தமிழ்நாடு · பதிவுகள் · மனிதர்கள் · மற்றவை

பா – 3

பா – 1 , 2

3

அப்பா பம்பாயில் வேலை செய்த கதைகளை சொல்லும்போது அவனுக்குச் சுவாரசியமாய் இருக்கும். அந்த மனிதர்களும் அந்த ஊரும் அவனுக்கு அன்னியமானதால் இருக்கலாம். இடுக்கமான வீடுகள், பொங்கி வழியும் ரயில் பெட்டிகள், தெருவில் விற்கும் பூரி தின்பண்டங்கள். பம்பாயினால் அப்பாவுக்கு இந்தி சினிமாவும் பிடித்துப் போனது. ஆராதனாவிலிருந்து Nazia Hassan பாடும் Aap jaisa koi meri zindagi mein aaye to baat ban jaaye வரை எல்லாம் கேட்பார், பார்ப்பார். ஆனால் பம்பாயில் இருந்த போது அவருக்குத் தெரிந்த இரண்டே வார்த்தைகள், அச்சா மற்றும் நஹி. இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அவர் எப்படி நாட்களைக் கடத்தினார் என்பது தான் கதைகளே.

பம்பாயிலிருந்து  திரும்பியதற்கு இரண்டு மூன்று காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் அவருடைய அம்மா தமிழ் நாட்டில் இருந்ததாலும் அவரை விட்டு தள்ளி இருக்க மனமில்லாததாலும் தான். பம்பாயில் மேலும் தங்கியிருந்தால் தன் வாழ்வு எப்படி போயிருக்கலாம் என்பது பற்றி ஒரு alternative narrativeவை அப்பா சொல்லிக் கேட்டிருந்தான்.

”பம்பாயிலேயே இருந்திருந்தா இத்தனை வருஷத்துல ஒரு பெரிய பங்களா கட்டி..”

“ஏன் அங்கேயே நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே. நல்லா… கவர்மெண்ட்ல வேலை செய்ற பொண்ணா வேணும்னு தானே ஒத்த கால்ல நின்னீங்க. இத்தனை நேரம் பம்பாய்ல அந்த ஒடுக்கு வீட்ல மழை ஓழுகிண்டு இருக்கும்” என்று சொல்லி அப்பாவின் புஜத்தில் செல்லமாய் குத்துவாள் அம்மா.

விக்ரமில் கமல் சொல்லும் ”…ப்பாத்துக்கலாம்” போல அப்பா அக்கறையற்ற, “அதெல்லாம் சல்தா ஹை…” என்பார்.

பம்பாயில் இருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம் என அவன் நினைத்தது, சல்தா ஹை என்ற மனப்போக்குத் தான். தன் வாழ்வில் அத்தனை ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர், தன் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தைப் பற்றி ஒரு வித துறவியின் மனநிலையில் சல்தா ஹை என்று சொல்லிக் கடந்து சென்று விடக்கூடியதை அவன் கொஞ்சம் வியந்தான்.

அமெரிக்காவிலிருந்து வந்த அன்றே தகனம் முடிந்திருந்ததால், அடுத்தடுத்த காரியங்களை பற்றி வீடு யோசித்தபோது, அவனுடைய பயண களைப்பும், கரோனா களைப்பும் தீரட்டும் என்று எல்லா காரியங்களையும் ஒன்பதாம் நாளன்று தள்ளி வைத்து விட்டார்கள்.

அடுத்த மூன்று நாட்களுக்கும் அப்பாவின் அறையிலேயே தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். டீவி போர் அடித்தது, டுவிட்டர் கசந்தது, புத்தகங்களில் மன போக மறுத்தது. முதலில் அதை ஜெட்லாக் என்று நினைத்தவனுக்கு பிறகு தான் புரிந்தது, அது அப்பாவின் காரியங்களை முடிக்க வேண்டும் என்ற மன உணர்ச்சி உண்டாக்கும் தூக்கமின்மை என்று.

ஒன்பதாம் நாள் முதல் அத்தனை காரியங்களையும் ஸ்ரீ ராம தீர்த்தம் என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்குச் சென்றவுடன் அவன் கணினி தொழிலாளி மண்டைக்குள் தோன்றியது, “இது ஒரு FaaS” என்று. Funeral-as-a-service.

பத்தாயிரமோ பன்னிரெண்டோ கொடுத்து விட்டால், ஹோம சாமன்கள் முதற்கொண்டு , காரியம் செய்விக்க அறைகளும், குழி தர்ப்பணம் செய்ய குழிகளும், கோ பூஜை செய்ய மாடு கன்றுக்குட்டிகளும், அரிசி வாழைக்காய் தானம் வாங்கிக் கொள்ள அங்கேயே வேலை செய்யும் ஆட்களும் என்று எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற இடம். அடுக்குமாடி குடியிருப்புகள் நிரம்பி வழியும் சென்னை போன்ற பெருநகரங்களுக்குத் தேவையான all-in-one service.

”கர்தா பேர் சொல்லுங்கோ…”

“கீர்த்திக…”

“நீங்க தான கர்த்தா, உங்க பேர் சொல்லுங்கோ…”

சொன்னான்.

அப்போது தான் புரிந்தது அப்பாவின் காரியங்களில் கர்த்தா எனப்படுவன் அவன் தான் என்று. அடுத்தடுத்த நாட்களில் பஞ்சகச்சம் கட்டுவதற்கு கற்றுக் கொண்டு விட்டான். தலை குளியல், தர்ப்பணம் , அரிசி வாழைக்காய் என்று எல்லா நாட்களுக்கும் சேர்த்துக் குழி தர்ப்பணம் செய்யச் சொன்னார் வாத்தியார். கண்ணை மூடி கல் ஊன்றினான்.

“இன்னும் நல்லா நெறைய ஜலம் விடணும். இந்த பத்து நாளும், போன அப்பாவோட ஆத்மாவுக்குத் தெரிஞ்சது ஒண்ணு தான். பசி தாகம்… பசி தாகம்”

அந்த சிறிய ஸ்ரீ ராம தீர்த்த அறையில் தங்கை அடுப்பு பற்ற வைத்து சாதம் வடித்து பிண்டம் பல பிடித்து வைத்திருந்தாள்.

“மார்ஜயந்தா…”

“மார்ஜயந்தா…”

“மம-ன்னு சொல்லுங்கோ”

”மம” என்றான்.

“அப்படியே பித்ரு தீர்த்தம் போல கையில இருக்கிற எள்ளு கலந்த ஜலத்தை, கைய திருப்பி பிண்டத்தோட மேல விட்டுடுங்கோ”

விட்டான்.

“இப்ப பூணுல சரியாப் போட்டுக்கலாம்”

கலிபோர்னியா சென்றிருந்த மாமா அப்பாவின் செய்தி கேட்டு அவனுக்கு முன்னமே கிளம்பி வந்திருந்தார். பத்தன்று காலை அவனிடம் வந்து,” இன்னிக்கு காரியம் பண்றதுக்கு கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கும், கொஞ்சம் தைரியமா இரு” என்று எச்சரித்தார். பத்தாம் நாளன்று உறவினர்கள் வந்தார்கள், அழுதார்கள், பத்து கொட்டினார்கள்.

ஒத்தன் என்பவருக்கு உணவிடச் சொன்னார்கள். அவர் உண்டு முடிந்தவுடன் அவனை திரும்பி நிற்க சொன்னார்கள்.

“அப்பாவுக்காக கிளம்பி இவர் காசிக்கு போறார். அவரை பாக்காம திரும்பி நின்னுக்கோங்கோ”

அது ஒரு ஐதீகம் தான். காசிக்செல்லாம் பலரும் செல்லச் சொல்லவதில்லை. அதற்குச் செலவாகும் என்று பின்னர் புரிந்து கொண்டான்.

வாத்தியார்கள் கோஷ்டியாய் உட்கார்ந்து ஒரு சேர ருத்ரம், சமகம் சொன்னார்கள். அதுவரை செய்யப்பட்ட காரியங்கள் எல்லாம் புதிதாக இருந்தாலும், அவர்கள் சொன்ன ருத்ரத்துடன் சேர்ந்து அவனும் அரைகுறையாய் ருத்ரம் சொல்ல முற்பட்டான்.

சுபஸ்வீகாரத்துக்கு எல்லோரையும் வாட்ஸ்ஸாப்பில் அழைக்க அப்பாவின் படம் போட்டு அழைப்பு செய்து கொடுத்தான். அபார்மெண்டில் இருந்த எல்லோருக்கும் அழைப்பை அனுப்பினாள் அம்மா.

“அப்பாவுக்கு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போடணும்னா பிடிக்கும்”

வாத்தியார்கள் வந்தனர். நவக்கிரக ஹோமம் செய்தார்கள். புண்ய ஜலத்தினால் அவனை நனைத்தார்கள். சரம ஸ்லோகம் எழுதி வாசித்தார். அப்பாவின் திதி இத்தியாதி விஷயங்களை ஒரு அரை பேப்பரில் எழுதி கொடுத்தார்.

”இனிமே இதுதான் அப்பாவோட முக்கியமான சீட்டு. இதை நீங்க எங்க காமிச்சாலும், திதி பார்த்து மாசிகம் சோதமம் எல்லாம் பண்ணி வச்சிருவா. 27ம் நாள் , 45ம் நாள், ஆறாம் மாசத்தை மட்டும் விடாம பண்ணிடுங்க. அடுத்த வருஷம் வருஷாப்திகம் இங்கேயே ஜம்முன்னு பண்ணிடலாம். ஆக்சுவலா கர்த்தா ஒரு வருஷம் கோயில் போகப்பிடாது, மலை ஏறப்பிடாது, கடல் கடக்கபிடாது. ஆனா அமெரிக்கா போய் ஆகனுமே. ஒண்ணும் சிரமமில்ல, ஒரு ப்ரிதி பண்ணிக்கலாம்” என்று கொஞ்சம் சிரித்த படி சொன்னார்.

அப்பாவின் ஆஸ்தான அட்டோ ஓட்டுநர் முதற்கொண்டு மருந்து கடைக்காரர், ப்ளம்பிங் வேலை செய்பவர் என்று எல்லோரும் வந்தார்கள், அழுதார்கள். அப்பா அவர்களுக்குச் செய்திருந்த உதவிகளின் விவரங்களைச் சொன்னார்கள். சீனு ஒரு ஃபாண்டா பாட்டில் கொண்டு வந்து அப்பாவின் படத்தின் முன் வைத்தார்.

“அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது இதுன்னு…”

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. தான் சென்னையில் இல்லாத பதினேழு வருடங்களில் அப்பா பலருக்கும் பணத்தையும், மனத்தையும் கொடுத்து உதவியிருக்கிறார். அவர் சென்னை வரும்போது இவற்றைப் பற்றிக் கேட்டிருந்தாலும், அந்த எளிய மனிதர்களின் அக்கறையை அப்போது தான் புரிந்து கொண்டான்.

தங்கையுடன் சேர்ந்து வீட்டைக் கொஞ்சம் எளிதாக்கி அம்மாவிற்கு ஏற்றபடி மாற்றி அமைக்க நினைத்தான். அப்பா சேர்த்து வைத்திருந்த பலவித எலக்டிரிகல் கருவிகளை ஒன்றாக எடுத்து வைத்தார்கள். அவர்களின் ஆஸ்தான எலக்ட்ரீஷனை அழைத்து எடுத்துப் போகச் சொன்னார்கள்.

“என்னது சார் இறந்துட்டாரா” என்று அதிர்ந்து போனர் அந்த எலக்ட்ரீஷன்.

”இந்த ஸ்விட்ச் போர்டையெல்லாம் ரிமோட்டா மாத்தி அவர் செஞ்சிருந்க்கிற விஷயம் ஸ்டார் ஓட்டல கூட இல்லீங்க. அவர் சொல்லித் தான் இதயெல்லாம் நானே தெரிஞ்சுகிட்டேன்”

அப்பாவின் கனிணியை வீட்டு வேலை செய்பவரின் சிறுவனுக்கு உதவியாய் இருக்கும் என்று கழட்டிக் கொடுத்தான். ப்ரிண்டர் இன்னொருவருக்குச் சென்றது.

பாங்க் கணக்கு வழக்கைப் பார்த்த போது, அப்பா எல்லா கணக்குகளையும் எளிதாக்கி அத்தனை டாக்குமெண்டையும் சேர்த்து ஃபைல் செய்து தன் டைரியில் அழகான கையெழுத்தில் எழுதி வைத்திருந்தார். அம்மாவின் ஏர்டெல் ஃபோன் முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் ஒரு ஆண்டு சந்தா கட்டி வைத்திருந்தார். அவன் செய்ய வேண்டிய வேலை என்று ஒன்றுமே இல்லாமல் செய்து வைத்துப் போயிருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த கடைசி நாட்களுகளுக்கான செலவு, பிடித்தம் போக அனைத்தும் ஏற்கனவே அவர் கட்டியிருந்த ஸ்டார் ஹெல்த் இன்ஷுரஸிலுருந்து ஒரே செக்காக வந்தது.

“அடுத்த ஒரு வருஷத்துக்கு என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க. அப்பா நினைவா நான் இங்க தான் இருக்க போறேன்” என்றாள் அம்மா. அவளைத் தனியாக எப்படி விடுவது என்று அவர்கள் வியந்த போது, அடுத்த இரண்டு மாதங்களாவது அங்கேயே தங்குகிறேன் என்றார் அவள் தம்பியான அவன் மாமா.

எமிரேட்ஸில் திரும்ப டிக்கெட் வாங்கினான்.

விமானத்தில் ஏறி, பறப்பதற்கு முன் உட்கார்ந்த அவன் ரெஸ்ட்ரூம் போக தன் இருக்கையை விட்டு எழுந்தான்.

“Sorry sir.. only one restroom in business class today. This one does not work. You can use the first class restroom if needed” என்றாள் அந்த விமானப் பணிப்பெண்.

எதோ சொல்ல எத்தனித்தவன், தன்னையும் அறியாமல், “fine.. சல்தா ஹை” என்றான்.

“What.. Waaz that” என்று வினவினாள்.

“Oh no, nothing… do you have cappuccino. I’ll take one.”

காப்பசீனோ வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பின் அன்று அவனுக்கு முதல் முறையாக நன்றாக உறக்கம் வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s