ஜிங்கிள் ஆல் த வே(Jingle all the way) என்ற படத்தில் ஆர்னால்டு ஷ்வாஸ்னிகர், தன் மகனின் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுப்பதற்கு டர்போ மேன் என்றொரு பொம்மையை தேடி ஊரெல்லாம் அலைவார். அதைப் போலவே உண்மையாக வருடத்திற்கு ஒரு பொம்மையையோ அல்லது வேறெதாவது பரிசுப் பொருளையோ தேடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பலர் இந்த மாதிரி கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள். தான் தேடிய பரிசுப் பொருள் கிடைத்துவிட்டால் சந்தோஷப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பணம் இருப்பவர்கள் என்ன செலவழித்தாவது வாங்கிவிடுகிறார்கள்.
2007ன் டாய் அல்லது பரிசுப்பொருள் நிண்டெண்டோவின் வீ(Nintendo Wii) என்றொரு விடியோ கேம் சிஸ்டம். எக்ஸ் பாக்ஸ் போல ஒரு குடும்பத்திற்கான விளையாட்டு சாதனம். இதன் விற்பனை விலை 250 டாலர், கிட்டத்தட்ட பத்தாயிரம் இந்திய ரூபாய்க்கள். இன்றெல்லாம் சியாட்டல் கடைவிதியில் நீங்கள் அலைந்து திரிந்தாலும் வீ கிடைக்காது. கிடைத்தால் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடி விடுவார்கள். அப்படியே கிடைத்தாலும் அதை நீங்கள் உபயோகிக்காமல் ஈபே(e-bay)2யில் ஏலம் விட்டால் 580 டாலருக்கு வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். இரண்டு மடங்கு பணம் கொடுத்தாவது, தன் மகனுக்கோ மகளுக்கோ பரிசாய் வாங்க ரெடி. அந்த அளவுக்கு கிராக்கி.
இந்த வீ சாதனத்தின் அமைப்பே சற்று புதுமையானது. இது வர வந்துள்ள வீடியோ கேம் சிஸ்டங்களில் இல்லாத புதுமைகள் தான் அதிகம். வீடியோ கேம்களில் இது ஏழாவது தலைமுறை. இது தான் உலகில் உள்ள லேட்டஸ்ட் கேமிங் சிஸ்டம். Wiiயை Paradigm Shift என்கிறார்கள். இந்த வீ கேமிங் சாதனத்தில், ஓரு டிவிடி சைஸ் சிஸ்டம் யூனிட்டும் ஒரு சென்ஸார் ஸ்டிரிப்பும், ஒரு ரிமோட் கண்ட்ரோலும் வருகின்றன. இந்த சிஸ்டம் யூனிட்ட்டை டிவியில் கனெக்ட் சேய்து விட்டு, அந்த infra-red sensor ஸ்டிரிப்பை டிவியின் முன் வைத்து விட்டு, ரிமோட் கண்ட்ரோலால் Wiiயை இயக்கலாம்.
இதுவரை வந்துள்ள சிஸ்டங்களில் நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே பட்டனை அழுத்திக் கொண்டு ஆடலாம். Wiiயில் மட்டும் தான் நீங்கள் விளையாடும் விளையாட்டைப் போலவே ஆக்-ஷன் செய்தால் தான் இயக்க முடியும். அதாவது, வீயில் டென்னிஸ் விளையாடும் போது, வீயின் ரிமோட் ஒன்றை கையில் பிடித்து, டென்னிஸ் மட்டையை பிடித்துக் கொண்டு அடிப்பது போல டீவியை நோக்கி மூவ்மெண்ட் செய்ய வேண்டும். பந்து வருவதற்கும் உங்கள் ஆக்-ஷனுக்கும் சரியாக இருந்தால், டீவியில் பந்து மட்டையில் பட்டுச் செல்லும். ஒரே வீ சிஸ்டத்தில் பல ரிமோட்களை இயக்கலாம்.. ஆகையால் ஒரு டென்னிஸ் விளையாட்டில் வீட்டில் உள்ள நான்கு பேர் டபிள்ள்ஸ் விளையாடலாம்.
இதையே போல் பாக்ஸிங் செய்தால், அதே வீ ரிமோட்டைப் பிடித்துக் கொண்டு முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, எதிராளியின் முகத்தில் குத்து விடலாம். யோசித்துப் பார்த்தால் இதன் புதுமை புரியும். நண்பர் ஒருவரின் வீயில் பல மணிநேரம் விளையாடியிருக்கிறேன், Wii கண்டிப்பாக ஒரு paradigm shift தான்.
வெளியே பார்க்கும் போது எளிமையாக, ரிமோட்டை பிடித்துக் கொண்டு விளையாடக் கூடியதாக இருந்தாலும், உள்ளே இருக்கும் இயந்திரா கொஞ்சம் கடினமானது தான்.
அந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாரை டிவியின் முன் வைத்தவுடன், அது உங்கள் கையிலுள்ள ரிமோட்டை ஒரு 3டி ஸ்பேஸில் கணக்கிடுகிறது. அதாவது x,y,z என்னும் மூன்று தளங்களில் ரிமோட்டின் ஆரம்பப் புள்ளியை குறித்துக் கொள்கிறது. இதன் வழியாகத் தான் நீங்கள் ரிமோட்டில் yes, no, quit என்று க்ளிக் செய்வது வீ சிஸ்டத்திற்கு தெரிகிறது. இதைத் தவிர இந்த இன்ஃப்ரா ரெட் சென்ஸாருக்கு வேறு வேலை இல்லை.
வீயின் முக்கியமான விஷயமே அதன் ரிமோட் தான். இந்த ரிமோட், வீயின் சிஸ்டத்துடன் போசுவது ப்ளூ டூத்(blue tooth)இன் வழியாகத் தான். ப்ளூ டூத் ஒரு முப்பதடிக்குள் இயங்கும்
டென்னிஸ் விளையாடும் போது, ரிமோட்டில் உள்ள அக்ஸிலரேட்டர் சென்ஸார் (acclerator sensor) சமாராசத்தின் மூலம் தான் நீங்கள் மட்டையை சுழற்ற நினைக்கிறீர்களா அல்லது ஓங்கி அடிக்கிறீர்களா என்று Wii சிஸ்டம் அறிகிறது.
இந்த ஆக்ஸிலரோமீட்டர் என்ற சிப்பில், ஒரு சிலிகான் கம்பி, இரண்டு capacitatorகளுக்கு இடையே வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு capacitatorகளுக்கும் சரியான அளவில் வால்டேஜ் வழங்கப்பட, நீங்கள் ரிமோட்டை கையில் பிடித்து சுழற்றும் போது, இந்த சிலிக்கான் கம்பிகள் நகர்கின்றன. அப்போது அது ஒரு capacitatorருக்கு அருகில் செல்ல, அந்த capacitatorன் வால்டேஜ் அதிகமாகின்றது. இந்த வால்டேஜ் வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரம் நகர்த்தப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. இது ரிமோட்டில் உள்ள ப்ளூடூத் வழியாக் வீ சிஸ்டத்தை அடைகிறது.
உங்களின் இந்த மூவ்வெண்டை தனது டேட்டாபேஸில் உள்ள சில ஆயிரம் மூவ்வெண்டுகளுடன் சரிபார்த்தது எந்த மூவ்மெண்டுக்கு அருகில் உள்ளதோ அந்த மூவ்மெண்ட் உங்கள் திரையில் நடக்கிறது.
இந்த ஆக்ஸிலரோமீட்டரை MEMS(micro electro mechanical systems) என்கிறார்கள். இவைகள் ஐந்து நானோமீட்டர் அளவுக்கான அசைவுகளை கூட கணக்கிடக் கூடியவை. ஐந்து நானோமீட்டர் என்பது நினைத்ப் பார்க்க முடியாத அளவு சிறியது. உங்களின் ஒரு முடியின் அளவு 200 நானோமீட்டர்கள்.
பல சாதனங்களிலும் இன்று இந்த ஆக்ஸிலரோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் காரின் நடுவிலும் இது இருக்கிறது. இது x,y,z என்ற தளங்களில் உங்கள் காரை கண்க்கிடுகிறது. ப்ரூஸ் வில்லிஸின் Life Free Die Hard படம் போல தலைக் குப்புற உங்கள கார் உருண்டோடும் அடுத்த கணப்பொழுதில், இந்த ஆக்ஸிலரோமீட்டர்கள் அந்த அசைவை கண்க்கிட்டு, air bagsசை இயக்குகின்றன.
இப்போது வரும் பல லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ள ஆக்ஸிலரோமீட்டர்கள், லேப்டாப் கீழே விழப்போனால், அது கீழே விழுவதற்குள் அதன் harddiskகுகளை அணைத்து விடுகின்றன. இப்படியாக தற்போதைய புது ஹீரோ ஆக்ஸிலரோமீட்டர்கள் தான்.
Wiiயில் வாரத்திற்க்கு பல விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இன்னும் கிரிக்கெட் வந்தபாடில்லை. இதற்கு காரணம் இது இப்போது தான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இரண்டோரு ஆண்டுகளில் உலகின் பல நாடுகளிலும் கிடைக்கலாம். இந்தியாவிலும் வீ கிடைக்கும். கிடைத்தால் கண்டிப்பாய் வாங்கி விளையாடிப் பாருங்கள்.
இப்பொழுதே வேண்டுமென்றால், ஹூஸ்டனிலோ மினியாபோலிஸிலோ இருக்கும் உங்கள் கஸினை வாங்கி வரச் சொல்லுங்கள். கிரிக்கெட்டும் வீயில் வந்து விட்டால், நீங்கள நின்று கொண்டே போலிங் போட உங்கள் அப்பா பேட்டிங் செய்யலாம்.
Puliyaamaram Wii Cricket Team, Arrow Head Wii Cricket Team என்றெல்லாம் டீம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கண்டிப்பாய் வீ பைத்தியம் இந்தியாவுக்கு வரப் போகிறது. Wii வாங்க பணம் சேர்க்க ஆரம்பியுங்கள்.