நேரம்டா நேரம் !!

டைம் இந்தியா டுடே

நீங்கள் டைம் படித்திருக்கிறீர்களா ? டைம் ஒரு அமெரிக்க வார இதழ். அதை விடுங்கள், நம்மூர் இந்தியா டுடே பார்த்ததுண்டா. அதைப் போலவே டைமும், அமெரிக்க நடுத்தரவர்க்க பார்த்சாரதிகளுக்கும், சுரேஷ்களுக்குமான பத்திரிக்கை. சந்தா ஓன்றும் அதிகமில்லை. வருஷத்துக்கு இருபதே டாலர், ஜெண்டில்மென். வெறும் இருபதே டாலர்.

நல்ல வழவழ அட்டையில், எதாவது கொழ கொழ மேட்டரை, பேனை பெருமாளாக்கி கவர் ஸ்டோரி போடுவார்கள். அதை நாமும் பஸ்சில், பாதி தூக்கத்தில், ஏக குளுரில், படித்துக் கொண்டே ஆபிஸ் செல்வோம். கடைசி ரெண்டு பக்கத்தில், ஏஞ்சலினா ஜோலியின் குழந்தையும், டாம் க்ரூஸின் அடுத்த கர்ள் பிரண்டும் பல் இளிப்பார்கள். அதை பற்றி ஒரு மூன்று பத்தியும், லண்டனில் நடந்த கேட்வாக்கில் அவிழ்ந்த பாவடையும் பற்றியும் ‘சுவாரசியமாக’ எழுதி விட்டு, இனிதே முற்றும் போடப்படும். நடுநடுவே சூப்பர்மேன் என்னும் கற்பனை ஹீரோ, Gayயா இல்லையா ? ப்ளாகிங் என்னும் புதிய மீடியா தாக்குப்பிடிக்குமா புடுங்கிக்குமா ? சதாம் ஹுசைனா சாகிர் ஹுசைனா ? என்று ‘time’ly கட்டுரைகள் வேறு.

இவ்வளவு கடுப்பாக காரணம், டைம் பத்திரிகை அல்ல. பல வருடங்களாக இந்தியா டுடே படித்து வந்தும், அது ஒரு டைமின் க்ளோன் என்று தெரியாமல் போனதால் வந்த வெறுப்பு தான். கடந்த ஒரு வருடமாக டைம் படிக்கும் நான் ஆழ்ந்து கவனிப்பது, இந்தியா டுடேவின் காப்பி திறமை தான். என்னமாய் அடிக்கிறார்கள். அட்டையில் இருந்து, க்டைசி பக்கம் வரை அதே மாதிரி ரிப்போர்டிங், புகைப்படங்கள், கருத்து கணிப்புகள், gossipகள் என்று எல்லாமே அதே அதே.

ஏப்ரல் 2007ல் முடியும் எனது சந்தாவிற்கு இப்பொழுதே பணம் கட்டச் சொல்லி கடிதம் போட்டிருக்கிறார்கள். இருபது டாலர் செக் அனுப்பினால், ஒரு வருட சந்தாவும், ஒரு ‘டைம்’பீஸும் தருகிறார்கள். இதை எழுத ஆரம்பித்த பொழுது அனுப்பலாம் என்றிருந்தேன், இப்போ ம்ஹும். No Way.

கூகிள் ரீடர் 2.0

google reader

காலையில் ஸ்பார்கி குரைத்தது. ஸ்பார்கி[sparky], என் பக்கத்து அப்பார்ட்மெண்டின் செல்ல ஜெர்மன் ஷெப்பெர்டு. நான் இந்த அப்பார்ட்மெண்டுக்கு ஜாகை வந்த போது, முதல் இரண்டு நாள் இரவில் குரைத்து முறைத்தது. அந்த வீட்டில் இருந்த பொக்க வாய் ஸ்பானிஷ் பாட்டி, துணி துவைக்கும் போது, ஹாய் சொன்னவுடன் தான் ஸ்பார்கி கனிவு பார்வை பார்த்தது. ஸ்பார்கி என்னை போல் ஒரு அம்மாஞ்சியை பார்த்தால் தான் குரைக்கும். எதிர் வீட்டு ஆஜானுபாகு Nickகை பார்த்தால், love seatயில் முகம் புதைக்கும். ஸ்பார்கிக்கு நான் இப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பது தெரிந்தால், கட்டிக் கொள்ளும்.

ஸ்பார்கி பற்றி, இங்கு சொல்ல வந்த காரணம் – கூகிள் ரீடர் 2.0. நிஜமாக. நேற்று வெளியிடப்பட்ட கூகிள் ரீட்ரின் *improved* version பற்றி இண்டர்நெட்டில் உள்ள அனைத்து வெப்சைட்களிலும் எழுதிய விஷயம் தெரிந்து, கிறுக்கா கிறுக்கா கிறுக்கலில் சீக்கிரம் கிறுக்கு கிறுக்கா, என்று மெட்டிசைத்து குரைத்தது ஸ்பார்கி.

எனிவே, இத்தனை நாட்களாக RSS வலையோடைகளை படிக்க bloglines யூஸ் பண்ணிக் கொண்டிருந்தவர்கள், அதைப் போலவே வடிவமைக்கப்படுள்ள ரீடரை யூஸ் பண்ண வேண்டிய காரணங்கள் பல. அதில் சில –

– கூகிளின் usability factor. பல shortcutகளுடன் அதன் யூஸர் இண்டர்பேஸ் ஒரு Black Forest ஐஸ்கிரீம்.
– ஜிமெயிலுபவர்கள் அதே ID வைத்துக் கொண்டு ரீடரை படிக்கலாம்.
– Ajaxஐ வைத்துக் கொண்டு, ஜிமெயிலில் செய்த அதே மாயாஜாலத்தை மீண்டும் செய்திருக்கிறார்கள். இது bloglinesயில் இது நாள் வரை இல்லாத டெக்னாலஜி.
Your Inbox to the Web என்னும் அருமையான கூகிளின் பிராண்டிங்.

ரீடரை யூஸ் பண்ணிப் பாருங்கள். அது சரி, மன்மத ராசா பாட்டு கேட்டு ஸ்பார்கி என் வீட்டின் கதவை பிராண்டின மேட்டர் தெரியுமா. பெரிய கதை.

சில்லுனு ஒரு காதல்

சில்லுனு ஒரு காதல்

கௌதம் மேனனின் சிஷ்யர் கிருஷ்ணாவின் இயக்கதில் முதல் படம். சூர்யா – ஜோதிகா திருமணத்திற்க்கு ஒரு pre-cursor ஆக வரும் படம். ரஹ்மான் – வாலி காம்பினேஷனில் ஒரு totally different ரொமாண்டிக் படம். சில்லுனு ஒரு காதல், இப்படியாக பல எதிர்பார்புகளை தாங்கி வந்தது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை ஊறுகாயாய் வைத்துக் கொண்டு கன்னா பின்னாவென்று கடித்துத் துப்பி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பாராவில், இந்த படத்தை பற்றி சொல்வதாய் உத்தேசம். பார்க்கலாம்.

சூர்யா – புது மாப்பிள்ளை பாவம். போனால் போகிறது. அந்த காலேஜ் பையன் ரோலில், ஏதோ try செய்து, தோற்றுப் போகிறார். மனைவியிடம் சூட்டிகையாய் நடிப்பதெப்படி என்று கற்றுக்கொண்டால் குற்றமில்லை. அந்த அம்மா, கொடுத்த ரோலில் கண கச்சிதமாக அசத்துகிறார். ‘லொல்லு சபா’ சந்தானம் கலக்கி ஏடுக்கிறார். தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு ‘காலேஜ் ப்ரண்டு’ சின்னி ஜெயந்த் கிடைத்திருக்கிறார்.

‘நியுயார்க் நகரம்’ பாடலை நியுயார்க் தவிர மற்ற எல்லா இடத்திலும் எடுத்து இருக்கிறார்கள். ரஹ்மானில் குரலில் உள்ள feverரை, பாட்டின் picturisation சரியாக பதிவு செய்யாமல் போனதிற்க்காகவும், வடிவேலுவின் கடி ஜோக்குகளுக்காகவும், டைரக்டரை ரெண்டு நாள் கடுங்காவலில் உள்ளே தள்ளலாம். “நாளைக்கு கார்த்தால Gelusil சாப்பிட்டா போறது” போன்ற சில யதார்த்த வசனங்களுக்காக கிருஷ்ணாவின் அடுத்த படத்தை ஏதிர்பார்ப்பில்லாமல் பார்க்கலாம். மற்றபடி மூன்று மணி நேரமும், ஒரு பத்து டாலரும் வேஸ்ட்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் கம்ப்யுட்டரின் வருடாந்திர புது டெக்னாலஜி அறிமுகம் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடைப்பெற்றது. திரைப்படம் பார்க்க ஏதுவான வைட் ஸ்கிரீன் iPod புழக்கத்திற்க்கு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து வீடு திரும்பினார்கள். iPod Shuffle இப்போது ஒரு பாதி வெத்துப்பெட்டி சைஸில் இருக்கிறது. இன்னும் ஐந்து வருடத்தில் நானோ டெக்னாலஜி வைத்து Shuffle தேய்ந்து கட்டெறும்பானால் ஆச்சரியப்படாதீர்கள்.

நேற்றைய நிகழ்ச்சியின் வெப்காஸ்டை பார்த்து இரண்டு மணி வேஸ்ட் செய்ததில், இவ்வளவு நாளாக ஸ்டீவ் ஜாப்ஸின் மேல் இருந்த மரியாதை சற்றே குறைந்தது தான் மிச்சம். மனிதர் ஏகத்திற்க்கு hype செய்கிறார். வீணாப்போன featuresசை எல்லாம் தன் presentation skillsசை வைத்து விற்க பார்க்கிறார். செயற்கைத்தனமே மிஞ்சுகிறது.

ஏம்பா !! யாராவது அவருக்கு ஒரு சோடா உடைச்சு குடுங்கப்பா.

இந்திய புத்தக விமர்சனம்

book review.jpg
[படம் – இந்து]

நிலஞ்சனா ராய் இந்துவில் எழுதியிருக்கும் The decline of the book review, ஒரு காலத்தின் கட்டாயம். புத்தகம் மற்றும் கலை சார்ந்த விமர்சனங்களை படிப்பாரில்லாமல், எல்லா பத்திரிக்கைகளும் ஏறக்குறைய நிறுத்தி விட்டன. மெட்டி ஓலியும், வால மீனும் மக்களை சதா சர்வ காலமும் ஏழரை சனி போல பிடித்துக் கொண்டிருப்பதால், குமுதத்திலும் விகடனிலும் இளமை காம்பெளண்ட் பக்கம் பக்கமாக தலை விரித்தாடுகிறது. அப்படியே தப்பி தவறி புத்தக விமர்சனம் போட்டு விட்டால், அதில் ஒரு controversy இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள்.

குமுதத்தில் பு(து)த்தகம் என்று அரை பக்கத்திற்கு ஏனோ தானோ என்று ஏதோ கிறுக்குகிறார்கள். விகடனில் இப்பொழுது புதிதாக புத்தக விமர்சனம் வருகிறது. கல்கியிலும் பு.வி படித்தாக ஞாபகம். இந்தியா டுடேயில் மட்டும் தான் ஒரு பக்க பு.வி போடுகிறார்கள். அதுவும் சாமானியனுக்கு புரியாத மாதிரி விஸ்தீரணம், கோட்பாடு, கொழுக்கட்டை என்று ஏதோ முத்தொள்ளாயிரம் எழுதுகிறார்கள்.

இந்த கதியில் கடந்த மூன்று வருடங்களாக, சென்னை புத்தக சந்தை, பங்குச் சந்தை போல் பணம் கொழிப்பதாக சொல்லும் BAPASIயை [Booksellers and Publishers Association of South India] நம்பலாமா வேண்டாமா என்று தோன்றுகிறது. எந்த ஒரு தொழிலும் அதற்கு தொடர்புடைய மற்ற தொழில்களை உருவாக்கிக் கொள்ளும் என்பது இந்திய, குறிப்பாக தமிழ் புத்தக தொழிலுக்கு இன்னும் உண்மையாகவில்லை.

விமர்சகர்களுக்கு கொடுக்கும் சல்லிக் காசில் பிடித்தம் பார்க்கும் mainstream பத்திரிக்கைகள், atleast, வாசகர்கள் எழுதிப் போடும் ஒரு பக்க புத்தக-கலை விமர்சனங்களையாவது கடைசி பக்கங்களில் போடுமேயானால், புண்ணியமாய் போகும்.

பி.கு – மேலே இருக்கும் இந்து கேஷவ் வரைந்த கார்டூனுக்கும், இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்த டைம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்க்கும், ஒரு obvious ஒற்றுமை இருப்பதாக நான் சொன்னால் அடிக்க ஆட்டோ அனுப்புவார்கள். இந்த மாதிரி காரணங்களிற்க்காக மட்டுமே பல விமர்சனர்கள், தமிழ் சினிமா பாட்டெழுத போய் விட்டார்கள் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் !!

சஞ்சய் சுப்பிரமணியம்

சஞ்சய் சுப்பிரமணியம்

என்னை கேட்டால் கர்னாடக இசையில் இப்பொழுதுல்ல Top Three ஆசாமிகளில், சஞ்சய் சுப்பிரமணியன் தான் பர்ஸ்ட் என்பேன். சுருதி சுத்தமாகவும், ஸ்பெஷ்டமான உச்சரிப்புடனும், சங்கதியில் hip-hop பண்ணக்கூடிய திறமையுடனும் இருப்பவர். Total entertainer.

ஒரு மார்கழி இரவில், பத்மா சேஷாத்திரியில் அவர் பாடிய தோடி ராகம், இன்னும் நினைவிருக்கிறது. அதே ராகத்தை பாடிக் கொண்டே பைக்கில் வீடு திரும்பிய போது, நாய் துரத்தியது.

இம்மாத காலச்சுவடு, அவருடன் ஒரு அருமையான நேர்காணலை வெளியிட்டுள்ளது. நம் mainstream பத்திரிக்கைகள் போல் ஒரு ரெண்டு பக்க கேள்வி பதில் மாதிரி இல்லாமல் மிக விவரமான நேர்காணல் இது. கெட்டி மீசை சஞ்சயின் நேர்காணல் ஒரு கச்சேரி அனுபவம்.

எந்தரோ மஹானுபாவுலு !!

போன வாரம் லேனா தமிழ்வாணன், தமிழ் சங்கம் சார்பில் சியாட்டல் வந்திருந்தார். இரண்டு வாரம் முன்பு யேசுதாஸின் கச்சேரியில், எள் போட்டு எண்ணை எடுத்தார்கள். இன்னும் இரண்டொரு வாரங்களில் எஸ்.பி.பியும் சரணும் தகரம் கூட தங்கம் தானே பாட வருகிறார்கள். சியாட்டலில் இது போல தமிழ் / தெலுங்கு / ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் அம்முகிறது. காரணத்தை கார் ஒட்டிக் கொண்டே யோசித்துப் பார்த்தால் சற்றே புகை விலகுகிறது.

நேற்று கோவிலில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த இரண்டு மூக்குப்பொடி மாமாக்கள், யேசுதாஸின் கச்சேரியை அலசி ஆராய்ந்தார்கள். காதை கொஞ்சம் அந்த பக்கம் சாய்த்தேன். அவர்கள் கொஞ்சம் கர்னாடகத்தை பற்றி பேசி விட்டு, சென்னை சபா கச்சேரிக்கும் சியாட்டல் கச்சேரிக்கும் ஆறு வித்தியாசம் போட போய் விட்டார்கள். அவர்களின் மருமகள்கள் கச்சேரிக்குப் போனதை ஏதோ சிவாஜி படத்தை பர்ஸ்ட் ஷோ பார்த்த மாதிரி பீலா விட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு ஒரு விதமான artificial expectation கிளம்புவதால், நம்மூர் பட்டு மாமி sistersகள் ஸ்ருதி பெட்டி தம்பூரா சகிதமாக க்ளீவ்லாண்டையும், அட்லாண்டாவையும், பச்சை டாலர்களையும் படை எடுக்கிறார்கள்.

பல desiக்கள், மாதா மாதம் அம்மா அப்பாவுக்கு ஒரு 200 டாலரை money2indiaவில் அனுப்பிவிட்டு, இங்கிருந்தே சென்னை கனவு காண்கிறார்கள். தமக்கும் சென்னைக்குமான gapஐ குறைப்பதாக நினைத்துக் கொண்டு, கச்சேரியை முற்றுகையிட்டு, எல்லா பாட்டுக்கும் ஆதி தாளத்தை தொடை தட்டுகிறார்கள். குழந்தைககு diaper மாற்றி்க் கொண்டே, ஆலாபனைக்கு நடுவில் சபாஷ் போடுகிறார்கள். கர்னாடக சங்கீதம் எங்கோ எஸ்கேப் ஆகிறது.

ஏறக்குறைய சொர்க்கம்

ஒரு வருஷம் இருந்தால் போதும், சியாட்டல் போதும் போதும் என்றாகிவிடும். சென்னையில் மழையே இல்லை என்று சொல்பவர்களில் ஒரு பத்து பேரை சியாட்டல் அனுப்பினால், மவனே !! ஆள விடு என்று ஒடிவந்து விடுவார்கள். ஆனால் மைக்ரோ சாப்டும் மயூரியும், தமிழ் மனங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்ரோ சாப்டில் தமிழ் ஆசாமிகள் அதிகம் போலிருக்கிறது.

மைக்ரோ சாப்ட் பற்றி தெரிந்தவர்களுக்கு, தெரியாத மயூரி பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ. மயூரி ஒரு மளிகை கடை. அவ்வளவேதான். ஆனால் நீங்கள் மயூரி போனீர்களேயானால், அங்கு கேட்கும் டயலாக்குகள் படு சுவாரசியமானவை.

“ஏம்மா நான் வேணும்னா எடுத்து தரட்டுமா” – CPWDல் இருந்து ரிடையர் ஆகி மகள் பிரசவத்திற்காக வந்த அப்பா.

“உளுத்தம் பருப்பு சின்ன பாக்கட் தான் இருக்காம். உங்களுக்கு அது கிடைக்கிற வரைக்கும் இட்லி கெடயாது. சீரியல் தான்” – ஒரு சுடிதார் மாமி, ஜீன்ஸ் மாமாவிடம்.

“ஏங்க உங்க செல்போனை குடுங்க, அர்ச்சனா நம்பரை நோட் பண்ணிக்கலாம்” – போன வாரம் தான் வந்து இறங்கியதால், ஜந்துக்களை போல அமெரிக்காவை பார்க்கும் புதுப் பெண் தீபா.

இப்படியாக எங்கு திரும்பினாலும் தமிழ்.

தமிழ் சங்கத்தில் ஈ ஓட்டுகிறார்கள். மயூரியில் தமிழ் வழிகிறது. ஒன்றிரண்டு ‘ஐ டோண்ணோ தமில் யார்’ தமிழர்கள் ஓப்பன் டாப் பி.எம். டபிள்யு-வில் வந்து பராத்தாவும், தால் மக்னீயும் வாங்கி போவார்கள். அவர்களை லூசில் விட்டு பார்த்தால், தமிழ் வளர்கிறது. Atleast Tamil continues. தமிழ் காதில் கேட்கும் பொழுது குஜால்சாக இருக்கிறது. ஏறக்குறைய சொர்க்கம். ஏறக்குறைய.

%d bloggers like this: