3 X 9 = டிஸ்லெக்ஸியா

taare_zameen_par.jpg

அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் தாரே சமீன் பர் கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி.

புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ.

இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய மசாலாவாக இல்லாமல் ஹாலிவுட் படம் போல் நகரும் படத்தில் நிஜ கோமாளியாய் புகுந்து குழப்பியடிக்கிறார். சிறந்த நடிப்பிக் அவர் மிளிர்ந்தார் என்று விமர்சகர்கள் சொல்வதெல்லாம் சுத்த புருடா. ஏதோ சாதாரணமான படத்தை காப்பாற்ற வந்த பரமாத்மா போல தன்னை நினைத்துக் கொண்டு, இரண்டாம் பாதியில் எல்லா சீன்களிலும் இழுத்துப் போட்டுக் கொண்டு மூஞ்சியை காட்டுகிறார்.

தனது இயக்கதில் வரும் படம், தோற்று விடாமல் இருக்க, தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கப் போய், மெல்லிய சிம்பொனி போல இருந்த படம், சிவாஜியின் திரிசூலம் போல அக்மார்க் மசாலாவாகிறது. அந்த ஆர்ட் டீச்சரின் பாத்திரத்தை அடக்கி வாசிக்கும் நடிகர்களை வைத்து செய்திருந்தால், படம் சிம்பொனியாகவே முடிந்திருக்கலாம்.

இரண்டாம் பாதி சுவாரசியமில்லை. தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் கல்யாணத்திற்கு பிறகு பூவடைத்த அறையில், ஹீரோ ஹீரோயினை கட்டிப்பிடித்தவுடன் வரும் சுபம் போல ஒரு ரொம்பவும் எதிர்ப்பார்த்த உப்புமா முடிவு. என்ன தான் டாகுமெண்டிரி படமாயிருந்தாலும் ரொம்பவும் பாடமெடுக்காமல் இருப்பது அவசியம்.

முதல் பாதியில் பல அமைதியான துல்லியமான காட்சிகளுக்காகவும், அந்த சிறுவன் 3 X 9 கணக்கு போடும் கனவுக் காட்சியில் வழிந்தோடும் கிரியேடிவிட்டிக்காகவும் அமீரை மன்னிக்கலாம்.

Create a website or blog at WordPress.com