பீப்பிங் டாம்

ஜோடி no. 1

மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் இன்னும் அப்பார்ட்மெண்டாக மாற்றாமல் உள்ள ஓரிரு புராதன வீடுகளில் நண்பன் ஸ்ரீதரின் வீடும் ஓன்று. போன வாரம் போன் செய்த போது, ஸ்ரீதரின் பாட்டி எடுத்தார். அங்கு இரைச்சலாக இருந்ததால் கொஞ்சம் சத்தமாக பேசினேன்.

“பாட்டி, சவுக்கியமா. ஸ்ரீதர் இருக்கானா ?”.
“ம்…….ஸ்ரீதர் கொத்தவரங்கா வாங்க டாங்க் வரைக்கும் போயிருக்கான். தோ வந்துருவான்”.
“ஓ..ஒகே. நோ ப்ராப்ளம். நீங்க எப்…”
விசாரிக்க போன என்னை குறுக்கிட்டு “சத்த நாழி கழிச்சு போன் பண்ணுடா. ஆமான்..நீ ஜோடி no. 1 பாக்கலியா. நல்ல கட்டம் இப்போ”. பதில் எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டார்.

ஜோடி no. 1ஆ ? என்று கொஞ்சம் தலை சொறிந்தேன். அடுத்த நாள் சியாட்டலில் அடித்த புயலில், நகரமே இருட்டில் மூழ்க, ஜோடி no. 1 மறந்து போனது. சாப்பிட சாதமும், குளிக்க வெந்நீரும் இல்லாமல், அந்த கடுங் குளிரில் மூன்று வேளையும் ஹோல் வீட் பிரட்டும், க்ரேப் ஜெல்லியும் மட்டுமே மிஞ்சியது. பக்கத்து நகரத்தில் கரண்ட் இருந்த நண்பர் ஒருவர் போன் செய்து வீட்டுக்கழைக்க, அவர் போனை கீழே வைக்கும் முன்பு, குடும்பத்துடன் ஆஜரானேன்.

The Devil Wears Prada, செம கடியாக இருந்ததால் நண்பர் டீவியை திருப்ப விஜயில் ஜோடி no. 1 என்ற நிகழ்ச்சி கண்ணில் பட்டது. ஸ்ரீதரின் பாட்டி சொன்ன “…நல்ல கட்டம் இப்போ”, ஞாபகம் வந்தது.

ஜோடி no. 1ல் சின்னத்திரை மெகா சீரியல் நடிகமணிகள், நடனமணிகளாகி குத்தாட்டம் போடுகிறார்கள். தமிழ் நாடு குலுங்குகிறது. அழுமூஞ்சி மனைவிகளாகவும், மாற்றான் மனை நோக்கும் கணவன்களாகவும், கோபத் தம்பிகளாகவும், கோள் சொல்லும் அத்தைகளாகவும் சின்ன திரையை ஆக்கிரமித்தவர்கள், வடுமாங்கா ஊருதுங்கோ என்றாட கூட்டம் ஆலாய் பறக்கிறது. அதை தவிர, போட்டியில் பங்கேற்பவர்களின் பேட்டியும், behind the sceneசும் ஒரு தனி ஏபிசோடாகிறது. இந்த behind the scenes ஏபிசோடில் சின்னத்திரை பிரபலங்கள் மச்சான் மச்சான் என்று கிண்டலடித்துக் கொள்கிறார்கள். மற்ற போட்டியாளர்கள் போல மிமிக்ரி செய்து வயிறு வலிக்க சிரிக்கிறார்கள். போட்டியை விடவும் அதை தாண்டிய இந்த மாதிரி விஷயங்களில் தான் வெற்றி ஒளிந்திருக்கிறது.

விஜய் டீவி இது போல competition ஷோக்களை ஹிட்டாக்குவதில் பேர் போனவர்கள். ஸ்டார் டீவி உபயத்தில் நிகழ்ச்சி தயாரிப்பு தரம் உயருகிறது. ஒரு போட்டியையும் ஆங்காங்கே கொஞ்சம் reality டீவி கான்செப்டையும் ஊருகாயாய் சேர்த்தால், ஒரு ஹிட் போட்டி ரெடி. ரியாலிட்டி டீவி கான்செப்ட் எல்லா நாடுகளிலும் மிக மிக பிரபலம். அமெரிக்கன் அய்டலும், இண்டியன் அய்டலும், விஜய் சூப்பர் சிங்கரும், ஜோடி no. 1ம் இந்த மாதிரி ஒரு அரைகுறை ரியாலிட்டி டீவி தான். கூர்ந்து கவனித்தால் மேலும் புரியும்.

ரியாலிட்டி டீவியின் வெற்றிக்கு காரணம் மக்களின் ஒருவித வாயரிசம் தான். அந்த பிரபலங்கள் தங்களுடைய தின வாழ்கையில் எப்படி நடக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று அறியும் ஆர்வம். எல்லோர்க்குள்ளும் ஒரு பீப்பிங் டாம் ஒளிந்திருப்பதால் தான், எத்திராஜில் படிக்கும் ரம்யாவிலிருந்து, முண்டகன்னி அம்மன் கோயில் தெரு் எச்சுமி பாட்டி வரை, ஜோடி போட்டி கட்டிப்போடு்கிறது. இந்த பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கும் வாயரிச சந்தோஷம், மனிதனின் ஆதார குணங்களில் ஓன்று. லஞ்சம் போல. எந்த இந்திய தாத்தா வந்தாலும் அழிக்க முடியாது. வாயரிச கணங்களை குறைக்கலாம். அழிப்பதரிது.

ஏக ஹிட்டானதால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அடுத்து எந்த சூப்பர் ஷோ பண்ணலாம் என்று கணக்கிட்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் டீ டைமிலும், கறிகாய் மார்கெட்டிலும், ஆதிராஜ்-ரக்ஷனாவா / ராகவ்-ப்ரித்தாவா என்று அலசுகிறார்கள். நாட்கள் கழிகின்றன.

புத்தகமும் தமிழும்

குமுதம் டாட்காமில் ரவி பெர்னாட்டின் பேட்டிகளில், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பா ராகவனுடனான பேட்டி ஐந்து பாகங்களாக காணக்கிடைத்தது.

தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்புத் தொழிலின் தற்போதைய போக்கு பற்றி சற்றே அலசினார்கள். ரவி பெர்னாட் கொஞ்சம் குறுக்கிட்டு் அடுத்த கேள்விக்கு தாவாதிருந்தால் இன்னும் பல சுவாரசிய விஷயங்கள் கிடைத்திருக்கும். பா ராகவன் எப்போதும் ஒரு convictionனுடன் பேசுகிறார். தமிழ் புத்தகங்கள் இன்னும் நிறைய விற்கபோகிறது, தமிழ் புத்தக நேர்த்தி அதிகமாகியுள்ளது, அ-புனைவுகளை[non-fiction] மக்கள் விரும்புகிறார்கள் போன்ற சில முக்கிய குறிப்புகள் பேசப்பட்டன.

என்னுடய take-aways இரண்டு, தமிழில் குழந்தை புத்தகங்கள் விற்க கிழக்கு படிப்பகத்தில் ஒரு கிளை பிரிவு உருவாக்கப்படுகிறது. தமிழ் content, புத்தகங்கள் தவிர இனி மற்ற மீடியா முலமாகவும் வெளிவர உள்ளது.

நல்ல பேட்டி, கெட்ட கத்திரி.

கட்டிப்புடி வைத்தியம்

free hugs campaign
#

வசூல்ராஜாவில் கமலின் அம்மாவாக நடித்த ரோஹினி ஹத்தங்காடி, கமலுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டிப்புடி வைத்தியம், உலக பிரபலமாகியிருக்கிறது.

இரு வருடங்களாக சிட்னி் கடைத்தெருவில், யுவான் மான்[Juan Mann] என்னும் இளைஞர், வாரம் ஒரு நாள் முழுவதும், free hugs என்றெழுதிய ஒரு போர்டை பிடித்துக் கொண்டு, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கட்டிப்புடி வைத்தியம் செய்கிறார். கட்டிப்புடி வைத்தியம் கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு சின்ன ஹக் தான்.

இந்த free hugs campaignனுக்கு யுவானின் காரணம்- என்ன தான் social communities, world is a small village என்று ஜல்லியடித்தாலும், மனிதர்கள் தனிமைப்பட்டுக் கிடக்கும் இந்த சமுதாயத்தில், எல்லோராலும் ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்த முடியும் என்னும் மனிதம் தான். ரோட்டில் செல்லும் ஏதோ ஒரு அன்னியனுக்கு கிடைக்கும் அந்த ஒரு நிமிட அணைப்பினால், வாழ்க்கையின் மீது சின்ன hope எற்படுமேயானால், free hugsக்கு கிடைத்த வெற்றியாகும்.

Sick Puppies என்னும் ஆஸ்திரேலிய டீனேஜ் ராக் பாண்ட், ப்ரி ஹக்ஸுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து ஆச்சரியப்பட்டு , ஒரு மெட்டிசைத்து, யுவானை வைத்து ஒரு மியுஸிக் விடியோ செய்தார்கள். You Tubeல், செப்டம்பர் 22, 2006 ரிலீஸ் செய்யப்பட்ட அந்த விடியோ ஆறு நாட்களில் பத்து லட்சம் முறை பார்க்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததை, வரலாறு சொல்லும்.

ஓவ்வொரு நாட்டிலும், Free Hugs Campaign ஒரு மக்கள் இயக்கமாக ஆரம்பமானது. Sick Puppies பாண்ட் பிரபலமாகி, இப்போது லாஸ் ஏஞ்சலஸில் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இதை ஆரம்பித்து வைத்த யுவான், ஓப்ரா ஷோவில் கட்டிபுடி வைத்தியத்தை புட்டு புட்டு வைக்கிறார்.

ஒரு மாதத்திற்க முன்பு சென்றிருந்த Salmon Days Festivalலில் நான்கைந்து காத்திக் யுவ யுவதிகள், free hugs போர்டை பிடித்து கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். நானும் இது ஏதொ myspace மேட்டர் போலிருக்கிறது என்று கட்டிப்புடிக்காமல் வந்து விட்டேன். இப்போது படித்தவுடன் தான் அவர்களின் நல்லெண்ணம் புரிகிறது.

நம்மூரில் இது ஒத்துக் கொள்வார்களா என்று சொல்வதற்கில்லை. சுற்றுலா செல்லும் மாமு, மச்சிகள் free hugs மேட்டரை நகரத்திலேயே விட்டுச் செல்வாராயின், நலம். முறுக்கு மீசை பிரகாஷ் ராஜ் மாமன்கள், அவர்களது திருப்பாச்சிகளுடன் free hugsக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.