யார் தவறு?

”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது தான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார் சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்களாக குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோவை வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ’அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட ரெடியாக இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் கொஞ்சம் சென்சேஷனஸைல் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்க கடினமாய் இருந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படித்தவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்து கடினமாக இருக்கிறது. விகடனில் எழுதினால் இவரா அவர் என்று அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படிப்பது வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். முத்தாய்ப்பாக போகிற போது எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் ஆசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கவும்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்று hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

Create a website or blog at WordPress.com