மற்றெதுவும் பேசுவதற்கு முன் இவ்விரண்டு பத்திகளை படிக்கவும்.
புத்தகக் காட்சி என்பது தமிழ் அறிவுலகத்தின் அடையாளம் போல் ஆகியுள்ளது. ஆண்டுதோறும் புத்தகக் காட்சியை ஒட்டி புது நூல்கள் வெளியிடப்படுகின்றன. நான் கடந்த 15 ஆண்டுகளாகத் தவறாமல் எனது புதிய நூல்களைச் சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளியிட்டு வருகிறேன். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தமிழ்ப் புத்தகங்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிக அதிகமாகியிருக்கிறது. இளைஞர்கள் படிப்பதில்லை என்பது பொய். விருப்பமான புத்தகங்களை மட்டுமே தேடிப் படிக்கிறார்கள் என்பதே நிஜம். உண்மையில் 40 முதல் 50 வயதுகளில் உள்ளவர்கள்தான் புத்தக வாசிப்பைக் கைவிட்டுவிட்டார்கள். வாழ்க்கை நெருக்கடியைக் காரணமாகச் சொன்னாலும், தொலைக்காட்சி, இணையம், அலைபேசி போன்றவை அவர்களின் நேரத்தை விழுங்கிவிடுகின்றன என்பதே உண்மை. இணையத்தில் நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம், புத்தக விற்பனையை மேலும் விஸ்தீரணம் செய்துள்ளது. ‘அமேசான் கிண்டில்’ போன்றவற்றின் வருகை ‘ஈ-புக்’ விற்பனைக்கான புதிய சாத்தியங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் எழுத்தாளர்களே தனது புத்தகங்களை வெளியிடலாம். 55 சதவிகிதம் ராயல்ட்டி அவர்களுக்குக் கிடைக்கும்.
புத்தக வாசிப்பு என்பதை அறிவார்ந்தத் தேடுதலாக எவரும் நினைப்பதில்லை. இணையத்தில் எல்லாமே இருக்கிறது என்ற தவறான மயக்கம் பலரையும் பிடித்தாட்டுகிறது. இன்னொரு பக்கம் இலவசமாகப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யக் கிடைக்காதா எனத் தேடுகிறார்கள். இதுதான் சமகாலச் சூழல். பை பையாகப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு போகிறவர்களில் பாதிப் பேர், அதில் ஐந்து நூல்களைக்கூடப் படித்து முடிப்பதில்லை. வீட்டு அலங்காரப் பொருள்களைப்போல புத்தகங்களும் மாறிக்கொண்டிருப்பது துரதிருஷ்டமே. எது நல்ல புத்தகம் என்று வாசகன் தேடிக் கண்டுபிடிக்கப் பெரும் சிரமம் உருவாகிவிட்டது. சந்தை வணிகத்துக்காகப் பதிப்பகங்கள் எவ்வித முறையான உரிமையும் பெறாமல் பல புத்தகங்களைப் பதிப்பிக்கின்றன. எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ராயல்ட்டி பெரும்பான்மை யினருக்குக் கிடைப்பதே இல்லை. எழுத்தாளர்களின் அடிப்படைப் பிரச்னைகள் சார்ந்து குரல் கொடுக்க எவ்விதமான அமைப்புகளும் இல்லை என்பது கூடுதல் வருத்தம் தருகிறது. புத்தகக் காட்சி வழியாக வெளிக்காட்டப்படும் பிம்பம் தற்காலிகமானதே. எழுத்து சார்ந்த இந்த விற்பனைப் பெருக்கம், தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றம் உருவாகிவிட்டதைப்போன்ற பொய்த்தோற்றத்தைத்தான் உண்மையில் ஏற்படுத்தி உள்ளது.
இரண்டும் நேரெதிர் கருத்துக்கள் கொண்டவை. எழுதியவர் ஒரே எழுத்தாளர் அதுவும் ஒரே கட்டுரையில் என்பது தான் குழப்பியடிக்கிறது. விகடன் தடம் இதழில் அவர் எழுதிய இந்த கட்டுரையின் தலைப்பு – சென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் – எஸ்.ராமகிருஷ்ணன்.
நல்ல எழுத்தாளர்களே இப்படி செய்தார்களானால், கொஞ்ச நஞ்சம் படிக்கிறவர்கள் என்னாவது.
Leave a Reply