ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்

journal of joyce carol oates

நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.

ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.

1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம். 1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே.

இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம்.

இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது.

தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பா.ராகவன் பேப்பர் எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த விஷயத்தையும், தூர்தர்ஷன் நினைவுகளையும் எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.

ஜெயமோகன் படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.

அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத ஒரு வித வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் – The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can’t be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice “prints,” our journal-selves are distinctly our own; try as we might, we can’t elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.

Create a website or blog at WordPress.com