
இவ்வருடம் வாத்தியாரின் நினைவு நாளில் ஒரு விஞ்ஞானச் சிறுகதை எழுதி பதிப்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட எழுதியும் முடித்துவிட்டேன். ஆனால் அதை கொஞ்சம் லாவகமாக எடிட் செய்து முடிக்க நேரம் ஆகிவிட்டது.
இன்றுடன் வாத்தியார் மறைந்து பதினெட்டு ஆண்டுகள். சுமார் நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாத்தியார் எழுதிய ஒரு விஞ்ஞான சிறுகதையில் இருந்து இரண்டு பத்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிருந்த ஒரு வியப்பு இதைப் படிக்கும் போது இன்றும் இருப்பது தான் சுஜாதா.
//
“நிலா வியப்புடன் ஜீனோவைப் பின்தொடர்ந்து நடந்தாள். ‘இயந்திரங்கள் தப்பு செய்யுமா, என்ன? நேற்று முன் தினம் இதே கட்டடத்துக்கு வந்து சிபியுடன் விவியில் கால் மணி பேசியிருக்கிறேன். இதே நம்பர்தான், இதே கட்டடம்தான். எப்படி சாத்தியம்? இதுவரை எந்த இயந்திரமும் தப்பு செய்து பார்த்ததே இல்லை. கோவாபரேட்டிவில் அரிசி பொறுக்கும் இயந்திரம் வார ரேஷன் ஒரு குந்துமணி அதிகப்படியாகக் கொடுக்காது. மின்சாரக் கட்டுப்பாட்டு இயந்திரம், கொடுக்கப்பட்ட யூனிட்டுகளுக்கு மேல் ஒரு செகண்டு தாமதிக்காது. ஃப்யூசைப் பிடுங்கிவிடும். மைக்ரோ சாகசங்கள் அத்தனையும் இதுவரை ஒன்றும் பிசகியதில்லை…’ நிலா ஜீனோவிடம் சொன்னாள்.
‘மனிதன் அமைத்த எதுவும் பழுதாகச் சாத்தியம் இருக்கிறது. கவலைப்படாதே. வீட்டுக்குப் போனால் சிபி இருப்பார் அல்லது அவர் எண் மாறியிருக்கும். இந்த நூற்றாண்டு முழுவதும் எண்கள்தானே. முன்னொரு காலத்தில் ஒரு சித்தர் பாடினார். ‘இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குமோ’ என்று. இந்த நாட்களில் எல்லாமே இலக்கம்தான்! சமூகப் பாதுகாப்பு எண்ணை மறந்தால் ஒரு ஆள் செத்தான்! உனக்கு நிச்சயமாகத் தெரியுமா, 11343 தானா? சிபிதானா? என்று கேட்டது ஜீனோ.” //
— என் இனிய இயந்திரா / En Eniya Eyainthira by சுஜாதா
Leave a comment