சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி.
ஒரு மாதமாவது அந்தப் பக்கம் போய் விட்டு வரலாம் என்பதற்குள், இந்தப் பக்கம் காய்ந்து விட்டது. இருக்கியா இல்லயா என்று சில விசாரிப்புகள் வேறு. இந்த மாதிரி இரண்டுப் பக்கமும் மாற்றி மாற்றி எழுதினால், இழந்த சக்தி வைத்தியரிடம் போக வேண்டியது வரலாம். ஆகவே கூடிய சீக்கிரம் எதாவது ஒன்றை(அதாவது அந்தப் பக்கத்தை) மூடி விட்டு, ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் தொந்தரவுகளை எல்லாம் சற்று நிறுத்தி, பூதக் கண்ணாடியில் சூரியன் போல, எனர்ஜியை ஒரு முகமாய் குவிக்க எண்ணம்.
~
கமலின் தசாவதாரத்தை பற்றி எதாவது எழுதியே ஆக வேண்டும். என் பக்கத்து வீட்டு செல்ல நாய், ஸ்பார்கி கூட dogspeak என்னும் வலைப்பதிவில் எழுதிவிட்டதாக குலைத்தது. எல்லாவற்றிலும் தசாவதாரம் தான். வலைப்பதிவுகள், அவ்வப்போது இயங்கும் டுவிட்டர் என்று வலையுலகம் இந்தப் படத்திற்கு பெரிய விழா எடுத்தாகிவிட்டது. வலைத்தளங்களில் மேலும் எழுத பாண்ட்விட்த் இல்லாததால், தமிழர்கள் உள்ளங்கையில் எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சக இந்தி இந்தியர்கள், கொஞ்சம் வெளிரிப் போய், தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கமலஹாசன் என்கிற நடிகரை தமிழ்த் திரையுலகம் எப்போதோ கண்டு கொண்டு விட்டது. கமல் என்கிற எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் தெரிகிறது. தசாவதாரத்தில் கமல் என்கிற எழுத்தாளனின் குழப்பங்களும், புத்திசாலித்தனமும் வெவ்வேறு கலவைகளில் தெரிந்தன. ஹேராமிலும் அப்படித் தான். இருந்தாலும் தமிழின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்று இப்பொழுது கமலைச் சொல்லலாம். விருமாண்டியிலும் தசாவதாரத்திலும் கமல் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி உலகத் தரத்திற்கு இல்லை என்றாலும், மிகச் சிறந்த வளர்ச்சி தான். அதெப்படி என்று சண்டைக்கு வர நினைப்பவர்கள், Babelலின் டீவிடியை பார்க்கவும். மேலும் இந்த மாதிரி அரை டஜன் சினிமாக்களை எடுத்துக் காட்ட நான் ரெடி.
“கமல் என்கிற கலைஞன் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறும் கடின உழைப்பை பார்க்கிறேன்” என்று தசாவதாரம் பற்றியும் கேயாஸ் தியரி பற்றியும் நிறைய எழுதிய சுஜாதா, கடைசியாக படத்தை பார்க்காமல் போய் விட்டதை பற்றி கமல் கண்டிப்பாய் வருத்தப்பட்டிருப்பார். நாமும் தான்.
கமல் வைத்த 2006 புத்தாண்டுப் பார்ட்டிக்கு பிறகு, கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா எழுதிய வரிகள் இவை.
புத்தாண்டை வரவேற்க கமல்ஹாசனின் பார்ட்டிக்கு டைரக்டர் ஷங்கருடனும், என் மகனுடனும் போயிருந்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிசாகக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் ‘ஹு இஸ் ஹூ?’ போல இருந்த பார்ட்டிக்கு, வந்தவர்களைவிட வராதவர்களைச் சுலபமாக எண்ண முடிந்தது. ஸ்ருதி கமல்ஹாசன்… அமெரிக்கா எல்.ஏ-&யில் படித்துக்கொண்டு இருப்பவர், லீவுக்கு வந்திருந்தார். இளமையும் அழகும் இனிமையும் கலந்து வரவேற்க, ‘வேட்டையாடு விளையாடு’, ‘புதுப்பேட்டை’ படப் பாடல்களுடன் டி.ஜே. உபயத்தில் திடும்திடும் ஓசையும் உச்ச டெசிபல்களில் ஒலிக்க, கமல் க்ளோஸ் கோட்டில் ஸ்மார்ட்டாக இருந் தார். சந்தடியில் கிடைத்த சந்தில், ‘ப்ருஸ் அரசுவோட நாயைக் கொன்னுடறான் சார்’ என்று ‘தசாவதாரம்’ லைனை விட்ட இடத்தில் தொடர்ந்தார்.
தசாவதாரம் படத்தை பார்த்த பொழுது ப்ருஸ் என்கிற கதாபாத்திரத்தையும் அரசுவின் நாயையும் காணோம். கதை மாறியதா ? காரெக்டர்கள் மாறியதா ?
எனக்கு தசாவதாரம் பிடித்திருந்தது. படத்தில் கேயாஸ் தியரி பற்றி கமல் க்ளாஸ் எடுக்கும் போது, தெரியும் அ-சுவாரசிய செயற்கைத்தனமும், அதை ஸ்க்ரிப்டில் கொண்டுவரும் போது தெரியும் புத்திசாலித்தனமும் இரண்டற கலந்துள்ள படம். மூன்று மணி நேரத்தில், பாக்கெட்டிலிருந்து பாப்ஃகார்ன் எடுத்து சாப்பிடக் கூட முடியாதபடி கண்களை கட்டிப் போடும் tour-de-force திரைக்கதை. பத்து கதாபாத்திரங்களில் கமல். ஒரு சிலவற்றில் ப்ளாஸ்டிக் தெரிகிறது. மற்றதில் கமல் தெரியவில்லை. சபாஷ் !!
இந்தப் படத்தின் உண்மையான கதைக் கரு, கமல் சொல்ல வந்த கேயாஸ் தியரி, கடவுள் உண்டா இல்லயா, விஷ்ணுவின் தசாவதாரத்துக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை என்றெல்லாம் கணினி இன்ஜினியர்கள் போரடிக்கும் ஆபிஸ் நேரத்தில், பக்கம் பக்கமாக ஈமெயில் எழுதிக் இணையத்தில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
~
போன வாரம் பார்த்த கற்றது தமிழ்[தமிழ் எம்.ஏ] என்கிற படம் பிடித்திருந்தது. தெளிவாக ஆரம்பித்து கடைசியில் சற்றே குழம்பிப் போய் முடித்திருந்தாலும், ராம் என்கிற அந்த புதிய இயக்குனர் கண்டு கொள்ளப் படவேண்டியவர். படத்தின் நடுவே, நானே சிவம் என்று யோகிகளுடன் பாங்க் சாப்பிட்டு விட்டு ஜீவா ஆடும் ஆட்டம் தமிழ் சினிமாவிற்கு புதியது. துல்லியமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங்[ஸ்ரீகர் பிரசாத்], ஆரவாரமான நடிப்பு[ஜீவா, அஞ்சலி] என்று அசத்தியிருக்கிறார்கள்.
கணினி தொழிலால் நலிவடைந்த பிற தொழிலாளர்களின் நிலையை கொஞ்சமாய் எடுத்துச் சொல்லும் விதம் அசட்டுத்தனமாக இருந்தாலும், உண்மை உரைக்கிறது. தாடி வைத்து முகமே மாறிப் போனாலும், கண்களில் மின்னும் நடிப்பால், ஜீவா has arrived. அடுத்த தலைமுறை அசட்டு ஹீரோத்தனங்கள் இல்லாத இயல்பான நடிகன்.
~
சமீபத்தில் நல்ல புத்தகம் எதும் படிக்கவில்லை. புத்தகமே படிக்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், புத்தகம் படிப்பது குறைந்திருக்கிறது. அதே மாதிரி சினிமா பார்ப்பதிலும், இண்டர்நெட்டை பராக்கு பார்ப்பதிலும் கொஞ்சம் சலிப்பு வந்திருக்கிறது.
சியாட்டலில் ஒரு வழியாக வெயில் வந்துவிட்டது. போன வாரம் முதல் அஃபீஷியல் சம்மர். இன்று மழை. இதான் சியாட்டல்.