அப்போலோ தினங்கள் – சுஜாதா

apollo_dhinangal_sujatha.jpg

எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட – தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், ‘பீப்’ சத்தங்களும், விதவிதமான கோடுகளும்… – அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் சுஜாதா எழுதிய கடைசிப் பக்கம், இந்த வார ஆனந்த விகடனில்.

apollo_dhinangal_sujatha_b.jpg
[நன்றி – விகடன்]

இதைத் தவிர தேசிகன் எழுதியிருக்கும், சுஜாதாவைப் பற்றி் பலருக்குத் தெரியாத மற்றொரு பக்கம்.

சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, ‘இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது’ என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.

பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். ‘அது உடம்புக்கு ஆகாது’ என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், ‘உன் பேர் என்ன?’ என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.

சமீபத்தில் ஒரு முறை ‘உன்னுடன் பைக்கில் வருகிறேன்’ என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். ‘இப்ப என்ன ஸ்பீட்?’ என்று விசாரித்துவிட்டு, ‘இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!’ என்று பைக் சவாரியை அனுபவித்தார்.

ஒரு பக்கம், சுஜாதாவின் எழுத்துக்களில் உள்ள உணர்ச்சிகள் அவரைத் தாண்டி சென்றதில்லை என்னும் விமர்சனங்கள், மற்றொரு பக்கம் இந்தக் கட்டுரை. தேசிகனிடம் போன வாரம் பேசிய போது, “ ஒரு கையே போனா மாதிரி இருக்கு” என்று அவர் சொன்னது, இப்போது தெளிவாக புரிகிறது. சுஜாதாவின் உயிர் பிரியும் நொடியில் அவரின் அருகில் உட்கார்ந்து ஆண்டாள் பாசுரமான, சிற்றஞ் சிறுகாலே படித்ததாய் சொல்கிறார்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

திருப்பாவையில் ரொம்பவே விசேஷமானது இந்த 29வது பாசுரம். இதன் கடைசி மூன்று வரிகளில் தான் திருப்பாவையின் மொத்த சாராம்சமும் ஒளிந்துள்ளது.

தேசிகனின் இந்த கட்டுரையைத் தவிர, நா முத்துக்குமார், தன்னை சுஜாதா கண்டெடுத்த விதத்தை விளக்கும் ஒரு குறிப்பும், சுஜாதாவைப் பற்றி அவரது மனைவி சுஜாதாவின் பேட்டியும் வந்துள்ளது.

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார். ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சு கிரிக்கெட் பார்த்துண்டு இருப்பார். ‘உடம்பைப் பார்த்துக்காம இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?’னு பசங்க கோச்சுக்குவாங்க. ‘இப்படில்லாம் இல்லேன்னாதான் அவருக்கு உடம்பு படுத்தும்’னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?

We miss you !!