மன்மதன் அம்பு பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் தோன்றிற்று, கமல் மணி ரத்னம் போன்ற திரைக்கதாசிரியர்கள், தமிழ் சினிமாவின் வழக்கமான அபத்தத் தொடக்கத்தினை சற்றே மாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆற்றங்கரையில் பொழுது புலர்ந்து, சூரியன் உதித்து, பறவைகள் பறந்து, இலைகள் அசைந்து ஆரம்பிக்கும் படங்கள் வருவது நின்று சில காலம் ஆகிற்று. ஆனாலும் ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய எடுத்துக் கொள்ளப்படும் ஆயத்தங்கள் குறையவில்லை. ராவணனிலும் ம.அ.விலும் படமும் கதையும் சடுதியில் ஆரம்பிக்கின்றன. என்ன ஏது என புரிய சற்றே நேரமெடுத்தாலும் படத்துக்குள் போய்விடுகிறோம். கமலைத் தவிர மற்ற காரெக்டர்கள் டக்கென அறிமுகமாகி சட்டென மனதில் பதிந்து விடுகின்றன. நிற்க. இதற்கு மேல் ஏறக்குறைய, ஆமாம் ஏறக்குறைய, எல்லாமே குறைகளின் பட்டியல் தான். படிக்க விரும்பாதவர்கள், வலது மேல்புறம் இருக்கும் இண்டூ குறிக்கு குறி வைக்கலாம்.
படத்தின் கதை தமிழ் சினிமாவின் சாஸ்வதமான பார்முலாக்களில் ஒன்று. கட்டிக்கப் போகும் பெண்ணைத் சந்தேகப்படும் டு-பி கணவனும், அவளை பல்வேறு காரணங்களுக்காக துரத்தி, சிரித்து, அழுது ஒருவழியாய் மணம் செய்யும் ஹீரோவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள். ஆரம்பத்தைத் தவிர திரைக்கதையில் புதிதாக ஒன்றுமேயில்லை. இதையே முழுமையான காமெடியாக செய்திருக்கலாம் என்றாலும் கமல் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாதிரியான ப்ளாக் காமெடி தான். கதையில் ஒரு எமோஷனல் உபகதையும், காமெடி கதையும் உடன் பயணிக்கின்றன. காமெடி சீன்களில் ஹீரோ காமெடியாய் நடித்தாலும் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சோகம் சிரிப்பை மட்டுப்படுத்துகிறது. இவ்வகை கதையைத் தான் எடுக்க வேண்டும் என நினைப்பது தப்பல்ல, ஆனாலும் விளம்பரமும் கதையும் வெவ்வேறு ஜான்ராவைக் குறிப்பதனால் குழப்படி கேஸ் என மக்கள் திண்டாடுவது தெரிகிறது. மும்பை எக்ஸ்ப்ரஸுக்கு பிறகு இது இரண்டாவது முறை.
இருபதாவது முறை என்றும் படத்தில் ஒன்று இருக்கிறது. கதையில் இறந்து போன மனைவியோ காதலியோ, கமலுக்கு அமைவது. விக்ரமில் ஆரம்பித்து, வேட்டையாடு விளையாடு வரை என்று இணையத்தில் லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமலின் தனி வாழ்க்கைச் சோகம் அவரையும் தாண்டி அவர்தம் படத்தில் வழிகிறதோ என தோன்றுகிறது. அவ்வை சண்முகி, விருமாண்டி, வசூல்ராஜா போன்ற படங்களின் பாடல்களில் கொஞ்சம் சோகச் சரித்திரம் எட்டிப் பார்த்தன.
எதிர்பாராத விதமாய் வந்து விழும் கதாபாத்திரம் என்று எதுவுமே இல்லை. வாயாடி குழந்தை, கான்செர் நண்பன், குடிகார சந்தேகப் பிராணியான ஆண்டி-ஹீரோ என எல்லோரும் கார்ட்போர்ட் காரெக்டர்கள். எந்த கதாபாத்திரமும் முன்னுக்கு பின் முரணாக நடப்பதில்லை. ஹீரோ ஏமாற்றுவதற்கு ஒரு சரியான காரணம் இருக்கிறது, ஒரு சோக ப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு ரிவர்ஸ் ஸ்லோமோஷன் பாடல் ஒன்று தான் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. என்ன தான் இதற்கு பல ஹாலிவுட் மற்றும் அலைபாயுதே உதாரணங்களைக் காட்டினாலும், இத்தகைய கிளைக்கதைக்கு இவ்வகை தயாரிப்பு ஏக பொருத்தம்.
பாரீஸ் விமான நிலையக் காட்சிகளில் மனுஷ் நந்தன் கலக்குகிறார். ஆனால் கடைசி வெனிஸ் காட்சிகளில், அவற்றில் நடிப்பவர்களின் சன் க்ளாஸ்களில் சினிமா ஷூட்டிங் ரிப்லெக்டர்களும், காமிராவும் அதன் அருகில் நிற்பவர்களும் தெரிவது துரதிஷ்டம்.
இவை தவிர கமலுக்கு வயசாகி விட்டதும், குழந்தைகளுக்கு கமல் எடுக்கும் கோலோசியம் பாடமும், மாதவனின் காரியர் அசம்பாவிதமும், திரைக்கதை ஓட்டைகளும், கவிதா பிரதாபங்களும் இன்னபிற விஷயங்களும் ஏகமாய் இருந்தாலும், தமிழ்நாட்டில் எல்லோரும் கமல்/ரஜினி படங்களை ஒரு முறையேனும் பார்த்துவிடும் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால், அதிகம் விவாதிக்காமல் இருந்து விடலாம்.
000
சமீபத்தில் பார்த்த மற்றொரு சுமார்ப் படம், டெவில். மனோஜ் நைட் ஷ்மாளன் தயாரிக்கும் முப்பெரும் படங்களில் முதல் படம். நகர வாழ்க்கையில் அமானுஷ்யத்தை கலக்கும் முயற்சி.
நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் லிப்ட் நடுவழியில் நின்று விடுகிறது. காமிரா மூலம் செக்யூரிடியும் போலீஸும் உள்ளே நடப்பதைப் பார்த்தபடி இருக்கிறார்கள். உதவி செய்யப் போகிறவர்கள் சாகிறார்கள். லிப்டின் உள்ளே ஐந்து பேர். போலீஸ் அவர்களைப் பற்றி ஆராயும் போது தான் எல்லோரும் ஒருவிதத்தில் குற்றவாளிகள் எனத் தெரிகிறது. உள்ளே இருக்கும் பேய்(!) ஒவ்வொருவராய் கொல்கிறது. யாராவது தப்பித்தார்களா என்பது மிச்சக் கதை. இவ்வகைப் படங்களில் முதல் பாதி பயமுறுத்தினாலும் முடிவு சுமாராய்த்தான் இருந்தாக வேண்டும் என்பது இவ்வகைக் கதைகளின் கதி. படுபயங்கரமான முடிவுடைய பேய்ப் படங்கள் மிகக் குறைவு. க்யூப்ரிக்கின் The Shining கூட so so முடிவு தான்.
– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.