சியாட்டல் · சென்னை · பதிவுகள் · மற்றவை

பா – 1

1

அவன் சிறுவனாய் இருந்த போது அப்பா தன் பால்ய கதைகளைச் சொன்னதுண்டு. காலையில் எழுந்து, கடலூரில் போக்குவரத்து நிறைந்த பகுதியிலிருந்த ஒரு ஓட்டலில் அவர் வேலை செய்தது பற்றி. பத்து வயதில் அவரின் அப்பா தவறியவுடன், தன் அத்தையின் ஓட்டலில் காலை 4:30 மணிக்குச் சாம்பிராணி போட்டுக் கடை திறப்பது அவரின் வேலையானது. என்ன தான் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து வருகிற போகிறவர்களிடம் பில் காசை வாங்கி சில்லறை திருப்பிக் கொடுப்பது என்பது வேலையென்றாலும் அதை விட அந்தச் சிறுவனுக்குப் படிப்பதில் ஆர்வமிருந்தது. அவர் கூடவே படித்த அத்தையின் மகனை விட மார்க் அதிகமாக வாங்கியதால் புத்தகங்கள் கிழிக்கப்பட்டு, பள்ளிக்குப் போகவிடாமல் ஓட்டலில் கல்லா கட்டவேண்டியதாகியது. இதிலெல்லாம் ஒரே நல்ல விஷயம், காலையில் ஓட்டலில் போடப்படும் முதல் காபி கல்லாவில் இருப்பவருக்குத் தான். அதுவும் காலை டிகாஷனில், சற்றுமுன் கறந்த தண்ணி கலக்காத பாலில் போடப்பட்ட சுடச்சுட காபி. பதினோரு வயதிலிருந்து அப்பா எப்போதும் டபுள் ஸ்ட்ராங் காபி மட்டுமே குடிப்பவரானார்.

ஹேர்ஹோஸ்டஸ் துபாய் வரப்போகிறது என்று எழுப்பிய போது, ஸ்ட்ராங் காபி கிடைக்குமா என்று அவன் கேட்டான். சுடச்சுட காபச்சீனோ வந்தது. ப்ளைட்டின் பிசினஸ் க்ளாஸில் ஆளில்லை. சியாட்டலில் இருந்து கிளம்பிய பின், ஒரு ரொட்டியும் கொஞ்சம் சாதமும், ஆரஞ்சு நிறத்தில் பனீரோ என்னவோ கொண்டு வந்து கொடுத்தார்கள். விமான பயணமும் அதன் விஸ்தாரமான உணவு பண்டங்களும் அவனுக்கு என்றுமே பிடித்ததில்லை. அப்படியே பயணம் செய்யும் போதெல்லாம் மிளகாய்ப் பொடி தடவி நான்கைந்து இட்லிகளும் கொஞ்சம் புளியோதரையையும் கட்டிக் கொடுப்பாள் மனைவி. துபாய் வரை இட்லியையும் பின்பு புளியோதரையையும் சாப்பிட்டு விட்டு, விமான உணவிலிருந்து தப்பித்துக் கொள்வான். இம்முறை மனமும் உடலும் ஒத்துழைக்காமல், விமான விருந்தை சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆறு மாதங்களில் அவனுக்கு இது மூன்றாவது இந்தியப் பயணம்.

முதல் முறை, கரோனாவிற்கு பின் டிசம்பரில் குடும்பத்துடன் சென்னைக்குச் செல்ல முற்பட்ட போது, ஒமிக்ரான் வந்திருந்தது.

“பாத்துக்கோ, வரதும் வராததும் உன் இஷ்டம்”,என்று சொல்லிவிட்டார் அப்பா.

“முடிஞ்சா ஒரு நடை வந்துட்டுப் போடா” என்றாள் அம்மா.

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் டிசம்பரில் பார்த்த போது அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் இளைத்திருந்தார்கள். முடி கொட்டி நரை அதிகமாயிருந்தது. அவனுக்கும் அதே கதை தான்.

”என்னடா இப்படி முடி கொட்டிப் போச்சு”, அம்மா.

“ஆமாம்… பின்ன இரண்டு வருஷமா தினமும் ஒரு தொப்பிய போட்டுண்டு வாக்கிங் போனா… அந்த தொப்பி என்ன பண்றதுன்னு தான் புரியல” என்றாள் மனைவி.

அம்மா சொன்ன மாதிரி முன்னம் முடியெல்லாம் கொட்டித்தான் போயிருந்தது. என்ன ஆனாலும் டை அடிப்பதில்லை, வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று முடிவோடிருந்தான் அவன். gracious aging என்று தனக்குக் தானே சொல்லிக்கொண்டிருந்தான்.

முட்டு வலியால், இரண்டு முட்டுக்களையும் டைட்டேனியம் முட்டுக்களாக மாற்றி கொண்டு விட்டிருந்தாள் அம்மா. இம்முறை தான் முட்டு வலி என்று சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். கரோனா தொற்று குறைந்தவுடன், யார் உதவியும் இல்லாமல் அப்பாவே அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச் சென்று, அங்கேயே ஏழு நாட்கள் தங்கி முட்டு மாற்று அறுவை சிகிக்சை செய்து பார்த்துக் கொண்டார்.

இரண்டாம் முறையாக அவன் இந்தியா வந்தது கொஞ்சம் எதிர்பாராதது. ஏப்ரல் மாதத்தில் ஒரு உறவினர் நிகழ்ச்சிக்குச் சென்ற பொழுது அம்மா அங்குத் தடுக்கி விழுந்து காலில் அடிபட. மூன்று மாத பெட் ரெஸ்ட் என்று டாக்டர் சொல்லிவிட்டார். யார் உதவியும் இன்றி அப்பாவே அவளைப் பார்த்துக் கொள்ள, மே மாதத்தில் ஒரு நாள் அப்பாவிற்கு முடியாமல் போனது. டாக்டரிடம் சென்றவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து விட்டார்கள். அம்மா வீட்டிலும் அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க வேண்டிய நிலைமை.

”குரு நீ உடனே கிளம்பி வா. வந்தா அம்மாவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று வாட்ஸ்ஸாப்பில் அனுப்பினார் அப்பா.

இந்த பதினேழு வருடத்தில், நீ வந்தே ஆகவேண்டும் என்று என்றுமே எதற்குமே சொன்னதில்லை. அதனால் செய்தி வந்தவுடன் எமிரேட்ஸில் கிளம்பினான்.

ஆஸ்பத்திரியில் நுழைந்து தேடிக் கொண்டு போய்ப் பார்த்தால், படுத்துக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். சற்றே மெலிந்து நான்கு நாள் தாடி தெரிந்தது. ஆங்காங்கே வேட்டிகளும் ப்ளாஸ்டிக் டப்பாக்களும் சூழ இருந்தது அந்த அறை. ஆஸ்பத்திரி வாடை வீசியது.

“என்னப்பா ஆச்சு”

“ஒண்ணுமில்லடா, அம்மாவை பார்த்தியா? எப்படி இருக்கா? வீட்ல போய் எல்லாத்தையும் உட்கார்ந்து பேசலாம். டாக்டர் இன்னிக்கு டிஸ்சார்ஜ்னு சொல்லிட்டார். கீழ போய் ரிசப்ஷன்ல பணத்தை கட்டிவிட்டு வா” என்றார்.

“தாத்தா சூப் சொல்லட்டுமா” என்று நர்ஸ் பெண்மணி சொல்ல, தன் அப்பாவை யாரோ தாத்தா என்று அழைப்பதைக் குழப்பமாகப் பார்த்தான்.

அவனுடைய அப்பா எப்போதும் போல அப்பாவாகவே இருந்தார். என்ன… கொஞ்சம் வயதாகியிருந்தது, நரை அதிகமாயிருந்தது, உடல் தளர்ந்திருந்தது . தன் ஸ்போர்ட்ஸ் டேவில் வந்து ஓட்டப் பந்தயத்தில் ஓடியவர் தானே இவர். அதே மாதிரி தானே இருக்கிறார்? ஆனால் இவரை ஏன் தாத்தா என்கிறார்கள் என்று நினைத்தான்.

கீழே ரிசப்ஷனில் பணம் கட்ட போனவனை இன்ஷுரன்ஸ், டாக்டர் கையெழுத்திட்ட சர்டிபிகேட் என்று சகல உபாதைகளும் செய்து அனுப்பும் போது இரவாகியது. வீடு வந்து சேர்ந்த பிறகு தான் ஒரு வித இயல்புநிலைக்கு வந்தார் அப்பா. அம்மா எழுந்து உட்காரவும் வாக்கர் வைத்துக் கொண்டு நடக்கவும் ஆரம்பித்திருந்தாள்.

“நீ கிளம்பறத்துக்கு முன்ன ஒரு ஈசி சேரும் இரண்டு தலைகாணியும் வாங்கி கொடுத்துட்டுப் போ” என்றார்.

வாங்கிக் கொண்டு வந்து ஈசி சேரை அவரின் அறையில் திறந்து வைத்தான். அப்பா அதில் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தார். சுறுசுறுப்பாய் வளைய வருபவர், இப்படி பொய்ப் பல் சிரிப்பில் ஈசி சேரில் படுத்துக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது.

கிளம்புவதற்கு முன், அழகாய் எளிமையாய் அடுக்கி வைத்திருந்த முக்கியமான டாக்குமெண்டுகளை காட்டினார்.

“இந்த பழ படமெல்லாம் நீ எடுத்துண்டு போ, போய் ஸ்கான் செஞ்சு அனுப்பு” என்று ஒரு ஐந்து கிலோவிற்கு பழைய புகைப்படங்களை கொடுத்து அனுப்பினார்.

“என்னப்பா.. உட்கார்ந்து பேசணும்ன்னு சொன்னியே என்ன விஷயம்.”

“ஒண்ணுமில்ல, இப்படி இரண்டு பேரும் உடம்புக்கு முடியாம இருக்கும் போது நீ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். தோ பார்… ஏதோ பயந்து போய் உன்ன வரச்சொன்னேனு நினச்சுக்காத. எனக்கு பயமில்லை. என்னிக்கோ ஒரு நாள் எல்லாரும் போகதான் போறோம். எனக்கென்ன எல்லாம் பார்த்தாச்சு, அனுபவிச்சாச்சு, ஒண்ணும் குறையில்ல. ஒரு நாள் உடம்புக்கு வந்து படுத்தோமா, ஆஸ்பத்திரில இரண்டு நாள் இருந்தோமா, அதுக்குள்ள பசங்க எல்லாரும் வந்துட்டா அப்படியே போய்டணும். எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்தி நாமளும் கஷ்டபட்டு கிடந்து என்ன செய்யப் போறோம். ”

அப்பா எப்பவுமே இப்படி ஒரு stoic தான். அவன் சிறு வயதிலிருந்த போது உறவினர் ஒருவர் இறந்து போக, அப்பா அதைப் பற்றி இரண்டு வாரங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

“கடைசி காலம்னா அந்த மாதிரி இருக்கணும். ராமு தண்ணிய குடிச்சுண்டே இருந்த போது அப்படியே உசிர் போயிடுச்சு. கொடுத்து வைச்சவன். அதே மாதிரி தான் போகணும்னு ஆசை” என்றார்.

“ஆமா இந்த உலகத்தில நாம நினைக்கிறது எல்லாம் நடக்கற்தா என்ன. எல்லா நம்ம கர்மாவை பொறுத்து தான்” என்று அவரை குறுக்கிட்டு சொன்னாள் அம்மா.

சியாட்டிலுக்கு கிளம்பும் போது கண்ணாடி அணிந்து கட் பனியனுடன் ஈசி சேரில் படுத்திருந்தவர், ”சரி பார்த்துப் போ. ப்ளைட்ல உன் ஐபேடை மூடி வைச்சுட்டு தூங்கு” என்றார்.

(தொடரும்)

2 thoughts on “பா – 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s