இந்தியா · தமிழ்நாடு · பதிவுகள் · மனிதர்கள் · மற்றவை

பா – 2

பா – 1

2

பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விதமான முக்கல் தொனியில் ம்ம்ம்ம்ம்…. என்று ஒரு ஹம்மிங்குடன் ஆரம்பிப்பார் டி.எம்.சவுந்தரராஜன். பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற அந்தப் பாடலைத்தான் அப்பா தன் திருமணத்தன்று நலங்கு நிகழ்ச்சியில் அம்மாவிற்காகப் பாடியதாக அவனிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். என்றெல்லாம் அதைச் சொல்லுகிறாரோ உடனே சிவாஜி கணேசன் மாதிரியே உதட்டை அசைத்து அசைத்துப் பாடிக் காட்டுவார்.

”ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவி பாரடைஸ்ல ஏவி ரமணன் மியூசியானோ நடக்கும். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது ப்ளீர்ன்னு இசையோடு ரமணனும் உமா ரமணனும் பாட ஆரம்பிப்பாங்க. பிரமாதமாக இருக்கும்” என்று 70களின் மெட்ராஸைப் பற்றிச் சொல்வார். அப்போது தான் அப்பாவுக்கு மைக் பிடித்துப் பாடும் பாடகனாக வேண்டும் என்று ஆசை இருந்ததே அவனுக்கு தெரிந்தது.

மே பிற்பகுதியில் அவன் அமெரிக்கா திரும்பியவுடன் அப்பாவும் சகஜ நிலைக்குத் திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பின் ஜூன் மாதத்தில் அப்பா உட்கொண்ட உணவின் அளவு குறைந்தது.

“நல்லா தக்காளி ரசமும் அவரைக்காய் கறியும் செய்யுன்னு சொன்னார். ஆனா சாப்பிட உக்கார்ந்தா பிடிக்கல பிடிக்கலன்னு சொல்றார்” என்று அவன் போன் செய்யும் போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.

அவருடைய டாக்டரிடம் வாட்ஸ்ஸாப்பில் அவன் பேசினான்.

”ரொம்பவும் பயப்பட ஒண்ணுமில்லை. கார்டியாலஜிஸ்ட் சொன்ன மாதிரி தண்ணியை அளவா பார்த்துக் குடிக்க சொல்லுங்க. எலக்ட்ரோலைட்ஸ் பார்த்துக்கோங்க” என்றார் டாக்டர்.

அவனுக்குத் திரும்பவும் இந்தியா போக இருக்கும் வேண்டியிருக்கும் போலத் தோன்றியது. அடுத்த நாள் எடுத்த PCR டெஸ்டில் அவனுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இரண்டு நாட்களுக்குப் பின் கொஞ்சம் கரோனா ஜூரம் தலைவலியெல்லாம் தேவலையானவுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகள் என்ன என்று படித்துப் பார்த்தால் கரோனா முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே விமான பயணம் மேற்கொள்ளலாம் என்றது அரசு.

அப்பா உணவு வெறும் நீராகாரம் மட்டுமே என்றாகியது. அம்மா எல்லாவற்றையும் அரைத்துக் கொடுக்க ஆரம்பித்தாள். அப்பா அதையும் தவிர்க்கப் பார்த்த்தார். பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாசிகள் அவரை பார்க்க வந்த போது தள்ளாடிப் போய் கீழே உட்கார்ந்து விட்டார். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போகமுடிவாகியது.

“நான் வேணும்ன்னா கிளம்பி போறேன். உனக்குக் கோவிட் சரியான உடனே நீ வா” என்றாள் தங்கை.

கலிபோர்னியாவிலிருந்து அவள் கிளம்ப, இன்னும் ஐந்து நாட்கள் தள்ள என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரிக்குப் போன அப்பாவிற்கு கார்டியாக் அரெஸ்ட் வந்தது. அப்பாவின் தம்பி, அவனுக்கு போன் செய்தார்.

“கண்ணு, அப்பாவுக்கு மூச்சு விட முடியல. அவங்க ஆறு நிமிஷத்துக்கு CPR செஞ்சு காப்பாத்திட்டாங்க. நீ உடனடியா எப்ப கிளம்ப முடியும்” என்றார் அவன் சித்தப்பா.

அடுத்த நாள் அவன் தங்கை அப்பாவைப் போய் ஐசியூவில் பார்த்தாள்.

“ஏன்னால பாக்க முடியல டா அப்பாவை. டீயூப்பெல்லாம் இழுத்து போட்டுடறார்னு, கைய கட்டி வச்சிருக்காங்க. பாவம் டா அப்பா. சரியாயிடும்பா கவலை படதேன்னு சொன்னேன். இல்லன்னு அப்பா தலையை அசைக்கிறார்டா” என்று அழுதாள்.

அவனுக்கு இப்பொழுது தானா தனக்கு கரோனா வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் / கையினில் துல்லியம் காட்டும் உடலையும் / ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே” என்று திருமூலர் சொன்னது அவனுக்கு அன்று புரிந்தது.

அன்றிரவு அவன் தங்கையும் அங்கிருந்த ஒரு டாக்டரும் வாட்ஸாப்பில் அவனுக்கு போன் செய்தார்கள்.

மல்டிபல் ஆர்கன் டிஸ்பங்க்ஷன் என்றாகி அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு அப்பாவிற்கு மீண்டும் கார்டியாக் அரஸ்ட் வந்து காப்பாற்ற முடியாமல் இறந்து போனார்.

வீட்டிலிருந்த மற்றவர்க்கெல்லாம் கரோனா வந்து விடாமல் இருக்க தனி ரூமில் இருந்தவனுக்கு தங்கை அழுது கொண்டே போன் செய்த போது அவளைத் தேற்றுவதா தான் அழுவதா என்று புரியக் கொஞ்சம் நேரம் பிடித்தது. ஒரு வழியாகப் பேசி வைத்து விட்டு கண்ணீர் விட்டழுதான். இந்தியா போய் அப்பாவின் கடைசி கடமைகளைச் செய்து முடிக்க முடியுமா என்று கண்விழித்து யோசித்திருந்தான்.

“கண்ணு… நீ வராம ஒண்ணும் செய்ய முடியாது. நீ வந்து தான் எல்லா காரியமும் பண்ணனும். கரோனா எல்லாம் முடிஞ்ச அப்புறம் கிளம்பி எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வா. மூணு நாளோ முப்பது நாளோ நாங்க அப்பாவை பத்திரமா ராமசந்திராவில வச்சி இருக்கோம்” என்றார் சித்தப்பா.

அம்மா தவித்துப் போனாள்.

”சித்தப்பா என்ன சொல்றாரோ அதே அப்படியே செய்.” என்றால் அம்மா.

மூன்று நாட்களுக்குப் பின் வீட்டில் டெஸ்ட் எடுத்து பார்த்த பிறகு கிளம்புகிற மாதிரி எமிரேட்ஸில் டிக்கெட் புக் செய்தான்.

சென்னை வந்து சேர்ந்தவுடன், அவன் குவாரண்டைனில் தனியாக இருப்பதற்கு வீட்டில் இருந்த அப்பாவின் அறை ஒழித்துக் கொடுத்தார்கள். கரோனாவின் களைப்பு இன்னமும் போன மாதிரியில்லை. அப்பா இறந்து ஐந்து நாட்களாகியிருந்தது. அவனுக்கு கரோனா வந்து பத்து நாட்கள்.

அன்று பகலில் அப்பாவை ராமசந்திராவிலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். மார்சுவரியிலிருந்து வந்ததால் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழே இருந்த பெரிய கார் பார்கிங்கில், காரை எல்லாம் நகற்றி, S. Ramesh, Puthur என்று ஐஸ் பெட்டிக்கான விளம்பரம் எழுதப்பட்டிருந்த ஒரு ஐஸ் பெட்டியில் அப்பாவை வைத்திருந்தார்கள். அவன் வந்து அப்பாவைப் பார்த்த போது அவனையே எல்லோரும் பார்ப்பது போல தோன்றியது. கொஞ்சம் தள்ளிப் போய் அழுதான். மாஸ்க் நனைந்து போனது.

”அப்பாவுக்கு பக்கத்துல, பாலும் பழமும் பாட்டை போடச் சொல்லு” என்றான் தங்கையிடம்.

பாட்டு போடப்பட்டவுடன் அப்பா தலையாட்டிக் கொண்டே உதட்டைச் சுழற்றி சுழற்றி பாடுவது ஞாபகம் வந்து அழுகை சற்று அதிகமானது.

அவனுக்குப் பஞ்சகச்சம் கட்டி விட்டார்கள், தண்ணியைத் தலையில் விட்டுக் கொண்டு சொட்டச் சொட்ட வரச்சொன்னார்கள். வாத்தியார் மந்திரம் சொல்லி நெருப்பு உண்டாக்கினார். பின்பு அவனை அப்பாவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவர் வலது காதில் தர்ப்பையைப் படுமாறு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

அப்பாவின் தலையை மடியில் வைத்த நொடியில் அவனுக்கு ஒரு பெருவாழ்வே மின்னலாக ஒடியது. குடும்ப பாரத்தைச் சுமக்க அப்பா படித்து பம்பாய் போனது, மெட்ராஸுக்கு வந்து அம்பத்தூர் எஸ்டேட்டில் பதினேழு கம்பெனிகளில் வேலை செய்தது, தனக்கான வாழ்வை சிறுகச் சிறுக சேர்த்து அமைத்துக் கொண்டது, உறவினர் யார் வந்து திருமணத்திற்குப் பணம் என்று கேட்டாலும், அம்மாவை LTC போட வைத்தாவது பணம் குடுத்தது, பலப்பலப் பேருக்கு பலவகையில் உதவி செய்தது, குல தெய்வத்துடன் சேர்த்து நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணிக்கும் அவனைக் கூட்டிச் சென்றது, கடைசி வரையில் ஒரு என்ஜினியராக வாழ்ந்தது என்று அப்பாவின் எழுபத்து ஏழு வருடங்களும் பளீரென வந்து போனது.

நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்காமல் போய் வண்டியில் ஏறிக் கொள் என்றார்கள். வண்டியில் ஏறும் வரை தங்கையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்பாவை வண்டியில் ஏற்றிப் போய் மின் மயானத்தில் 550 டிகிரியில் தகனம் செய்தார்கள்.

”தாடியை இங்கேயே நின்னு எடுத்துட்டு முழுசா தண்ணிய ஊத்திண்டு வா” என்றார்கள்.

அவன் குளித்து வருவதற்குள் எலும்புகளைச் சேகரித்து மயான ஊழியர் ஒருவர் எடுத்து வந்தார்.

“பீச்சுக்கு இந்த பானைய எடுத்துப் போய் நாராயணா நாராயணா சிவ சிவான்னு சொல்லி தண்ணில அமுக்கிட்டு வந்துடுங்கோ” என்றார் வாத்தியார்.

பெசண்ட் நகர் பீச்சுக்குப் போக முடியுமா என்று கேட்டான் அவன்.

“கண்டிப்பா அண்ணா. உங்களுக்கு எங்க வேணுமோ அங்க போகலாம்” என்றார்கள் சித்தப்பாவின் மகன்கள்.

கார்ல் ஸ்மித் மண்டபம், பெசண்ட் நகர்

அன்று குரு பவுர்ணமி, இரவு 8 மணி. இருள் கவிழ ஆரம்பித்திருந்தது. பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சுக்கு அருகில் கார் வந்த போது மழைத் தூறல் ஆரம்பித்தது. பீச்சில் ஆள் அதிகமில்லை.

கார்ல் ஸ்மித் மண்பத்துக்கு எதிரில் காரைப் பார்க் செய்தவுடன் தன் கையில் வைத்திருந்த பானையுடன் தண்ணீரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மழைத் தூறல் அதிகமாக மக்கள் தண்ணீரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். வெற்று மார்போடு, பஞ்ச கச்சம் கட்டி பானை எடுத்துக் கொண்டு போனவனை சிலர் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

பவுர்ணமி என்பதால் கடல் பரபரப்பாய் இருந்தது. இடுப்பளவு தண்ணீர் வரும் வரை உள்ளே நடந்தான். அந்த முழு நிலவை ஒரு முறை தலை தூக்கிப் பார்த்தான்.

“பா…” என்று சத்தமாகச் சொல்லி ஒரு முறை அப்பாவின் சிரித்த முகத்தை நினைத்துக் கொண்டான். தன் கையிலிருந்த பானையைத் தண்ணீரில் வைத்து அழுத்தினான். பானை உடைந்து வங்காள விரிகுடாவில் விரிய ஆரம்பித்திருந்தார் அப்பா.

(தொடரும்)

2 thoughts on “பா – 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s