சுஜாதாட்ஸ் – 2

பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லி வருகிறேன். விமானத்தில் உச்சந் தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல இருக்கும் ஹோஸ்டஸ்ஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கெட் அள்ளிக் கொள்கிறார்கள். ’லாக் அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. டாக்ஸிக்காரன் ‘ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான்(பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்).

உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரு. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள்.ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக்கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள்.

சிவப்பு விளக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான் கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசைகளின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை, மற்றொரு கையில் ஈவ்னிங் நியூஸ். வாங்குங்கள் வாங்குங்கள் என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி…

டில்லி மாறவில்லை.

– கணையாழியின் கடைசிப் பக்கம், பிப்ரவரி 1974

Create a website or blog at WordPress.com