராமல் விரட்டியடிக்கும் குமார், கொக்கி குமாராகும் குற்றச் சரித்திரம் தான் படம். பாத்திரங்களின் வார்ப்பிலும், சட்டென்று ஏதிர்பாராமல் கட் செய்யப்படும் காட்சிகளிலும், பிஜியெம்மிலும், கமலின் நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும் பாடலிலும், காட்பாத்ர் ஸ்டைலில் தந்தையை கொல்லும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் ஸ்லைடிலும் மற்றும் சில செல்லுலாய்ட் கணங்களிலும், தமிழ் சினிமா புதிய உயரங்களுக்கு சென்றது. சினேகா தான் படத்தின் வீக்கெஸ்ட் லிங்க். மற்றபடி வருடம் ஒரு படம் இப்படி non-judgementalஆக வந்தால் ‘ஓஹோ’ தான்.

போன வருடத்தில் சிறந்த படப்பதிவு செய்யப்பட்ட பாடல் இடம் பெற்ற படமும் புதுப்பேட்டை தான். இரண்டு பாடல்கள் பிடித்தன. ஒன்று புல் பேசும் பூ பேசும். இரண்டு நெருப்பு வாயினில்.

‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ ஒரு சுமாரான போரடிக்காத படமாயிருந்தாலும், ஹீரோக்கள் தாதாக்களாக மாறும் தமிழ் சினிமாவிலிருந்து இது ஒரு எஸ்கேப் பாண்டஸி. இந்தியில் இந்த பார்மேட் படங்களுக்கு ஏக கிராக்கி. இதே படத்தை கொஞ்சம் காசு போட்டு, இந்திக்கார குட்டிகளை வைத்து எடுத்தால் பாம்பே மல்டிப்பிளக்ஸில் கூட்டம் அம்மும்.

ஆங்காங்கே ‘அட’ போட வைத்த புது இயக்குநர் விஜய் மில்டனுக்கும், புது ஐடியாக்கள் கொண்ட புது பசங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால், இது போன்று சில டஜன் படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் சில்லரை பார்க்கலாம். இல்லாவிட்டால் ஷங்கரும், கெளதமும் ப்ளாக்பஸ்டர் எடுக்க காத்து கொண்டிருக்க வேண்டியது தான்.

இவை தவிர பார்த்து ரசித்த மற்ற படங்கள் – பட்டியல்(விஷ்ணுவர்தனுக்கு தமிழ் சினிமாவின் மசாலா பார்மேட் புரிந்திருக்கிறது), இம்சை அரசன் 23ம் புலிகேசி(சிரிப்புத் தோரணமான ஒரு நல்ல படம்) மற்றும் திருட்டுப் பயலே(நன்றாக ஆரம்பித்து கடைசியில் சற்றே சொதப்பியது. நடிக்காமல் போனால் சுசி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் சான்ஸுண்டு).